Sunday, September 22, 2019

பதினெட்டாம் நாளின் வாசிப்பனுபவம் (19.09.2019)


அழகியசிங்கர்




கடந்த இரண்டு நாட்களாக நான் எந்தப் புத்தகத்தையும் படிக்க வில்லை. தினமும் புத்தகத்தைப் படித்துவிட்டு அதைப்பற்றிக் குறிப்புகளை வெளியிட்டுக்கொண்டிருந்த எனக்கு, புத்தகமே படிக்க முடியவில்லை.  சனிக்கிழமை முழுவதும் என் பரபரப்பு அடங்கவில்லை.  புத்தகத்தைத் தொட முடியவில்லை.  ஒரு புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டு படிக்க ஆரம்பித்தேன்.  ஆனால் முழுவதும் கவனத்தைச் செலுத்த முடியவில்லை.  அன்று மாலை விருட்சம் இலக்கியச் சந்திப்பின் 50வது கூட்டம். 
அடுத்த நான் ஞாயிற்றுக்கிழமை.  அன்றும் என்னால் புத்தகம் படிக்க முடியவில்லை.   வீட்டில் விருந்தினர்கள் வருகை.  அன்றும் என்னால் படிக்க முடியவில்லை.  தெளிவான மனநிலையில்தான் ஒரு புத்தகத்தைப் படிக்க முடியும் என்று தோன்றியது.  
ஒருவழியாக ஒரு புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டு முழுவதும் படித்து முடித்தேன்.  இதோ நான்கு மணி வரை அந்தப் புத்தகத்தைப் பற்றி எதுவும் எழுத முடியவில்லை.  
கூடவே நான் கொஞ்சம் கொஞ்சமாக அதிகப் பக்கங்கள் உள்ள புத்தகங்களையும் படித்துக்கொண்டு வருகிறேன்.  எல்லாம் நத்தை வேகத்தில்.  
இப்போது நான் எடுத்துக்கொண்டு பேசப்போகிற புத்தகம் üகடலும் கிழவனும்ý என்ற எர்னஸ்ட் ஹெமிங்வே எழுதிய புத்தகம்.  இந்தப் புத்தகத்திற்காக ஹெமிங்வேவிற்கு நோபல் பரிசு கிடைத்துள்ளது.   இதைத் தமிழில் மொழி பெயர்த்தவர் ச சு சு யோகியார். 
தன்னுடைய சின்னஞ்சிறு படகில் தன்னந்தியாகஅவ்வளை குடாவில் மீன் பிடிப்பவன் ஒரு கிழவன்.  எண்பத்து நான்கு நாட்களாக அவனுக்கு ஒரு மீன் கூடக் கிடைக்கவில்லை. முதல் 40 நாட்களாக அவன் கூட ஒரு பையன் இருந்தான்.  கிழவனுக்கு அதிர்ஷ்டம் இல்லை என்று கூறி அந்தப் பையனை வேற ஒரு படகிற்கு அனுப்பி விட்டனர் அவன் பெற்றோர்கள்.  
ஒவ்வொரு நாளும் கிழவன் மீன் கிடைக்காமல் சோர்வோடு வருவான்.  அதைப் பார்த்த பையன் அவனுக்கு உதவியாய் மீன் குத்தி ஈட்டியையும், கயிற்றுப் புரிகளையும், பாய் மரப் படுதாவையும்  சுமந்து வருவான்.  ஒட்டுத் தையல்கள் போட்ட மரக்கோணிச் சாக்குகளைப் பார்க்கும்போது பாரிதாபமகத் தோற்றம் தரும் என்று வர்ணிக்கிறார் ஆசிரியர்.
பையனுக்குக் கிழவனிடம் அலாதியானதொரு பிரியம்.  ஏன் எனில் அவனுக்கு மீன் பிடிக்கக் கற்றுக் கொடுத்ததே அந்தக் கிழவன்தான்.  
உண்மையில் பெரிய மீன்களைப் பிடிக்கச் சக்தி இருக்கிறதா? என்று கிழவனைப் பார்த்து பையன் கேள்வி கேட்கிறான்.  
அப்படித்தான் நினைக்கிறேன்.  மீன் பிடிப்பதில் எத்தனையோ தந்திரங்கள் உண்டு என்கிறான் கிழவன்.
கிழவனுக்கும் பையனுக்கு நடக்கும் உரையாடலைப் படிக்கும்போது  கிழவனுடன் தன்னை விடப் பலமடங்கு வயதில் பெரியவனுடன் பேசுகிறோம் என்று பேசுவதில்லை. நீ நான் என்பதைப்போல் பேசுகிறான்.  
ச து சு யோகியார் மொழிபெயர்க்கும்போது எனக்குப் பெரிய குறையாகத்தான் படுகிறது. 
இந்த நாவலைப் படிக்கும்போது நானே கடலுக்குப் போனதுபோல் ஒர் உணர்வு ஏற்பட்டது.  
85வது நாள் மீன் பிடிக்கப் போகிறான் கிழவன்.  அது ஒரு அதிர்ஷ்டமான நாள் என்கிறான்.  ஒரு லாட்டிரி சீட்டு வாங்கினால் அதிர்ஷ்டம் அடிக்கும் என்கிறான் கிழவன் பையனிடம்.  ஆனால் அது வாங்க இரண்டரை டாலர்கள் பணம் வேண்டும்.  ஆனால் இல்லை.
இந்தக் கதை ஒன்று கிழவன் தனக்குதானே பேசுகிறான்.  இன்னொன்று அவன் சிறுவனுடன் பேசுகிறான்.  உரையாடல் மூலமாகவே கதை வெகுவாக நகர்கிறது.  ஒரு இடத்தில் கிழவன் இப்படிக் கூறுகிறான்.
"வயதே என் அலாரம் கடிகாரம்.  கிழவர்கள் ஏன் சீக்கிரம் எழுந்திருக்கிறார்கள் தெரியுமா?  உள்ள கொஞ்ச நாட்களாவது நீண்ட நாட்களாக இருக்கட்டுமே என்றுதான்," என்கிறான் கிழவன்.
கிழவன் பையனோடு பேசும்போது பேஸ் பால் விளையாட்டைப் பற்றி அடிக்கடி பையனிடம் பேசுகிறான்.  பையனுக்கு அந்த விளையாட்டின் மீது தீவிர காதல்.
பலவகைப்பட்ட மீன்களைப் பற்றிய குறிப்புகள் இப் புத்தகத்தில் வெளிப்படுத்தப் படுகின்றன.  கிழவனுக்கு கடல் எப்போதுமே ஒரு கன்னிகைதான்.  காதலிப்பவர்களுக்கு அது பெரிய வரங்களைத் தரும், அல்லது மறுக்கும்.
கிழவன் தன்னந்தனியாக கடலில் மீன் பிடிக்கச் செல்லும்போது தனக்குதானே பேசிக்கொண்டு செல்கிறான்.   சிலசமயம், கடற் பன்றி பெரிய கடற்பன்றி என்று கத்தவும் செய்கிறான்.
கிழவன் எதிர்பாராதவிதமாய் ஒரு பெரிய மின் மாட்டிக்கொண்டு விடுகிறது.  அதை அசையாமல் கவனிக்கிறான் கிழவன்.  அது தப்ப வேண்டுமென்றால் படகையே கவிழ்த்துவிடும் என்று நினைக்கிறான் கிழவன். இந்தத் தருணத்தில் பையன் தன் அருகில் இல்லையே என்ற வருத்தம் மேலோங்குகிறது. 
அந்த மீன் ஒரு முறை சுண்டி இழுத்த இழுப்பில் கிழவன் குப்புற விழுந்துவிட்ôன்.  கண்ணுக்கடியில் ஒரு கீற்றுக் காயம்.  கன்னத்தில் ரத்தம் வழிந்தது.  அது எவ்வளவு பெரிய மீனாக இருந்தாலும் சரி, முடிவில்லாமல் இப்படகை இழுத்துக்கொண்டு போக முடியாது என்று நினைக்கிறான். 
வடக்கிலிருந்து ஒரு சிறிய பாடும் பறவை படகை நோக்கிப் பறந்து வந்தது.  அது படகின் முன்புற விளிம்பில் உட்கார்ந்தது.  அப்புறம் கிழவன் தலைக்கு மேல் சுற்றிச்சுற்றி வந்தது.  பின் தூண்டிற் கயிற்றின் மேல தங்கியது. 
கிழவன் அதைப் பார்த்து கேட்கிறான் : "உன் வயதென்ன? நீ முதல் முதலாகக் கடலின் மேல் பறப்பதா?" 
கிழவன் எத்தனையோ பெரிய மீன்களைப் பார்த்திருக்கிறான்.  ஆயிரம் பவுண்டு எடையுள்ள மீன்களையும் கண்டிருக்கிறான்.  இரண்டைப் பிடித்துமிருக்கிறான்.  ஆனால் தனியாயல்ல.  இப்போது தனியாக மாட்டிக்கொண்டு விட்டேன்.  அதுவும் கடல் நடுவில் கண்டும் கேட்டிமிராத மகாப் பெரிய மீனோடு தன்னந்தனியாகப் போராடுகிறான்.
கருணை நிறைந்த கன்னியம்மனை வணங்குகிறான்.  புனிதக் கன்னியே இந்த மீன் சாக வரம் கொடு - அதிசயமான மீனானாலும் இது சாககத்தான் வேண்டும் என்று வணங்குகிறான்.
"நானோ ஓய்ந்துபோன ஒரு கிழவன்.  இருந்தாலும், என் சகோதரனான இந்தப் பெரிய மீனைக் கொன்றுவிட்டேன்.  இனி சதி வேலையைச் செய்தாக வேண்டும்," என்று கிழவன் சத்தமாகச் சொல்கிறான். 
இன்னொரு இடத்தில், கிழவன் கூறுகிறான் : இப்போதோ நானும் மீனும் சரிநிகர் சமானமாகப் பக்கம் பக்கமாய் நீந்திச் செல்கிறோம்.  வேண்டுமானால் அதுவே என்னைக் கரைக்கு அழைத்துச் செல்லட்டும்.  பாவம். அது எனக்கு யாதொரு கெடுதியும் செய்யவில்லை.  எனக்கும் அதற்கும் வித்தியாசமென்ன - நான் அதைவிடத் தந்திரசாலி - அவ்வளவுதானே?
பெரிய மீனின் புண்ணிலிருந்து ரத்தம் வழிகிறது.  அதை மோப்பம் பிடித்து சுறாக்கள் தாக்க வருகின்றன.  அதையும் எதிர்கொள்கிறான் கிழவன்.  
இன்னொரு இடத்தில் கிழவன் இப்படி கூறுகிறான்:  üஅந்த மீனைக் கொன்றது பாவமாயிருக்கலாம்.  என் உணவுக்கும், பிறபலர் உணவுக்குமாகத்தான் அதைக் கொன்றேன் என்றாலும் அவ்வாறு கொன்றதென்னமோ பாவந்தான்.ý
தன்னிலை விளக்கமாக இவ்வாறும் கூறுகிறான் : நீ ஒரு வலைஞன்.  உன் தற்பெருமைக்காகவே அதைக் கொன்றாய்.  உயிரோடிருந்தது போதும், இறந்தபிறகும் கூட நீ அம்மீனை அன்புடன் பாராட்டினாய்.  அன்பு கொண்ட ஒன்றைக் கொல்வது பாவமல்ல, அல்லது லாபந்தானா? என்று.
அவன் கரைக்கு வரும்போது, அவன் எடுத்துக்கொண்டு வந்த பெரிய மீன் பாதியாகத்தான் இருக்கிறது.  மற்ற சுரா மீன்கள் அதைக் கொத்தி தின்று விடுகிறது.  திரும்பத் திரும்ப கொத்துகிறது.  
இறுதியில் படகின் முன்புறம் தூக்கிய வாலோடு அம்மீன் கூடு வீதி விளக்கின் வெளிச்சத்தில் நன்கு தெரிந்தது.  அதன் வெளுத்த நீண்ட முதுகெலும்பையும். சரியா குத்தீட்டிக் கொண்டைத் தலையையும் இடையிலுள்ள வெறுமையும் கண்டான். என்கிறார். 
கிழவன் நீண்ட நேரம் தூங்கி எழுந்தபின், üஅவை என்னை முறியடித்துவிட்டன என்கிறான்.  
கிழவன் திரும்பவும் அவன் குடிசையில் தூக்கத்தில் ஆழ்ந்திருந்தான்.  பக்கத்தில் பையன் அவனைக் கண்காணித்தவாறே உட்கார்ந்திருந்தான்.  கிழவனது தூக்கம் சிங்ககங்களைப் பற்றி கனவுகளால் நிரம்பி இருந்தது என்று கதையை முடிக்கிறார் எர்னஸ்ட் ஹெமிங்வே.
பெரிய மீனைப் பிடித்த கிழவனுக்கு இது வெற்றியா தோல்வியா என்று தெரியவில்லை.  ஏன்என்றால் அந்தப் பெரிய மீனû மற்ற மீன்கள் தங்கள் உணவாக சாப்பிட்டு விடுகின்றன.  வெறும் எலும்புக்கூடுதான் மிச்சமிருக்கிறது. 
 


Friday, September 20, 2019

பதினேழாம் நாளின் வாசிப்பனுபவம் (18.09.2019)

அழகியசிங்கர்





இந்த முறை நான் எடுத்துக்கொண்ட புத்தகம் நாரணோ ஜெயராமனின் கவிதைகள் புத்தகம்.  வேலி மீறிய கிளை என்ற பெயரில் ஏற்கனவே அவருடைய கவிதைகள் தொகுதி க்ரியா பதிப்பகம் மூலம் வெளிவந்துள்ளது.  வெளிவந்த ஆண்டு நவம்பர் 1976. 
அதன்பின் அவர் கவிதைகள் எழுதி பத்திரிகைக்கு அனுப்பவே இல்லை.  விருட்சம் முதல் இதழில் அவர் கவிதைகள் இரண்டு வந்திருக்கும்.  
அவர் இலக்கியத்தை விட்டே ஒதுங்கி விட்டார்.  1972-76 வரை அவர் சிறுகதைகள், கவிதைகள் எழுதிக் கொண்டிருந்தவர்.  அவர் எழுதாமல் போனதற்குக் காரணம் ஜே கிருஷ்ணமூர்த்தி.
அவர் தன்னைப் பற்றி வாழ்க்கைக் குறிப்பு எழுதியிருக்கிறார். அதில் பின் வருமாறு குறிப்பிடுகிறார்.
'எனக்கு வாழ்க்கைதான் ஆசான்.  விரக்தி, பரவசம், விசாரமென வாழ்க்கை அனுபவங்கள் ஞானத்திற்கு ஏற்றிச் சொல்கின்றன.' 
ஆதர்ச புருஷர்கள் காஞ்சி மாமுனிவர், சிந்தனையாளர் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி என்று குறிப்பிடுகிறார்.  'என்னால் பூமியில் காலூன்றி வானத்தில் சிறகடிக்க முடிகிறது என்றால் தத்துவஞானி கிருஷ்ணமூர்த்தியுடன் சில ஆண்டுகள் உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் பயணித்ததுதான்,' என்கிறார்.
பிரமிள் இவருடைய முதல் கவிதைத் தொகுப்பான வேலி மீறிய கிளைக்கு முன்னுரை எழுதி உள்ளார். எனக்கு பிரமிளின் முன்னுரை அன்றும் புரியவில்லை, இன்றும் புரியவில்லை. ஒரு இடத்தில் இப்படிக் குறிப்பிடுகிறார் : üவாழ்வின் அவலமாகத் தென்படுகிறவற்றிலே கூட, இங்கே ஏற்கனவே விவரித்த வைதீகமான  பாப்புலர் தர்மா வேசங்களுக்கு எட்டாதவற்றை அனுபவித்துக் கனலும் சாந்த புஷ்டி நா.ஜெயராமனின் தர்சனம்.ý என்கிறார் பிரமிள்.
எஸ் வைதீஸ்வரனும் முன்னுரை எழுதியிருக்கிறார்.  அவர் இப்படி குறிப்பிடுகிறார்.  üஇவருடைய கேள்விகள் பிரபஞ்சபூர்வமானவை.  நிரந்தரமானவை.  எப்போதும் புதுமை குறையாததாக வாசிக்கும் சீரிய உள்ளத்தை எப்போதும் பல வினோதமான, விபரீதமான திசைகளில் சித்திக்கத் தூண்டுபவை.  தட்சிணாமூர்த்தியின் மௌனம் போல்.ý 
இரண்டு முன்னுரைகளும் குழப்பமானவையாகத் தோன்றுகிறது.  
நாராணோ ஜெயரமான் கவிதைகளை ஆராயும்போது 1972-1976 வரையுள்ள கவிதைகள் என்றும் அதன் பின்னால் 2011லிருந்து 2018 வரை உள்ள கவிதைகள் என்றும் இரண்டு பிரிவுகளில் கொண்டு வரலாமென்று தோன்றுகிறது. 
ஆரம்பக் கால கவிதைகளில் எது எது என் மனதிற்கு ஏற்ற கவிதைகள் என்று ஒரு லிஸ்ட் கொடுக்க விரும்புகிறேன்.  1. அமிழ்தல் 2.நிலை 3. வானளாவி நின்று 4. நாய்களுக்கு 5. இரட்டை 5. அளவு 6. போக்கிடம் 7. முழுமை 8. சஞ்சாரம் 9. ஆறாவது அறிவு 10. தரிசனம் 11. பிணைப்பு 12. காட்சிப்பொருள் 13. கூர்க்காவை முன்வைத்து சில யோசனைகள் 14. பழித்தல1வ் 15. தவம் 16. அடையாளங்கள் 17. வாத்துக்கூட்டம் 18. அநாதார ஜீவி 19. வாசற்குறட்டில் 20. கடிகாரத்தை முன்வைத்து காலத்திற்குச் சொன்னவை 21. இன்று காலை கண்டவை 22. லெவல் கிராஸிங் 23. இங்கே, இப்போதே 24. உயிர் 25. பிரதிஷ்டை 26. சுயம் 27. ஸ்தாபித்தல் 28. கடல் 29. அரசியல் கூடுகள் 
மேலே குறிப்பிட்ட கவிதைகள் 1972-76வரை எழுதியவை.  இக் கவிதைகளைப் படிக்கும்போது நாராணே ஜெயராமன் ஒரு பிரபஞ்ச கவிஞராக எனக்குப் படுகிறார்.  
உதாரணத்திற்கு ஒரு கவிதையை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
உயிர் 
சுற்றிலும் 
இல்லாமை பிரலாபம் 
ஓட்டைக் கதவுக்கு கனத்த பூட்டுகள்

சாக்கடை யோரத்தில்
கந்தலில்
சிசுக்கள் நிலா கண்டு சிரித்து
மல்லாந்து கிடக்கும்

என்னுடைய கேள்வி ஏன் நா ஜெயராமன் தொடர்ந்து எழுதவில்லை என்பதுதான்.  பல கவிதைகளைப் படிக்கும்போது பளீர் பளீரென்று வரிகள் வாசிப்பவனைத் தாக்குகின்றன.
2011லிருந்து 2018 வரையுள்ள கவிதைகளில் பழைய நாராணோ ஜெயராமனைப் பார்க்க முடியவில்லை.  முழுவதும் மாறி விடுகிறார்.
வித்தியாசமான பார்வை கொண்டவராக இருக்கிறார். 
நேரிடையாகவே பக்தி மார்க்கத்தில் கவிதை எழுதியிருக்கிறார். உதாரணத்திற்கு üகாஞ்சி மாமுனியே போற்றி கலம் கரை சேர..ü என்ற தலைப்பில் கவிதை எழுதியிருக்கிறார்.  
வயோதிகம் கூடி விட்டதால் மரணத்தைப் பற்றி கவிதைகள் எழுதி உள்ளார்.  நெருங்கிய உறவினர் மரணம் அவரைப் பாடாதபாடு படுத்துகிறது.  
ஆராயப் புகுமின் என்ற கவிதையில் 
இருந்ததை
இருப்பதை
இருக்கப் போவதை
தேடியலைந்து
புதிதாய் அறிவதாய்
கூறுவதாய் கொண்டால்
இல்லாததென 
ஏதேனுமுண்டா?  என்கிறார்.  எது முதல் வாதம் என்ற கவிதையில் 
நான்
உள்ளும் பார்க்கிறேன்
புறமும் பார்க்கிறேன்
நீ 
எந்த அடையாள வில்லை
வேண்டுமானாலும்
ஒட்டிக்கொள் 
என்கிறார்.  மரணம் இவரைச் சங்கடப் படுத்துகிறது.  கருந்தீண்டல் என்ற கவிதை.
மைத்துனன் இறந்தான்
போகிற வயசில்லை
உணர்ச்சியின் உச்சகட்டத்தில்
கண்ணீரில் களந்து விழுந்த சொற்கள்
üஇதென்ன மாயமா இருக்கு?
பொய்யாயிடுத்தே!
இருக்காமாதிரி இருக்கானே பாவி!ý

இல்லாள் பற்றி ஒரு காதல் கவிதை எழுதியிருக்கிறார்.
நொடிப்பொழுதில்
சிட்டுக்குருவியாய்
எங்கேனும் காரியமயமாய்
வேளாவேளைக்கு
அன்னபுரணியாய்
ஏகாந்தத்தில் சலனப்பொழுதுகளில்
ஆன்மா விகசிக்கும் மாயையாய்
அவ்வையாய் நரைதிரண்டபோதும்
அழகியாய்
நுகத்தடி பந்தத்தில்
ஒரு இனிய பசு. 
இந்தப் புத்தகம் விலை ரூ.200.  ஒருவர் வாங்கிப் படிக்க வேண்டியது அவசியம்.  டிஸ்கவரி புக் பேலஸ் புத்தகத்தைக் கொண்டு வந்துள்ளார்கள். 



Thursday, September 19, 2019

பதினாறாம் நாளின் வாசிப்பனுபவம் (17.09.2019)


அழகியசிங்கர்






இன்று நான் எடுத்துக்கொண்டு எழுதப்போகிற எழுத்தாளரைப் பற்றி பலர் பேசி விட்டார்கள்.  இதில் நான் என்ன புதுமையாக சொல்ல முடியுமென்று தோன்றவில்லை.  ஆனால் என்னிடம் தெளிவாக ஒரு விஷயம் தோன்றிவிட்டது.  நான் படிக்கிற புத்தகத்தைப் பற்றி எதாவது எழுதுவது என்பது.  
சில புத்தகங்களை நான் முழுவதுமாகப் படிக்க முடியவில்லை.  சில புத்தகங்களை üதம்ý பிடித்துப் படித்து விடுகிறேன்.  நான் அப்படிப் படித்தப் புத்தகம்தான் நகுலனின் 'இவர்கள்.'  அதேபோல் இன்னொரு நாவலை எடுத்து வைத்துக்கொண்டு படிக்க வேண்டுமென்று நினைத்தேன்.  நினைத்தபடியே படித்து முடித்து விட்டேன்.  
அவ்வளவு எளிதாக என்னால் படித்து முடிக்கமுடியாத புத்தகங்கள் அதிகமாக உள்ளன.  எல்லாம் ஆயிரம் பக்கங்களுக்குக் குறையாமல் இருக்கும்.  எல்லாம் நாவல்கள்.  முழுவதும் படித்து முடித்தால்தான் எதையாவது அந்த நாவûப் பற்றி சொல்ல முடியும்.
தினமும் எதாவது ஒரு புத்தகத்தைப் படித்துவிட்டு எதையாவது எழுத வேண்டுமென்ற கெட்ட வழக்கத்தை வைத்திருக்கிறேன். முதலில் 50 நாட்களுக்குத்தான் இது.  இது எப்படிப் போகிறது என்று பார்க்க வேண்டும்.  அதன் பின் தொடர முடியுமா தொடர முடியாதா என்று சோதித்துப் பார்த்துக்கொள்ளலாம் என்று தோன்றுகிறது.
நான் இன்று எடுத்துக்கொண்டு படித்த நாவல் அசோகமித்திரனின் தண்ணீர்.   நற்றிணை வெளியிட்டுள்ள இந்த நாவலில் ந முத்துசாமியின் தண்ணீர் என்ற நாவலைப் பற்றி எழுதியுள்ள நீண்ட கட்டுரை உள்ளது.  அதில் ந முத்துசாமி üதண்ணீர்ý என்ற நாவல் தமிழில் குறிப்பிடப்பட்டிருக்கும் முதல் குறியீட்டு நாவல் என்று குறிப்பிடுகிறார்.  ஏன் அப்படி சொல்கிறார் என்று நான் யோசித்துக்கொண்டிருக்கிறேன்.  
வண்ணநிலவன் பின் அட்டையில் இப்படி கூறுகிறார் : üஅசோகமித்திரனின் 18வது அட்சக்கோடுதான் அவரது சிறந்த நாவல் என்பார்கள்.  ஆனால் என்னைப் பொறுத்தவரை அவரது கரைந்த நிழல்களும் தண்ணீரும்தான் அவரது ஒப்பற்ற, ஏன், நவீனத் தமிழ் இலக்கியத்திலேயே ஒப்பற்ற அமர சிருஷ்டிகள் என்பேன்.ý என்கிறார்.
அசோகமித்திரனின் எல்லா எழுத்துக்களும் அவர் சூட்சுமமான எழுத்தாளர் என்பதை அறிந்து கொள்ளலாம்.  சிறுகதை ஆகட்டும், கட்டுரை ஆகட்டும், நாவல்கள் ஆகட்டும், குரலே உயர்த்தாமல் ஒருவித அழுத்தத்தை வாசிப்பவரிடம் உருவாக்கி விடுவார்.  அவருடைய எழுத்துக்களை வாசிப்பவர்கள் திரும்ப திரும்ப அவருடைய எழுத்துக்களையே யோசிக்க வைத்து விடுவார்.
யமுனா, சாயா என்ற இரண்டு பெண்மணிகள். இருவரும் சகோதரிகள். யமுனா வயதில் மூத்தவள்.  சாயா படித்தவள். திருமணம் ஆனவள்.  மிலிட்டரியில் அவள் கணவன் பணிபுரிகிறான்.  எப்போது சென்னைக்கு மாற்றல் வாங்கிக்கொண்டு வரப்போகிறான் என்ற ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறாள் சாயா.  முரளி என்ற ஆண்குழந்தை.  ஆனால் அவளுடன் வளரவில்லை.  சென்னையில் ஒரு ஒண்டு குடுத்தனத்தில் வசிக்கிறார்கள்.  எவ்வளவு இடர்பாடுகள் இருக்குமோ அவ்வளவு இடர்பாடுகளுடன்.   அவர்கள் குடியிருக்கும் பகுதியில் 24 மணி நேரமும் தண்ணீர்தான். 
பாஸ்கர் ராவ் என்ற கயவன் யமுனாவிற்கு சினிமா ஆசையைக் காட்டி தன் இச்சைக்குப் பயன்படுத்துகிறான்.  அவன் ஒருமுறை ஜமுனாவை அழைத்துக்கொண்டு போக வருகிறான்.  சாயா அவனைப் பார்த்தாலே பிடிக்கவில்லை.  யமுனாவின் பலவீனத்தைப் பார்த்து அவளுடன் சேர்ந்து இருக்க வேண்டாமென்று போய்விடுகிறாள்.
யமுனா பாஸ்கர் ராவ்வின் பலவீனத்திற்கு உடன்படுகிறாள்.  அங்கே ஒரு காட்சியை அவோகமித்திரன் விவரிக்கிறார் : 'தினமும் அவனால் இழுத்துப் போகப்பட்டு யார் யாரோ பெயர் ஊர் பாஷை தெரியாதவர்களுடன் சேர்ந்து உட்கார்ந்து குடித்துவிட்டு இரவெல்லாம் இருட்டிலும் விளக்கு வெளிச்சத்திலும் கிக்கிக்கி என்று வாய்விட்டு இளித்துச் சிரித்துக்கொண்டே காலம் கழிக்க வேண்டுமா? அவர்கள் சாராயத்தைத் தரும்போது அந்த தம்ளரைப் பிடுங்கிச் சாராயத்தை அவர்கள் மீதே ஏன் கொட்டி விட முடியவில்லை.'
பாஸ்கர் ராவ் படம் எடுப்பதற்கு பணம் போடுபவர்களை வரவழைக்கிறான்.  இரண்டு இரண்டு பேர்களாக வருவார்கள்.  அவர்கள் முன் யமுனா படும்பாடை இப்படி சொல்கிறார் :
'இரு நெல்லூர் தடியர்கள் ஜமுனாவை துணியை அவிழ்த்து அந்த ஓட்டல்  அறையில் ஓட வைத்து வேடிக்கை பார்த்தார்கள்.'  இந்தக் காட்சியைக் கற்பனை செய்ய முடியவில்லை.  சாயா யமுனா விட்டுப் போய்விடுகிறாள். ஹாஸ்டலுக்கு.  இந்த சம்பவத்திற்குப் பிறகு யமுனா தற்கொலை செய்துகொள்ள முயல்கிறாள்.  ஆனால் அந்தத் தருணத்தில் வீட்டுக்காரி பார்த்துவிடுவாள்.  கத்து கத்தென்று கத்துவாள்.  வீட்டைவிட்டு காலி பண்ணச்சொல்லி ரகளை பண்ணுகிறாள். 
யமுனாவை ஆறுதல் படுத்த இரண்டு மூன்று வீடுகள் முன்னால் டீச்சர் ஒருவர் வசிக்கிறார்.  அவருடைய கதையை அசோகமித்திரன் விவரிக்கிறார்.  அது இன்னுமொரு சோகக் கதை.  டீச்சர் யமுனாவிடம் தன் சோகத்தை விவரிக்கிறார். 
யமுனாவிடம் டீச்சர் கொல்கிறார் : üஎன்ன ஆயிடுத்து அப்படி உனக்கு? உன்னோட தொல்லையெல்லாம் உன் தலைக்குள்ளேதானிருக்கு.  உன் கண்ணுக்குள்ளேயிருக்கு.ý
அம்மா படுத்தப்படுக்கையாக இருக்கிறாள்.  மாமா வீட்டில் இருக்கிறாள்.  மாமா அம்மா நிலமையைச் சொல்லி யமுனாவையும் சாயாவையும் வந்து பார்க்கச் சொல்கிறார்.  அம்மாவைப் பார்க்க இருவரும் கிளம்புகிறார்கள்.  சாயாவை திரும்பவும் பார்க்கும்போது தன்னுடன் வந்து இருக்கும்படி கெஞ்சுகிறாள் யமுனா.  அம்மாவை சரியாக கவனித்துக்கொள்ளவில்லை.  ஆனால் அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.  சாயாவின் வாரிசு முரளி அங்கேதான இருலுக்கிறான்.  
அடுத்த முறை சாயா யமுனா இருக்கிற இடத்திற்கு பாஸ்கர் ராவ் வருகிறான்.  அவளுக்கு சினிமாவில் நடிப்பதற்கு சைட் ஹீரோயின் கொடுப்பதாக சொல்கிறான்.  யமனா வேண்டாமென்று சொல்லி விடுகிறாள்.  அதற்கு அவள் சொன்ன காரணம்.  அவனுடைய குழந்தையை சுமக்கிறாள்.  மூன்று மாதம் என்கிறாள்.  சாயாவுக்கு பெரிய அதிர்ச்ரி.  பாஸ்கர் ராவிற்கு நம்ப முடியாமல் இருக்கிறது. 
இந்த அதிர்ச்சியை யமுனா சாதாரணமாக எடுத்துக்கொண்டு விடுகிறாள். üஇப்படி சகதியிலே மாட்டிண்டே அக்கா,ý என்கிறாள் சாயா.
'எப்பவோ நடக்கப் போறதுக்கு ஏன் இப்பலேருந்தே கவலைப்பட்டுண்டு இருக்கணும்?'  என்கிறாள் யமுனா. 
இந்த நாவல் முழுவதும் தண்ணீருக்காக இரவு பகலாக அந்தப் பகுதியில் வசிப்பவர்கள் படுகிறபாடை விவிரிக்கிறது. 
 
  

Wednesday, September 18, 2019

பதினைந்தாம் நாளின் வாசிப்பனுபவம் (16.09.2019)

பதினைந்தாம் நாளின் வாசிப்பனுபவம் (16.09.2019)



அழகியசிங்கர்



எந்தச் சமயத்தில் எந்தப் புத்தகம் படிக்க வேண்டுமென்ற குழப்பம் என்னுள் இருந்துகொண்டே இருக்கும்.  ஒரு மணி நேரத்தில் பெரும்பாலும் ஒரு புத்தகத்தை என்னால் படித்து முடிக்க முடியாது.  ஆனாலும் படித்தவரை அந்தப் புத்தகத்தைப் பற்றிச் சொல்வது தீர்மானம் செய்துள்ளேன்.
இன்று நான் படித்த புத்தகம் ஜென் சதை ஜென் எலும்புகள் என்ற புத்தகம்.  பால் ரெப்ஸ், நியோஜென் சென்ஸகி எழுதிய ஆங்கிலப் புத்தகத்தின் தமிழாக்கம். தமிழில் சேஷையா ரவி செய்திருக்கிறார்.  மீள்பார்வை ஆர் சிவக்குமார்.  அடையாளம் வெளியீடாக இந்தப் புத்தகம் வந்திருக்கிறது.
ஒவ்வொருவரும் கட்டாயம் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டிய புத்தகம்.  ஜென் என்பது ஓர் அனுபவம்.  கிட்டத்தட்ட 101 கதைகள் மொழிபெயர்த்துள்ளார்கள்.  இதைத் தவிர வாசலற்ற வாசல் என்ற தலைப்பில் சில தத்துவங்கள். பின் மையப்படுத்துதல் என்ற தலைப்பில் இறுதியில் ஜென் என்பது என்ன என்ற ஒரு பக்கத்தில் விளக்கம்.  இத்தனையும் இந்தப் புத்தகத்தில் பதிவாகி உள்ளது.
ஜென் என்பது என்ன? என்ற கேள்வியை எழுப்பி பதில் கொடுக்கிறார்கள்.  விருப்பப்பட்டால் முயலுங்கள்.  ஆனால் ஜென் தானாகவே வருகிறது.  உண்மையான ஜென், தினசரி வாழ்வில் தன்னைக் காட்டிக்கொள்கிறது.  அது செயலாக உள்ள பிரக்ஞை.  வரம்புக்குட்பட்ட எந்த விழிப்புணர்வையும் விடக் கூடுதலாக அது நம் எல்லையற்ற இயல்பை அடையும் எல்லாக் கதவுகளையும் திறக்கிறது. 
இனாயத் கான் ஒரு இந்துக் கதையைச் சொல்கிறார்.  ஒரு மீன், ராணி மீனிடம் போய்க் கேட்டது.  üநான் கடலைப் பற்றி எப்போதும் கேள்விப்பட்டுக்கொண்டிருக்கிறேன்.  அதென்ன கடல்? அது எங்கே இருக்கிறது?ý 
ராணி மீன் விளக்கியது : 'நீ வாழ்வதும், அசைவதும், உன் உயர் இருப்பதும் கடலில்தான்.  கடல் உனக்குள்ளும் இருக்கிறது. நீ இல்லாமலும் இருக்கிறது.  நீ கடலால் ஆனவள்.  நீ கடலில்தான் முடிவாய். கடல் உன் சொந்த உயிரைப் போல உன்னைச் சூழ்ந்துள்ளது.'  ஏதோ புரிகிற மாதிரி இருக்கிறதா?  அதுதான் ஜென்.
இதில் பெரும்பாலும் உள்ள ஜென் கதைகள் அரைப்பக்கம், முக்கால் பக்கம், முழுப்பக்கம், ஏன் கால் பக்கம் கூட.  ஒவ்வொன்றையும் நிதானமாக வாசிக்க வேண்டும்.  ஏன் படித்துவிட்டு கண்ணை மூடிக்கொண்டு யோசிக்க வேண்டும்.  அப்போதுதான் ஜென் புரிகிற மாதிரி தோன்றும்.  ஜென் அனுபவத்திற்கு கொஞ்சம் கொஞ்சமாகப் போகிறீர்கள் என்று அர்த்தம்.
நான் இந்தப் புத்தகத்தைப் படித்து முடிக்கவில்லை.  படித்து முடித்தபின்னும் முடித்துவிட்டேன் என்றும் சொல்ல முடியாது.  அந்த அளவிற்கு ஆழமாகக் கருத்துக்களைக் கொண்டது.  புரிகிற மாதிரி இருந்தாலும், புரியாத மாதிரி தோன்றும்.  நன்றாக யோசிக்க வைக்கும்.
இந்தப் புத்தகத்தைத் தொகுத்தவர்கள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.  பால் ரெப்ஸ் ஜென் தத்துவங்களால் தூண்டப்பட்ட பல்வேறு அ-புனைவுகளையும், கவிதைகளையும் இயற்றியிருக்கிறார்.  இவற்றுள் üஜென் டெலக்ராம்ஸ்ý (ஜென் தந்திகள்) நூலும் ஒன்று.  இவர் இந்தியா, நார்வே, ஜப்பான் என்று பல நாடுகளில் வாழ்ந்த அமெரிக்கர்.  வாழ்நாள் முழுவதும் ஞானத் தேடல்களில் ஆழ்ந்திருப்பவர்.  வயதானாலும் மகிழ்ச்சியைப் பெற முடியும் என்ற நம்பிக்கை கொண்டவர்.
நியோஜென் சென்ஸகி சர்வதேச அளவில் புகழ்பெற்ற புத்த ஞானி.  தனக்கென்று ஒரு வீடு இல்லாத அவர், ஒரு மடாலயத்திருந்து மற்றொன்றுக்கு மாறியபடி தேசமெங்கும் அலைந்து கல்வி பயின்றுவந்தார்.  அவருடைய பயணம் காலப்போக்கில் அவரை அமெரிக்காவிற்குக் கொண்டுவந்து சேர்த்தது.  
இந்தப் புத்தகத்தின் பின் அட்டையில் ஒரு வாசகம்.  பத்து லட்சத்திற்கும் அதிகமான பிரதிகள் விற்ற üஜென் சதை, ஜென் எலும்புகள்ý எண்ணற்ற மக்களின் வாழ்வுக்கு ஒரு தூண்டுதலாக இருக்கிறது.  
உண்மைதான்.  இந்தப் புத்தகம் படிக்கும்போது அந்த எண்ணம் உண்டாகாமல் இல்லை. ஒரு ஜென் கதையோடு முடிப்போம்.

1. ஒரு கோப்பைத் தேநீர்

மெய்ஜி காலத்தில் (1868-1912) ஜென்னைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு வந்த பல்கலைக் கழகப் பேராசிரியர் ஒருவரை ஜப்பானிய குரு நான்-இன் வரவேற்றார்.
நான்-இன் விருந்தினரின் கோப்பையில் தேநீர் ஊற்றினார். அது நிரம்பிவிட்டது.  இருந்தும் அவர் தொடர்ந்து ஊற்றிக்கொண்டே இருந்தார்.
கோப்பை நிரம்பி வழிவதைக் கவனித்த பேராசிரியரால் அதற்கும் மேல் தன்னைக் கட்டுப்படுத்த முடியவில்லை.  'நிரம்பிவிட்டது.  இதற்கும் மேல் கொள்ளாது,' என்றார்.  
'இந்தக் கோப்பை மாதிரிதான்ý என்ற நான்-இன், üநீங்கள் உங்களை சொந்த கருத்துகளையும் எண்ணங்களையும் கொண்டு நிரப்பி வைத்திருக்கிறீர்கள்.  முதலில் நீங்கள் உங்கள் கோப்பையைக் காலி செய்யாவிட்டால் நான் எப்படி உங்களுக்கு ஜென்னைக் காட்ட முடியும்?' என்றார்.
அரைப் பக்கம்தானே என்று நாம் படித்து விடலாம்.  ஆனால் யோசிக்க யோசிக்க நாம் எங்கோ போய்விடுவோம்.

Monday, September 16, 2019

பதினான்காம் நாளின் வாசிப்பனுபவம் (15.09.2019)




அழகியசிங்கர்




டொரினா என்ற தலைப்பில் உள்ள கதை.  வசந்தா அக்கா தற்கொலை செய்து விட்டாள் என்ற செய்தியில் ஆரம்பிக்கிறது கதை.  வசந்தா அக்காவைப் பற்றி நினைவுகளில் ஆரம்பித்து முடிவும் அதேபோல் முடிகிறது.  இந்தக் கதையே வசந்தா அக்காவின் தற்கொலைதான்.  வேற வழியே இல்லை.  கதிரேசன் அண்ணனுடன் நடக்க வேண்டிய கல்யாணம் தவறிப்போய்விடுகிறது.  அதைப் பற்றியே நினைத்து நினைத்து வசந்தா அக்கா தற்கொலை செய்து கொண்டு விடுகிறாள்.  
திறமையாக எழுதப்பட்ட உளவியல் கதை.  வசந்தா அக்கா என்ற கதாபாத்திரத்தில் ஏற்றப்பட்டுள்ள சோகம் படிப்பவரைத் திகைக்க வைக்கிறது.  ஆனால் இந்தத் தற்கொலை முடிவை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

யயகிரகணம் என்ற கதையைப் படிக்கும்போது, இவர் கதைகளில் பொதுவான அம்சமாக நிறைவேறாத ஆசை அடிநாதமாக ஒலிக்கத் தொடங்குவதுபோல் தோன்றுகிறது.  பெண் பார்த்துவிட்டுப் போகிறான்.  அந்தப் பெண்ணிற்கும் இவனுக்கும் வயது வித்தியாசம் அதிகம்.  ஒருவாரம் கழித்துச் சொல்வதாகக் கூறிய பெண் வீட்டார்.  பதில் சொல்லவில்லை.  என்ன என்று கேட்டுவிடலாமென்று இவன் போகிறான். ஒரு காரணத்தைச் சொல்லி பெண் இப்போது தயாராய் இல்லை என்று பெண்ணின் அப்பா சொல்கிறார்.  பெண் சம்பந்தமாய் அவன் இளமைக்காலத்து நினைவுகள் உடனே.  சுஜாதா என்ற பெண் வருகிறாள். அவளைக் காதலிக்கிறான்.  
ஒரு இடத்தில் இப்படி எழுதியிருக்கிறார்.  üஅப்போது இரண்டு கறுப்பு வெள்ளைப் பட்டாம்பூச்சி அவள் கண்களிலும், பல வண்ண வண்ணப் பட்டாம்பூச்சிகள் என் வயிற்றிலும் பறந்தன.ý 
இந்த இடத்தில் இதைப் படிக்கும்போது கதையின் போக்கு புரிந்து விடுகிறது. 
அவள் கண்களில் காதலை உணர்ந்த ஒருநாளில் அவளிடம் காதல் கடிதத்தை நீட்டுகிறான்.  பெரிய அதிர்ச்சியைக் காட்டாமல் நிலக்கடலைப் பொட்டலத்தைப் பிரித்து வாசிக்கும் ஒரு சாவதானத்துடன் அக் கடிதத்தை வாசிக்கிறாள்.  பின் அவன் கண்களைப் பார்த்து, 'உன் கண்கள் ரொம்ப அழகு,' என்று சொல்கிறாள். 
விலைமகளைத் தேடிப் போகிறான்.  அவன் நினைக்கிறதை நடத்த முடியவில்லை.  "கோபப்படும்போது கூட உன் கண்ணு அழகய்யா," என்கிறாள்.  கோபத்துடன் அவளைப் பார்த்து, 'போடி தேவடியா.' என்கிறான்.
இந்தக் கதையில் யயகிரகணம் என்றால் என்னவென்று புரியவில்லை. 
லிண்டா தாமஸ் என்ற கதையில் ஒரு நிறுவனத்தில் 17 ஆண்டுகளாகப் பணிபுரியும் லிண்டா தாமஸ் என்ற பெண் பணியாளரைப் பற்றிய கதை.  அலுவல் விஷயமாகப் பேசும்போது வேற எதுவும் பேசாத ரொம்ப கறார் பேர்வழியாக இருப்பவர், சித்துவுடன் பேசும்போது கொஞ்சம் இலகுவாக மாறிவிடுகிறா. 17 ஆண்டுகளாக அனுபவமுள்ளவர் வேலையைவிட்டு விலகி விடுகிறார். அவரே விலகவில்லை நிறுவனம் அவரை நீக்கி விடுகிறது.  அதற்குக் காரணம் சித்துதான்.  ஐடி நிறுவனங்களில் உள்ள குழப்பத்தைத் திறமையாக எழுதி உள்ளார்.  
ஒரு காதல், மூன்று கடிதங்கள் என்ற கதை விவாகரத்தைப் பற்றிப் பேசுகிறது.  மனைவியுடன் வாழ விரும்பாத கணவன், ஜாக் என்ற ஆண் நண்பனுடன் அமெரிக்காவில் வாழ விரும்புகிறான்.  இந்தக் கதையின் போக்கு பின் குறிப்பு மூலம்தான் தெரிகிறது. 
வழிப்போக்கன் என்ற கதையில் இரண்டு பேர்களுக்காக வீடு வாடகைக்குத் தேடித் தர முன்பின் தெரியாத ஒருவன் உதவுகிறான்.  மூன்று பேர்களும் வேற வேற மொழி பேசுகிறவர்கள்.  கடைசியில் வீடு கண்டுபிடித்துக் கொடுத்து விடுகிறான்.  அதற்காக உதவி செய்ய வருபவன் எந்தவித பண உதவியையும் வாங்காமல் போய் விடுகிறான். அவன் பெயர் கூட அவர்களுக்குத் தெரியவில்லை.
மொத்தத்தில் கார்த்திக் பாலசுப்ரமணியன் திறமையாகக் கதை எழுதுபவராகத் தெரிய வருகிறார்.  

Sunday, September 15, 2019

பதின்மூன்றாம் நாளின் வாசிப்பனுபவம் (14.09.2019)



அழகியசிங்கர்





இந்த முறை சிறுகதைத் தொகுப்பு. கார்த்திக் பாலசுப்ரமணியன் என்ற இளைஞரின் சிறுகதைத் தொகுப்பு.  தொகுப்பின் பெயர்  டொரினா.
சி சு செல்லப்பா ராமையாவின் சிறுகதை பாணி என்ற புத்தகம் எழுதி உள்ளார்.  அப் புத்தகத்தில் ராமையாவின் சிறுகதைகளைக் குறிப்பிட்டு (முன் கதைச் சுருக்கம் மாதிரி) கதைகளைப் பற்றியும் எதாவது சொல்லியிருப்பார்.
ஒவ்வொரு கதையையும் படித்துவிட்டு புத்தகத்திலேயே கதையின் முடிவில் குறிப்புகள் எழுதி உள்ளேன். 
போன ஆண்டு மார்ச்சு மாதம் இத் தொகுப்பில் உள்ள எல்லாக் கதைகளையும் படித்துவிட்டேன்.  ஒரு வருடத்தில் எல்லாம் மறந்து விட்டது.  திரும்பவும் படித்தபின்தான் ஒவ்வொன்றாக ஞாபகம் வருகிறது. 
முடிந்தவரை சிசு செல்லப்பா பாணியில் எழுத முடிகிறதா என்று பார்க்கிறேன்.
இரு கோப்பைகள் என்ற முதல் கதை.  வயதானவர்கள் பற்றிய கதை.  இப்படியெல்லாம் சம்பவம் எதிர்பாராமல் நடக்கும். நடக்கிறது. மார்க்கும், சோஃபியாவும் வயதான கணவன் மனைவி.  இருவரும் பக்கத்தில் உள்ள குடியிருப்பில் இருக்கிறார்கள்.  நடைப்பயிற்சி செய்து விட்டு வீட்டிற்குத் திரும்பி விடுகிறார்கள்.  சோஃபியா கொஞ்சம் களைப்பாக இருக்கிறதென்று படுத்துக்கொள்கிறார்.  திரும்பவும் எழுந்து கொள்ளவில்லை.  
நான் எழுதிய குறிப்பு : கதையின் முடிவு எப்படி இருக்குமோ என்ற அச்சத்தை இக் கதை தவிர்த்து விடுகிறது. முதியவர்கள் வாழ்க்கையில் நடக்கும் சோக சம்பவங்களை அப்பட்டமாகச் சொல்லாமல் சொல்கிறார்.  கதையின் முடிவு இயல்பாக உள்ளது. ஆனால் இன்னொரு கோப்பை ஏன்?

2. முடிச்சுகள்.. குடும்பத்தின் மூன்று தலைமுறைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்ய கிளம்புகிறான்.  அவன் ஒரு வேலையில் சேர்வதற்கு முன் இப்படிப்பட்ட ஆராய்ச்சியைத் துவங்குகிறான்.  அப்படி ஒரு ஆராய்ச்சியை மேற்கொள்ளும்படி பேராசிரியர் ஜோஷி ஆணையிடுகிறார். அப்பாவை வழித் தாத்தாவைப் பற்றி விபரம் சேகரிக்கப் போகிறான்.  அப்பாவின் அப்பா - தாத்தா -  ஒரு காரணமும் சொல்லாமல் வீட்டை விட்டுப் போய்விடுகிறார்.  அவரைப் பற்றிப் பல தகவல்களைச் சேகரிக்கிறான்.  இறுதியில் சோழிச் சித்தரைப் பார்க்கிறான்..
கதை முடிவில்தான் புதிர் அவிழ்கிறது.  சோழிச் சித்தராக அவர் தாத்தா மாறிவிட்டாரோ என்று தோன்றுகிறது.  படிப்பவர்கள் முடிவை யோசிக்க முடியாத கதை.

3. பார்வை - பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் பெண்ணிற்கு நானூறு கிலோமீட்டர்கள் தூரத்திலிருக்கும் தன் பெண்ணைப் பற்றி கவலை ஏற்படுகிறது.  அம்மா பார்த்துக் கொள்கிறாள். இருந்தாலும் குழந்தைக்கு சுரம். உடனே போய்ப் பார்க்க முடியாத அவஸ்தை.  வேலை கெடுபிடி. இப்படி ஆரம்பிக்கிறது கதை. உதவி இயக்குநராக இருக்கும் தன் கணவனின் கனவை எப்படியாவது பூர்த்தி செய்ய வேண்டுமென்று நினைக்கிறாள்.   கொஞ்சம் சீக்கிரமாக வீட்டிற்குப் போக வேண்டுமென்று பேருந்தில் வருகிறாள்.  500 ரூபாய் நோட்டிற்கு சில்லரைத் தர முடியவில்லை நடத்தினரால்.  ஏதோதோ பேசுகிறான்.  அதைக் கேட்கப் பிடிக்காமல் வேற வழியில்லாமல் துக்கத்தைத் தாங்க முடியாமல்  பஸ்ஸில் எல்லோர் முன்னும் அழுகிறாள்.  அழுகை ஒரு வடிகால் என்பதுபோல் எழுதியிருக்கிறார்.  எடுத்துக்கொண்டு போன விதம் நன்றாக உள்ளது. 
.இத் தொகுப்பில் உள்ள இன்னும் சில கதைகளைப் பற்றி நாளை எழுதுகிறேன்.   



Saturday, September 14, 2019

பன்னிரண்டாம் நாளின் வாசிப்பனுபவம் (13.09.2019) Friday


பன்னிரண்டாம் நாளின் வாசிப்பனுபவம் (13.09.2019) Friday


அழகியசிங்கர்




கடந்த பத்து நாட்களாகப் படிக்கத் தொடங்குகிறேன்.   அதனால் என்னை அறியாமலேயே தினம் தினம் படிக்க வேண்டுமென்ற எண்ணம் தானாகவே எழுகிறது.  என்னன்ன புத்தகங்கள் படித்துக்கொண்டு வருகிறோம் என்று பார்க்கிறேன்.  எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.   முன்பெல்லாம் நான் வைத்துக்கொண்டிருக்கும் புத்தகங்களைப் பெரும்பாலும் படிப்பதில்லை.  பார்த்துக்கொண்டிருப்பேன்.  எப்பவாவது புரட்டிப் பார்ப்பேன்.  பயணத்தின் போது தீவிரமாகப் படிக்கப் புத்தகங்களை எடுத்துக்கொண்டு போவேன்.   கடந்த பத்து நாட்களாக நான் படிக்கத் தொடங்கிய பிறகு எனக்குதத் தானாகவே எதாவது படிக்க வேண்டுமென்று தோன்றுகிறது.

சும்மா இருக்கும்போதுகூட பத்திரகையில் உள்ள கட்டுரைகளைப் படிக்கத் தோன்றுகிறது. வேண்டுமென்று தோன்றுகிறது.  பொதுவாக பத்திரிகைகளைப் புரட்டிப் பார்ப்பேன்.  

சனிக்கிழமை தமிழ் ஹிந்துவும், ஞாயிற்றுக்கிழமை தமிழ் ஹிந்து, தினமலர், தினமணி, திங்கட் கிழமை தினமணி. முன்பு என்றால் புரட்டிப் பார்ப்பதோடு சரி, இப்போது நடுப்பக்த்தில் படிக்கத் தொடங்குகிறேன்.     9ஆம் தேதி செப்டம்பர் மாதம் தினமணி எடுத்துப் படித்தேன். மக்களாட்சி மேன்மை அடைய க பழனித்துரை எழுதிய கட்டுரையை வாசித்தேன்.  பின்னடைவல்ல, பாடம் என்ற தலையங்கக் கட்டுரையை வாசித்தேன். பா ஜ க மீண்டும் தனித்துப் போட்டி என்ற ஜெ ராகவன் கட்டுரையை வாசித்தேன். இது என்னுள் நடந்த மாற்றமென்று கருதுகிறேன்.

பன்னிரண்டாம் நாளின் வாசிப்பு அனுபவத்தை 14ஆம் தேதி தான் வாசிக்க முடிந்தது.  இவர்கள் என்ற நகுலனின் புத்தகம். 142 பக்கங்கள் கொண்ட க்ரவுன் சைஸ் புத்தகம்.  நேரத்தையெல்லாம் பார்க்கவில்லை.  படித்துக்கொண்டிருந்தேன்.  முதல் 1 மணி நேரத்தில் 40 பக்கங்கள் படித்தேன்.  பிறகு மூடி வைத்துவிட்டேன்.  12 மணிக்கு சாப்பிட்டபிறகு நன்றாகத் தூங்கிவிட்டேன்.  3 மணிக்கு எழுந்து ஒரு இடத்திற்குப் போனேன்.  திரும்பி வரும்úôது 6.30 மணி ஆகிவிட்டது.  திரும்பவும் நகுலனின் இவர்கள் எடுத்துப் படிக்க ஆரம்பித்தேன்.

எப்படியாவது முடிக்க வேண்டுமென்று எடுத்துப் படிக்க ஆரம்பித்தேன்.  கொஞ்சம் கொஞ்சம் தூக்கம் வந்தது.  உண்மையில் தூங்கி வழிந்துகொண்டு படித்தேன்.  புத்தகத்தைப் படித்து முடித்தபின் சரியாக பத்து மணி ஆகிவிட்டது.  இனிமேல் படுத்துத் தூங்கத்தான் வேண்டுமென்று படுத்துக்கொண்டு விட்டேன்.

வாசிப்போம் வாசிப்போம் பகுதியில் இந்தப் புத்தகத்தைப் பற்றி எழுத வில்லை.  சரி இனிமேல் புத்தகத்தைப் பற்றி எதாவது சொல்ல முடிகிறதா என்று பார்க்கிறேன்.

இந்த நாவல் முழுவதும் எழுத்தாளர்களைப் பற்றியும், எழுத்தைப் பற்றியும் பேசுகிறார் நவீனன் என்ற பெயரில்.  ஒருவரை ஒருவர் சந்திக்கிற பேசுகிற நிகழ்ச்சிகளாகத் தொகுத்திருக்கிறார்.  நாவலின் பின்னால் அப்பாவைப் பற்றியும் அம்மாவைப் பற்றியும் குறிப்பிடுகிறார்.

ராமநாதன் என்ற பெயரில் க.நாசுவை ஒரு பாத்திரமாக மாற்றிக்கொண்டு எழுதுகிறார்.  இந்த நாவலில் கேசவ மாதவன் என்ற பெயரில் எந்த எழுத்தாளர் ஒளிந்துகொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை.    நகுலன் இப்படித்தான் எல்லோர் பற்றியும் சொல்லிக்கொண்டு போகிறார்.  

இன்னொரு கதாபாத்திரம் நல்லசிவம் பிள்ளை.  இது மௌனியாக இருக்குமென்று நினைக்கிறேன்.  இப்படி தான் சந்தித்த எழுத்தாளர்களை கதாபாத்திரங்களாக மாற்றி விடுகிறார்.  

'ராமநாதனைப் பார்த்தபின் பரிசுத்த ஆவியாக இருந்த நான் நிழலாக மாறினேன் என்றால் நல்லசிவன் பிள்ளையைப் பார்த்த பின் நிழலாக இருந்தவன் பேயாக மாறினேன் என்று சொல்ல வேண்டும்,'  என்று எழுதியிருக்கிறார்.

நகுலனின் புத்தகங்களை ஒரு முறை இல்லாமல் பலமுறை படித்துக்கொண்டிருக்க வேண்டும்.  அலுப்பாகவே இருக்காது.  இவர் புத்தகத்தை யாரும் அவ்வளவு எளிதாகப் புரிந்து கொண்டு விட மாட்டார்கள்.

க நா சு வைப்பற்றி அவர் சொல்கிற விஷயங்கள் வேடிக்கையாகக் கூட இருக்கும்.  

இப்படி எழுதுகிறார் : 'சில சமயங்களில் எனக்குத் தோன்றாமல் இருந்ததில்லை.  இவர் ஆண்-பெண் வேறுபாடையே ஒப்புக் கொள்கிறரோ என்று, அவருக்கு நோட்புக் எழுதும் பழக்கம் உண்டு.  தினம் எதாவது எழுதிக்கொண்டிக்க வேண்டும் என்பார்.'

இவர் நாவலில் அங்கங்கே பளிச் பளிச்சென்று வரிகள்.  ü நான் யார் என்றுகூட அனுமானிக்க முடியவில்லை.

நான், ராமநாதன், நல்லசிவன் பிள்ளை இவர்களைச் சந்தித்துப் பிரிகையில் üநேற்றிருந்த மனிதன் நான் இன்றில்லை,ýஎன்ற உணர்வோடு திரும்பினேன் என்று எழுதுகிறார்.

பளிச்சென்ற வரிகள் பக்கம் பக்கமாகத் தொடர்கிறது.  

'அந்தப் பெரிய கோவிலில் என்னை முதலில் கவர்ந்தது கட்டற்ற ஒரு வெட்டவெளிதான்.

ராமநாதன் என்ன சொன்னார்?  அனுபவத்தைத் தேடிக்கொண்டு நீ எங்கும் போக வேண்டாம்.  அது உன் முன் இரைந்து கிடக்கிறது,

பெக்கட்டைப் படிக்கிறபோது எழுதுவதற்கு ஒன்றுமில்லை.  ஆனாலும் எழுது, எழுது என்று ஏன் இந்த நச்சரிப்பு.  அவனும் எழுதவில்லையா? பக்கம் பக்கமாக, 'ஒன்றும் இல்லாததை பற்றி.

மரம் நிற்கிறது என்ற தலைப்பைப் பிடித்துக்கொண்டு அப்பாவைப் பற்றி பலவற்றைச் சொல்கிறார்.

இங்கே முக்கியமாக ஒரு விஷயத்தைச் சொல்கிறார: தன்னைப்போல்தான் அம்மாவும் என்று அவன் நினைத்துக்கொண்டான்.  அவனுக்குத் தோன்றியது - "சுயம் - நசித்துக்கொள்வதின்" மூலம் தான் தன் சுயத் தன்மையைக் காப்பாற்றிக் கொள்ள முடியுமென்று நினைத்துக்கொண்டதாகத் தோன்றியது.  இதற்குச் சூழ்நிலையென்பது ஒரு காரணமாக இருக்கலாம்.  இதே அடிப்படையில் தான் எழுத்தாளன் என்ற அடிப்படையில் அவனுக்கு இந்தச் 'சுயம் - நசித்துக்' கொள்வது என்பது ஒரு மகத்துவமான தத்துவமாகப் பட்டது.  

நகுலன் உண்மையிலே எழுத்தாளர்களுக்கெல்லாம் எழுத்தாளர்.  

Friday, September 13, 2019

பதினோராம் நாளின் வாசிப்பனுபவம் (12.09.2019)





அழகியசிங்கர்







ர கி ர டைம்ஸ் என்ற புத்தகத்தில் ரா.கி ரங்கராஜன் அவர்கள் எது பாஸில்வங கண்ணோட்டம்? என்ற கட்டுரை எழுதி உள்ளார்.  ஜெர்ரி ஒரு ரெஸ்ட்டாரன்டின் சொந்தக்காரர்.  அவரிடம் வேலை செய்பவர்களுக்கு ஒரு கடவுள் மாதிரி.   அவர்களுக்கு என்ன பிர்ச்னை என்றாலும் தீர்த்து வைப்பார்.  எதிலும் பாஸிடிவ் கண்ணோட்டம் கொள்ள வேண்டுமென்று வற்புறுத்துவார்.
ஒருமுறை இவருடைய ரெஸ்ட்டாரண்டுக்குள் இரவில் சில கொள்ளைக்காரர்கள் புகுந்து விட்டார்கள்.  பின்புறக் கதவைப் பூட்டாமல் வந்ததுதான் காரணம் என்று ஊகித்தவர் இனி அப்படி அஜாக்கிரதையாக இருப்பதில்லை என்று தீர்மானம் செய்து கொண்டாரே தவிர இப்போது இப்படி ஆயிற்றே என்று புலம்பவில்லை.
கொள்ளைக்டகாரர்கள் ஜெர்ரியை கண்டபடி சுட்டுவிட்டுத் தப்பித்து விட்டார்கள்.  ஜெர்ரி ஆஸ்பத்ரிக்குக் கொண்டு செல்லப்பட்டார் üஉங்களுக்கு ஒன்றுமில்லை.  பயப்படாதீர்கள்,ý என்று டாக்டர்கள் சொன்ன போதிலும் அவர்களுடைய முகங்களில் பயம்.  ஒரு நர்ஸ் அவரிடம், உங்களுக்கு எதிலாவது அலர்ஜி உண்டா என்று கேட்கிறாள். உடனே ஜெர்ரி அவளைப் பார்த்து, 'ஆமாம்.  தோட்டா எனக்கு அலர்ஜி,' என்று சொன்னதும் சுற்றியிருந்த டாக்டர்களும் நர்ஸ்களும் சிரித்துவிட்டார்களாம்.  
'செத்துப் போகப் போகிறவனுக்கு ஆபரேஷன் செய்வதாக நினைக்காதீர்கள்.  உயிருள்ளவனுக்கு ஆபரேஷன் செய்யப் போகிறோம் என்று நினையுங்கள்.  நான் பிழைத்து விடுவேன்,' என்கிறார் ஜெர்ரி.  பிழைத்தும் விடுகிறார். 
இதை ஏன் இங்கே குறிப்பிடுகிறேன் என்றால் 'இனி இல்லை மரணபயம்' என்ற புத்தகத்தைப் படிக்கும்போது சில தினங்களுக்கு முன் படித்த புத்தகத்திலிருந்து இந்தச் சம்பவம் ஞாபகத்திற்கு வந்தது.
'வாழ்க்கையைப் பற்றிய எதிர்மறையான தொகுப்பு அல்ல இந்த நூல்.  செத்து செத்து பிழைப்பவர்களை சாகாமல் காக்கும் நூல் இது' என்கிறார் முன்னுரையில் சந்தியா நடராஜன்.
இத் தொகுப்பில் மரணத்தின் நினைவில் சாமுராய் என்ற கட்டுரை சிறப்பாக வடிவமைக்கப்படுகிறது.  
ஒருவர் மரண நினைவுடன் வாழ்ந்தால் அதிக நாட்கள் வாழ்நாளை நீடிப்பார் என்ற கருத்தை முன் வைக்கிறார் தொகுப்பாசிரியர்.
மரணத்திற்காக துக்கப்படுவதில்லை என்ற மகாத்மா காந்தியின் கட்டுரையில், காந்தியின் மரணம் பற்றி ஜார்ஜ் பெர்னாட் ஷா குறிப்பிடுவது வருகிறது.
மிக மிக நல்லவனாக இருப்பது எப்படிப்பட்ட ஆபத்து என்பதை காந்தியின் மரணம் காட்டுகிறது என்று.
மகாபாரதம், பைபிள், பகவத் கீதை, ஜே கிருஷ்ணமூர்த்தி, ஓஷோ, நிஸகர்கத்தா மஹாராஜ் போன்ற பல புத்தகங்களிலிருந்து எடுத்துக்காட்டுகளாகக் குறிப்பிடுகிறார்.
அங்கங்கே சின்ன சின்ன கதைகளையும் கொடுத்திருக்கிறார்.
ஜென் துறவியிடம் ஒருவன் கேட்டான் :
'நூறு ஆண்டுகள் கடந்தபின் நீங்கள் எங்கே போவீர்கள்?' 
'நான் ஒரு குதிரையாகவோ கழுதையாகவோ மாறி விடுவேன்?' இது துறவியின் பதில்.
'பிறகு?' அந்த மனிதன் கேட்டான்.
'நரகத்திற்குச் செல்வேன்,' 
'நீர் ஏன் நரகத்திற்குச் செல்ல வேண்டும்,' என்று கேட்கிறான்.
'உனக்கு போதனை செய்ய நரகத்திற்கு நான் போகாமல் வேறு யார் போவார்?' 
துறவியின் பதிலில் மிரண்டு போனவனுக்கு ஒன்று புரிந்தது.
தூய்மையான இடங்கள் மட்டுமே புத்தன் உறையும் இடங்கள் இல்லை.  எல்லா இடங்களிலும் புத்தன் நிறைந்துள்ளான் சொர்க்கத்தில் புத்தன் இருந்தாலும் நரகத்திலும் அவன் தேவைப் படுகிறான்.
பூமிக்கு நாமொரு யாத்திரை வந்தோம்
யாத்திரை தீருமுன் நித்திரை கொண்டோம்
நித்திரை போவது நியதி என்றாலும்
யாத்திரை என்பது தொடர்கதையாகும் 

என்று ஜென்மம் நிறைந்தது என்ற கவிப்பேரரசு வைரமுத்துவின் கவிதை வரிகளுடன் இப் புத்தகம் முடிவடைகிறது.
முன்னுரையில் ஆசிரியர் இப்படி குறிப்பிடுகிறார் : üஒரே இரவில் என் உயிர் வெற்றிகரமாக ஒரு பரமபத ஆட்டம் ஆடியது.  மரணத்தின் விளிம்பைத் தொட்டும் தொடாமலும் உயிர்பிழைத்தேன் என்கிறார். கவனிக்கப்பட வேண்டிய வாசகங்கள்.

Thursday, September 12, 2019

பத்தாம் நாளின் வாசிப்பனுபவம் (11.09.2019)





அழகியசிங்கர்





522 பக்கங்கள் கொண்ட திரௌபதியின் கதையைப் படித்துக்கொண்டு வருகிறேன். ஒரிய மொழியில் பிரதிபாராய் எழுதி ஆங்கிலத்தில் பிரதீப் பட்டாச்சார்யா மொழி பெயர்த்து ஆங்கிலத்திலிருந்து தமிழில் இரா பாலச்சந்திரன் மொழி பெயர்த்திருக்கிறார்.
அவ்வளவு சுலபமாய் இந்த நாவலைப் படித்து விட முடியாது.  எவ்வளவு நாட்கள் ஆகுமென்று தெரியாது. இதைத் தவிர குறைந்த பக்கங்கள் கொண்ட புத்தகங்களைப் படித்துக்கொண்டிருக்கிறேன்.  தினமும் எதாவது எழுத நினைக்கிறேன்.  
மற்றவர்களும் இந்தப் பகுதியில் தங்களுக்குத் தோன்றுவதை எழுதலாம்.  நான் இருக்கும் குடியிருப்பில் நான் மட்டும்தான் படித்துக்கொண்டிருக்கிறேன்.  எங்கள் அடுக்கத்தில் 6 குடும்பங்கள் இருக்கின்றன.  20 பேர்களுக்கு மேற்பட்டவர்கள் இருக்கிறார்கள்.  யாரும் புத்தகம் என்ற ஒன்றைத் தொடுவதில்லை.  அதுவும் தமிழ்ப் புத்தகம் என்றால் காத தூரம் ஓடுவார்கள்.
அதேபோல் புத்தகம் என்று எதை எடுத்துப் படிப்பது என்று தடுமாறிக்கொண்டிருக்கிறேன்.  புத்தகங்களின் எண்ணிக்கை மலைக்க வைக்கிறது.  நான் படித்துக்கொண்டு போவதைப் பார்த்து பேத்தி கேட்கிறாள்.   üüஎன்ன தாத்தா நீ படித்துக்கொண்டே இருப்பியா?ýý என்று.  எனக்கு திகைப்பாக இருக்கிறது.  உண்மையில் நான் படிக்கிறது படிப்பே இல்லை.  பெரும்பாலான நேரத்தை நான் வீணடித்துக்கொண்டுதான் இருக்கிறேன்.  பேத்தியின் கேள்வி என்னுள் ரீங்காரமிட்டுக்கொண்டிருக்கிறது.
நான் 11ஆம் தேதிக்கு ஓஷோவின் ஞானக் கதைகள் எடுத்துப் படித்துக்கொண்டிருக்கிறேன்.  128 பக்கங்கள் கொண்ட புத்தகம் இது.
34 கதைகள் கொண்ட ஞானக்கதைகள் இவை.  ஒவ்வொரு கதையில் கடைசியில் ஓஷோவின் குறிப்புகள் வருகின்றன.  புத்தரைப் பற்றியும் பல அறிஞர்களின் கதைகளைப் படிக்கும்போது பரவசமான உணர்வு ஏற்படுகிறது.  எல்லாக் கதைகளும் அரைப்பக்கம், கால்பக்கம், முக்கால் பக்கம்தான் ஆனால் அதன் முலம் தெரிய வருகிற நீதி நம்மை யோசிக்க வைக்கிறது.
34வது கதையைச் (கடைசிக்கதை) சற்று பார்ப்போம்.  இரண்டு சிறுவர்கள் வீட்டைவிட்டு ஓடிப்போவதைப் பற்றி தங்களுக்குள் பேசிக் கொள்கிறார்கள்.  
"இது தங்களுடைய அப்பாவிற்கு தெரியவந்தால் உதைப்பார்களே?" என்கிறான் ஒரு பையன்.
"அதனாலென்ன அவர்களைத் திருப்பி அடித்தால் போயிற்று," என்கிறான் இன்னொருவன்.
அதற்கு முதல் பையன் குறிப்பிடுகிறான்.  "நாம் அவ்வாறு செய்ய முடியாது.  ஏனெனில் தாயையும் தந்தையையும் மதிக்க வேண்டுமென்று வேதாகமம் நமக்குப் போதிக்கிறது அல்லவா?" என்கிறான்.
இங்கு கதையில் ஒரு டுவிஸ்ட்.  "சரி அப்படியானால் ஒன்று செய்வோம்.  நீ என்னுடைய அப்பாவை அடி.  நான் உன்னுடைய அப்பாவை அடிக்கிறேன்."
இந்த டுவிஸ்ட்டை எதிர்பார்க்கவில்லை.  இதற்கு ஓஷோ என்ன குறிப்பிடுகிறாரென்றால், "கள்ளம் கபடமற்ற தன்மை என்பது புரியாத புதிர் போன்றது.  அது வாழ்க்கையின் ரகசியங்களின் எல்லாக் கதவுகளையும் திறக்கிறது," என்கிறார்.
இதுமாதிரி இப்புத்தகத்தில் 34 கதைகள் இருக்கின்றன.  திரும்பத் திரும்ப படிக்க வேண்டிய புத்தகமாகத்தான் எனக்குப் படுகிறது. 

Wednesday, September 11, 2019

ஒன்பதாம் நாளின் வாசிப்பனுபவம் (10.09.2019)


அழகியசிங்கர்




பாரதி காலமும் கருத்தும் என்ற தொ.மு.சி ரகுநாதன் புத்தகத்தைப் படித்துக்கொண்டிருக்கிறேன்.  இன்று பாரதி பிறந்தநாள் என்பதால் இந்தப் புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டேன்.
420 பக்கங்கள் கொண்ட புத்தகம் இது.  ஆராய்ச்சி ரீதியாக இந்தப்  புத்தகத்தை எழுதியிருக்கிறார் தொ.மு.சி ரகுநாதன்.  இதைப் படிக்கும்போது இப்போது ஆராய்ச்சி ரீதியாக எழுதி வரும் தமிழறிஞர்களுக்கு தொ.மு.சிதான் முன்னோடியாகத் திகழ்கிறார் என்று தோன்றுகிறது.  
நான் 80 பக்கங்கள்தான் இப் புத்தகத்தைப் படித்திருக்கிறேன். ஒரே மூச்சாகப் படிக்க வேண்டிய புத்தகம் இது.  
தொ.மு.சி இந்தப் புத்தகத்தில் இப்படி எழுதியிருக்கிறார்.  இந்நூலில் நான் இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் எழுந்த தீவிரத் தேசியவாதத்தோடு சேர்ந்து வலுப்பெற்று வந்த இந்திய நாட்டுப் புரட்சி இயக்கத்தில் பாரதிக்கு ஈடுபாடும் தொடர்பும் இருந்ததா என்ற கேள்விக்கே விடைகாண முற்பட்டிருக்கிறேன்.ý   
இதை 1905 முதல் 1911 அரசியல் கட்டத்தில் பாரதியின் அரசியல் மற்றும் இலக்கிய வாழ்வை மட்டுமே விரிவாக ஆராய்ந்திருக்கிறார்.
1. தேச பக்தியின் வித்து என்ற தலைப்பில் முதலில் பாரதிக்கு எப்போது தேசபக்தி வித்து ஏற்பட்டது என்பதை விவரித்துக் கூறுகிறார். 
ஸ்வேதச கீதங்கள் என்ற முதல் கவிதைத் தொகுதியை 1908ல் வெளியிடுகிறார்.  அந்த நூலில் ஸமர்ப்பணம் என்ற தலைப்பில் பாரதி மறைமுகமாக விவேகானந்தருடைய தர்மபுத்திரி ஆகிய ஸ்ரீமதி நிவேதிதாவிற்கு ஸமர்ப்பிக்கிறார்.  அடுத்து பாரதியின் இரண்டாவது கவிதைத் தொகுதியான üஜென்ம பூமிý (ஸ்வதேச கீதங்கள் இரண்டாம் பாகம்)யை நேரிடையாக நிவேதிதாவிற்கு சமர்ப்பிக்கிறார்.
இதனை அடுத்து 1910 பிப்பரவரி மாதத்தில் பாரதி புதுச்சேரியிலிருந்து தனது üஞானரதம்ý என்ற வசன நூலின் முதற்பதிப்பை வெளியிட்டபோதும் அதன் முதற்பக்கத்தை 
ஓம்
ஸ்ரீமதி நிவேதிதா தேவிக்கு 
ஸமர்ப்பணம் செய்யப்பட்டது
என்று சமர்ப்பணக் கூற்றுக்கு மட்டுமே முழுமையாக ஒதுக்கியிருக்கிறார்.
இதிலிருந்து 1908, 1909, 1910 ஆகிய மூன்று ஆண்டுகளிலும் தொடர்ச்சியாக வெளியிட்ட தனது முதல் நான்கு நூல்களுக்கு நிவேதிதா தேவிக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறார்.  நிவேதிதா தேவியின் மீது பாரதிக்கு உள்ள தனிப்பெரும் பக்தி நமக்குப் புலனாகிறது.
பாரதி எப்போது சகோதரி நிவேதிதாவைச் சந்திக்கிறார் என்ற தர்க்கத்தை தொ மு சி அழகாக முன் வைக்கிறார்.
1905ல் காசியில் நடைபெற்ற காங்கிரசுக்குப் பாரதி சென்றதாகவும் அப்போது திரும்பும்போது டம்டம் என்னும் ஊரிலிருந்த சகோதரி நிவேதிதா தேவியாரைச் சந்தித்ததாகவும் அந்த அம்மாவின் உபதேசத்தில் உள்ளம் லயித்து விடுவதாகவும்,  அதன் பின் தமது குருவாகவும் ஏற்றுக் கொண்டு விடுவதாகவும் தொ.மு.சி குறிப்பிடுகிறார்.
எனினும், சுதேச பத்தியையே நிவேதிதா தேவிதான் பாரதிக்கு ஊட்டினாரா? அவரது உபதேசத்தினால்தான் பாரதி தேச பக்தனாக மாறினாரா? என்ற கேள்வியை எழுப்புகிறார் தொ.முசி.
நிவேதிதா தேவியைச் சந்திப்பதற்கு முன்பே பாரதி தேசியப் பாடல்களை எழுதத் தொடங்கிவிட்டான் என்ற முடிவுக்கும் வருகிறார்.
பாரதியின் தேசபக்தி கடன் வாங்கிய சரக்கல்ல.  அது அவருடைய சொந்தச் சொத்து என்று பாரதியின் நண்பர் துரைசாமி அய்யர் கூறியதாக வ ரா குறிப்பிடுகிறார்.
சொல்லப்போனால் அவருடைய சொந்த வாழ்க்கையே தேச பக்தியை உண்டாக்கியது என்கிறார் தொமுசி.
இதற்கு நாம் பாரதியின் தந்தை சின்னச்சாமி அய்யரின் வாழ்க்கையையும் பாரதியின் இளமைக் காலத்தையும் கூர்ந்து நோக்கவேண்டும் என்கிறார்.  1880ல் வாக்கில் சின்னச்சாமி எட்டயபுரத்தில் ஒரு பஞ்சாலையை நிறுவினார். அது தென்னிந்தியாவில் மிகவும் முதன்மையான அலைகளில் ஒன்றாக இருந்தது.
சின்னச்சாமி அய்யரின் தொழில் முயற்சி தோல்வியடைந்தது.  அவர் தொடங்கிய ஆலை அவரது பணத்தையெல்லாம் தின்று தீர்த்தது.  அதனால் அவர் மனமிடித்து இறந்தார்.  இதை பாரதியார் தம் சுயசரிதத்தில் மிக உருக்கமாகக் கூறியிருக்கிறார். 
ஊணர் செய்த சதியால் தன் தந்தை செல்வம் யாவும் இழந்தனன் என்று பாரதி வெதும்பிப் பாடியிருக்கிறார்.  பாரதிக்கு அவர் தந்தை (1897 ஜøன்) திருமணம் நடத்தி முடித்து விடுகிறார்.  தந்தை இறந்தபோது பாரதிக்கு வயது பதினாறு முடியவில்லை.  
இந்தக் காரணத்தை முன்னிட்டு தேசபக்திக்கான அடிப்படை அவனது பதினான்காவது வயதிலேயே அவரது இதயத்தில் பதிந்து விட்டது என்கிறார் தொ.மு.சி.
புத்தகத்தின் இரண்டாவது கட்டுரை முதல் பத்திரிகை என்ற தலைப்பில் தொகுத்தளித்திருக்கிறார்.  
சுதேசமித்திரனில் இருந்த பாரதி அதே காரியாலயத்திலிருந்து வெளிவந்த üசக்ரவர்த்தினிý என்ற மாதப் பத்திரிûயின் பொறுப்பாசிரியாராகவும் இருந்தார்.  ஆனாலும் இதிலும் சரி மித்திரனிலும் சரி அவர் தம்முடைய மனம்போல் தமது தீவிரமான கருத்துக்களைக் கொட்டித் தீர்க்க இடமிருக்கவில்லை என்று பாரதி நடத்திய பத்திரிகைகள் என்ற தலைப்பில் ரா அ பத்மநாபன் எழுதியிருக்கிறார்.
பாரதி 1906 ஏப்ரல் மாதத்தோடு சுதேசமித்திரனில் தான் வகித்துவந்த உதவியாசிரியர் பதவியை உதறித் தள்ளிவிட்டு 1906 ஆம் ஆண்டு மே மாதம் இந்தியா பத்திரிகையில் ஆசிரியப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.  சுதேசமித்திரனில் பணியாற்றியது சரியாக ஒன்றரை வருடம். அதேபோல் சக்ரவர்த்தினி பத்திரிகையிலிருந்தும் ஆசிரியப் பொறுப்பிலிருந்து விலகி விடுகிறார்.
இந்தப் புத்தகம் படிக்க படிக்க விறுவிறு என்றிருக்கிறது.  பல அரிய தகவல்களை தொமுசி எடுத்து வைக்கிறார்.  ஒருவர் இப் புத்தகத்தை எடுத்துப் படிக்கத் தொடங்கினால் கீழேயே வைக்கத் தோன்றாது.  நான் இன்னும் படித்து முடிக்கவில்லை.  80 பக்கங்கள் படித்திருக்கிறேன்.  

Monday, September 9, 2019

எட்டாம் நாளின் வாசிப்பனுபவம் (09.09.2019)

எட்டாம் நாளின் வாசிப்பனுபவம் (09.09.2019)


அழகியசிங்கர்





நான் ஒரு மொழிபெயர்ப்பு நாவல் படித்துக்கொண்டிருக்கிறேன்.  அதை அவ்வளவு சுலபமாக ஒரே நாளில் படித்துவிட முடியாது.  கொஞ்சம் கொஞ்சமாக அதைப் படித்துக்கொண்டிருக்கிறேன்.   இந்தப் பகுதியில் தினமும் எதாவது எழுத வேண்டுமென்றுதான் என் நோக்கம்.  கூடவே மிகக் குறைவான பக்கங்களைக் கொண்ட புத்தகத்தையும் படித்து எழுத விரும்புகிறேன்.
பெரிய புத்தகம் முடியும்போது அதைப் பற்றி எழுதுவேன்.  நான் எட்டாவது நாளான இன்று எழுதுவது.  சாகித்ய அகாடமி விருதுபெற்ற பி கேசவதேவ் எழுதிய இரண்டு குறுநாவல்கள்.
இனிய உதயம் என்ற புத்தகம் ஜøலை 2011ல் வாங்கியது.  எங்கே வாங்கியிருப்பேன் என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்.   பேப்பர் கடையில்தான் வாங்கியிருப்பேன்.  வாங்கியபின் படிக்காமல் தூக்கிப் போட்டிருப்பேன்.  எனக்கு ஒரு புத்தகம் வாங்கியவுடன் உடனே அந்தப் புத்தகத்தைப் படிக்க வேண்டுமென்ற எண்ணம் தோன்றாது.  அப்படி வைத்துக்கொண்டிருக்கும் புத்தகம் என் கண்ணிலிருந்து மறைந்தும் விடும்.  திரும்பவும் நான் அந்தப் புத்தகத்தைப் பார்க்கும்போது ஒரு புதிய புத்தகத்தைப் பார்ப்பதுபோல் பார்ப்பேன்.
இனிய உதயம் என்ற இப் புத்தகமும் அப்படித்தான்.  சுரா அவர்கள் மொழி பெயர்த்த பி கேசவதேவ்வின் இரண்டு கதைகள். ஒன்று தீனாம்மா இரண்டாவது கதை பேருந்து பயணம்.
இனிய உதயம் என்ற பத்திரிகை மாதப் பத்திரிகை.  தொடர்ந்து பிற இலக்கியங்களைத் தமிழாக்கம் செய்கிற முயற்சியை மேற்கொண்டு வருகிறது.  
நான் வாங்கிய இதழ் பத்தாவது ஆண்டாக வெளிவருகிறது.  2011 ஆம் ஆண்டில் வாங்கிய இதழ் அது.  அப்போதே பத்தாண்டாக வருகிறது. நக்கீரன் வெளியீடு.   இப்போது இந்த இதழ் வெளிவருகிறதா என்பது தெரியவில்லை. தொடர்ந்து ஒரு இதழ் வெளிவருவதும் நின்று போவதும் நமக்குத் தெரிவதில்லை.  ஏன்னென்றால் ஒவ்வொரு மாதமும் தேடிக் கண்டுபிடித்து வாங்கும் வழக்கமில்லை.
இனிய உதயத்திற்காக மொழிபெயர்ப்பு செய்திருக்கும் சுரா அவர்கள், 96வது நூல் என்று இதைக் குறிப்பிட்டு உள்ளார். 
முதலில் தீனாம்மா என்ற கதையை எடுத்துக்கொள்வோம்.  தீனாம்மா அழகற்ற ஒரு பெண்.  அவளை அவள் தங்கை சாரம்மா பார்க்கிற போதெல்லாம் கிண்டல் செய்கிறாள்.
கொக்கைப் போன்ற கழுத்து ஒட்டிய
மூக்கு பாதி மூடிய கண்கள்
யானையில் உதடுகளைப் போன்ற அதரங்கள்
மான்மணி இவள் அல்லவா தீனாம்மா?
என்று பாடுகிறாள்.   தீனாம்மா மாணவியாக இருந்தபோது அவளைப் பற்றி ஒரு மாணவன் தமாஷாக எழுதிய கவிதை இது.
ஆனால் தீனாம்மா ரசனை மிக்கவள்.  அவள் சுற்றிலும் உள்ள இடங்களை ரசிப்பாள்.  தீனாம்மாவிற்கு எங்கும் எப்போதும் தனியாகப் போவதற்கு தடையெதும் இல்லை.  ஏன்என்றால் அவள் அழகற்ற தன்மை யாரும் அவளைப் பின் தொடர மாட்டார்கள் என்ற எண்ணம் அவள் பெற்றோர்களுக்கு இருந்தது.  ஆனால் அவள் எங்கும் தனியாகப் போவதில்லை.  ஞாயிற்றுக்கிழமை மட்டும் தேவாலயத்திற்குப் போவாள்.  அவள் தனிமையில் போகும்போது எல்லோராலும் அவள் வெறுக்கப்படுகிறாள்.  யாரும் அவளைப் பார்த்தால் கிண்டல் செய்கிறார்கள்.  அதனால் அவள் தனியாகப் போவதில்லை.  
மனிதர்களின் தோற்றத்திலும் செயலிலும் அழகு மிளிர வேண்டுமென்று அவள் விரும்புவாள். அழகு முழுமையாக நிறைத்திருக்கும் கலைத்தன்மை கொண்ட ஒரு உலகத்தை அவள் கற்பனை செய்வாள்.  அவளுடைய அறை அழகான ஓவியங்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது.  
இப்படி எல்லாராலும் இழிவாக நினைக்கப்படுகிற தீனாம்மா, தன் ரசனைக்கேற்ப தனக்கென ஒருவாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.  தீனாம்மாவுக்கு சித்தப்பா பெண்ணான அன்னக்குட்டியும், பக்கத்து வீட்டுப் பெண் தங்கம்மாவும் நண்பர்கள்.  
அவர்கள் இருவருக்கும் திருமணம் நடக்கிறது.  தீனம்மாவுக்கு திருமணம் வயது கடந்தும் என்ன முயற்சி செய்தும் திருமணமாகவில்லை. 
தீனாம்மாவால் அவள் தங்கை சாரம்மாவிற்கு திருமணம் ஆவதற்குத் தடைப்படுகிறது.  உண்மையில் அவள் தங்கையை பெண் கேட்டு வருகிறார்கள்.  ஆனால் தீனாம்மாள்தான் ஒரு தடை.
üபுனித மரியத்தைப்போல என் மகளான நீ என்றும் புனிதமானவளாக இருக்க வேண்டும்.  கன்னிகளின் மடம்தான் என் குழந்தையான உனக்கு ஏற்ற இடம்,ý என்கிறார் அப்பா சோகத்துடன்.
கன்னிகள் மடத்தில் அல்ல.  அதற்கு வெளியே இருக்கும் விசாலமான அழகான உலகத்தில் நான் எப்போதும் கன்னியாக இருப்பேன் என்கிறாள் தீனாம்மா அப்பாவிடம்.
கர்த்தரின் படைப்பான பரந்து கிடக்கும் இந்த உலகத்தில் நான் அழகை ஆராதிக்கக் கூடியவளாக, வாழக்கையை நேசிப்பவளாக, நித்யகன்னியாக வாழ்வேன் என்கிறாள் தீனாம்மா.
இதைக் கேட்டவுடன் சாராம்மாவின் திருமணம் முடிவு செய்யப்பட்டுவிட்டது என்கிறார் அவர் அப்பா.
ஓரளவு பணம் வசதி கொண்டவனுடன் அவள் தங்கை சாரம்மாவின் திருமணம் நடந்து விடுகிறது.  
தீனாம்மாவின் திருமணத்தையும் அவள் அப்பா முடித்துவிடுகிறார்.  3000 ரூபாய் பணம் கொடுத்து.  உண்மையில் தீனாம்மாவிற்கு இதில் விருப்பமில்லை.  அவளைத் திருமணம் செய்து கொண்டவன் ஒரு ஓவியம்.  அவள் கணவன் தாமஸ் அவளை அலட்சியப்படுத்துகிறான்.  அவளை நேராகக் கூட பார்ப்பதில்லை.  திருமணத்திற்குப் பிறகு அவன் வீட்டிற்கே வருவதில்லை.  பல பெண்களின் சவகாசம் அவனுக்கு.
இந்தக் கதையின் திருப்பு முனையாக, தாமஸ் அவளை பொய்கையில் தன்னை மறந்து இருக்கும் தீனாம்மாவை ஒரு முறை நேருக்குநேர் சந்திக்கிறான்.  அவனை அறியாமலயே ஒரு புன்னகையைத் தவழ விடுகிறான்.  அதைக் கண்ட தீனாம்மா திகைத்துவிடுகிறாள்.
யாரும் உள்ளே விடாத அவன் வீட்டிற்குள் இருக்கும் ஸ்டுடியோவில் கதவை மூடிக்கொண்டு விடுகிறான்.  நாள் கணக்கில் வெளியே வரவில்லை.  ஒருநாள் கதவைத் திறந்துகொண்டு வருகிறான். தீனாம்மா உடனே அவனுடைய ஸ்டூடியோவிற்குப் போய் பார்க்கிறாள்.  முழுமை அடையாத ஒரு ஓவியம்.  அது அவள்தான்.  அவள் அவனைப் பார்க்கிறாள்.  அந்த ஓவியத்தை தூரிகையை எடுத்து அங்கும் இங்கும் தீட்டி அந்த ஓவியத்தை முடித்து விடுகிறான்.   அந்த ஓவியத்தைப் பார்த்து, üஅந்தப் பெண்ணின் அழகான இதயத்தை நான் பார்க்கிறேன்,ý என்கிறான். அன்று முதன்முறையாக தன் கணவன் மாரிபில் தலையை சாய்த்தாள் என்று கதையை முடிக்கிறார் பி கேசவதேவ்.   விறுவிறுவென்று படித்து முடித்து விடுகிற கதை.
இன்னொரு கதையான பேருந்து பயணம் என்ற கதை.  பத்மநாபன் கொல்லம் முன்சீப் நீதிமன்றத்தில் தலைமை க்ளார்க்காகக பணியாற்றுகிறார்.  மூன்று நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை கிடைத்ததால் மனைவியின் வற்புறுத்தலால் மாமியார் வீட்டில் குடும்பத்துடன் தங்கி விடுகிறார். 
முந்தைய நாள் சாயங்காலம் கொல்லத்திற்கு திரும்பிப் போக வேண்டும் என்று நினைக்கிறார்.  மாமியாரின் வற்புறுத்தலுக்காக காலையில் கிளம்புகிறார்.  பஸ் கிடைக்காமல் இதனால் ஏற்படும் மனக்கிளற்சியை வெளிப்படுத்துகிறார் பத்மநாபன் மூலமாக.
இந்த இரண்டு கதைகளும் ஓரளவு சுலபமாகப் படிக்கக் கூடிய கதைகளாக எழுதியிருக்கிறார் கேசவதேவ். இரண்டாவது கதையில் ஒரு சம்பவத்தை வைத்துக்கொண்டு கதையைப் பின்னியிருக்கிறார்.  உண்மையில்  பிற மொழி இலக்கியங்களை தமிழாக்கிக்கொண்டு வருகிறது இனிய உதயம்.  இப்பபோதும் தொடர்ந்து வருகிறதா என்று தெரியவில்லை.  



Sunday, September 8, 2019

ஏழாம் நாளின் வாசிப்பனுபவம் (08.09.2019)

ஏழாம் நாளின் வாசிப்பனுபவம் (08.09.2019)



அழகியசிங்கர்





நான் கடந்த சில தினங்களாகப் புத்தகம் படித்துக்கொண்டிருக்கிறேன். முழுதாக ஒரு நாவலோ அதிகப் பக்கங்கள் உள்ள புத்தகமோ என்னால் குறிப்பிட்ட நேரத்திற்குள் படிக்க முடிவதில்லை.  நானே எனக்குள் ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு படிப்பதால் பல புத்தகங்களுடன் தொடர்பு கொள்ள முடிகிறது.  
தேவதச்சனின் மர்ம நபர் என்ற புத்தகத்தை இவ்வளவுநாளும் பார்த்துக்கொண்டுதான் இருந்தேன்.  நேற்று எடுத்துப் படித்துவிட்டேன். முழுவதும் இல்லாவிட்டாலும் ஓரளவாவது.  
அதேபோல் புதுமைப்பித்தன் கதைகள் சிலவற்றைப் படித்தேன்.  அதில் ஒருநாள் கழிந்தது இன்னும் ஒரு முறை படிக்க வேண்டும்.  அதேபோல் தேவதச்சனின் மர்ம நபர் என்ற கவிதையைப் படிக்க வேண்டும். 
நான் இன்னொரு புத்தகத்தை எடுத்துப்படிக்கும்போது ஏற்கனவே படித்த புத்தகங்களையும் ஞாபகம் வைத்துக் கொள்ளுகிறேன்.  
இப்படி திட்டம்போட்டு படித்தால்தான் உண்டு.  மேலும் ஒரு எழுத்தாளன் இன்னொரு எழுத்தாளனின் புத்தகத்தைப் படிக்கும்போது அவனே ஒரு வாசகனாக மாறி விடுகிறான்.  கநாசு ஒருபக்கம் புத்தகங்களைப் படித்துக்கொண்டும் இன்னொரு பக்கம் எழுதிக்கொண்டும் இருப்பார்.  புதுமைப்பித்தன் பற்றியும் மௌனியைப் பற்றியும் கநாசுதான் எழுதியிருப்பார்.  ஆனால் அவர்கள் இருவரும் கநாசுவைப் பற்றி எழுதவில்லை.
நான் எடுத்துக்கொண்டு படித்த புத்தகங்கள் இரண்டு.  அதைப்பற்றி இங்குக் குறிப்பிட விரும்புகிறேன்.  ஒரு புத்தகம் பறந்து திரியும் ஆடு என்ற சிறார் நாவல்.  எழுதியவர் எஸ் ராமகிருஷ்ணன்.  ராமகிருஷ்ணனைப் பற்றியும் ஒரு வார்த்தை சொல்ல வேண்டும்.  அவர் மற்ற படைப்பாளிகளின் புத்தகங்கள் பற்றியும் அவருடைய வாசகர்களுக்குச் சொல்லி புத்தகங்களை வாங்க வைத்திருக்கிறார்.
சிறார்களுக்கு நாவல் எழுதுவது அவ்வளவு சுலபமில்லை.  அவர்களுக்கு அறிவுரை கூறுவதுபோல கதை சொல்லவேண்டும்.  கதையும் படிக்கச் சுவாரசியமாக இருக்க வேண்டும்.
யக்கர் என்ற வயதானவர் பற்றி இந் நாவல்.  நாற்பது ஆடுகள் வைத்துக்கொண்டு மேய்த்துக் கொண்டிருப்பவர்.  அவர் திருமணம் செய்துகொள்ளவில்லை.  ஆடுகளும் அவரும்தான்.  யக்கர் ஆடுகளை மேய்க்கும் இடம் பூமியில் இல்லை.  வானவெளியில்.  ஒவ்வொரு ஆட்டிற்கும் அவர் பெயர் வைத்திருக்கிறார்.  அந்தப் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டால் ஆடுகள் திரும்பிப் பார்க்கும்.
இந்த நாவலை ஒரே மூச்சில் படித்து விடலாம்.  40 ஆடுகளில் ஒரு ஆடு குருட்டு ஆடு.  குட்டி ஆடு.  எப்போதும் மேய்ந்து விட்டு பூமிக்குத் திரும்பி வரும்போது, டுவிங் என்ற குட்டி ஆடு மாத்திரம் திரும்பவில்லை.  காணாமல் போய் விடுகிறது.  
லிமா என்ற ஆட்டின் குட்டிதான் டுவிங்.  அது காணாமல் போய்விடுவதை யக்கரிடம் சொல்கிறது.  அன்று இருட்டானதால் வானவெளிக்குச் செல்ல முடியாது.  அடுத்த நாள்தான் போக முடியும்
டுவிங்கின் பயணம்தான் இந் நாவல்.  மேகம், வண்ணத்துப்பூச்சி, பாறை, சூரியகாந்திப் பூ என்று ஒவ்வொருவரைச் சந்திக்கிறது.  அப்படி சந்தித்துப் பேசும்போது யக்கர் சொன்னார் என்று சந்திக்கின்றவர்களிடம் தன் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கிறது.   இறுதியில் யக்கர் ஆட்டுக்குட்டியைக் கண்டு பிடித்துவிடுகிறது.  
அனுபவம் தானே ஒருவரை வளரவைக்கிறது.  நீ இனிமேலும் நீ ஆட்டுக்குட்டி இல்லை. வளர்ந்த ஆடு என்கிறான் யக்கர்.  சிறார் நாவல்தான் இது.  ஆனால் ஒவ்வொரு முறையும் அலுக்காமல் வாசிக்க முடியும் என்று தோன்றுகிறது. இந்த சிறார் நாவலைப் பொறுத்தவரை இராமகிருஷ்ணனின் கற்பனை வளம் அபாரமாக இருக்கிறது.  
நான் படித்த இன்னொரு புத்தகம் துக்கத்தை முடிவுக்குக் கொண்டு வர முடியுமா என்ற ஜே கிருஷ்ணமூர்த்தியின் புத்தகம்.  நான் ஒரு கிருஷ்ணமூர்த்தி பைத்தியம்.  என் லைப்பரரியில் டஜன் கணக்கில் கிருஷ்ணமூர்த்தி புத்தகங்கள் இருக்கின்றன.  கீரீன்வேஸ் ரேடிற்கு செல்லும்போது வஸந்த விஹாரில் நுழைந்து கிருஷ்ணமூர்த்தி புத்தகங்களை வாங்கிக்கொண்டு வந்து விடுவேன்.  தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட இப் புத்தகம் ரூ.10தான். 
துக்கத்தை நான் ஏன் ஏற்றுக்கொள்ளúவ்டும்? என்று கேட்கிறார் கிருஷ்ணமூர்த்தி.  இது மனதின் இன்னொரு விதமான மேலோட்டமான செயல்பாடே என்கிறார.  இறுதியில் இப்படிக் குறிப்பிடுகிறார் நான் துக்கத்தைப் புரிந்து கொள்ளவிரும்புகிறேன் அது எதைக் குறிக்கிறது என்று காண விரும்புகிறேன்.  அதன் அழகை, அருவருப்பை அதன் அளவுகடந்த ஆற்றலை அறிந்துகொள்ள விரும்புகிறேன்.   அதை மாற்ற முடியாது என்கிறார்.  அதைப் புரிந்துகொள்ளவதன் மூலம்தான் முற்றாக அதிலிருந்து விலக முடியும். முற்றாக விடும்படும்போதுதான் பேரறிவு உருவாகும்.