Sunday, October 13, 2019

முப்பத்தொன்பதாம் நாளின் வாசிப்பனுபவம் (10.10.2019)



அழகியசிங்கர்





இந்த முறை டபுள் டக்கர் வண்டியில் பெங்களூர் பயணம் செய்தேன்.  பகலில்தான் நான் பயணிக்க விரும்புவேன்.  புத்தகம் படிப்பது என் வழக்கம். என்ன புத்தகம் படிப்பது என்பதைப் பற்றிச் சிந்தித்தேன்.  ஒரு தடியான புத்தகத்தை எடுத்துக்கொண்டு செல்வது என்று தீர்மானித்தேன்.
உடனே கண்ணில் பட்டது.  பா ராகவன் எழுதிய யதி என்ற நாவல்.  926 பக்கங்கள் கொண்ட இந்த நாவலை படிப்பது  சாதாரணமான விஷயமல்ல.  ஆனால் இம்மாதிரியான ரயில் பயணத்தின் போதுதான் இந்த நாவலைப் படிக்க முயற்சி செய்ய வேண்டும். 
வண்டியில் அமர்ந்தவுடன் தடியான புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டு பிரித்தேன்.  உண்மையில் என்னுடன் பயணம் செய்பவர்கள் இம்மாதிரியான புத்தகத்தை எடுத்துப் படிக்கிறானே  என்று தெரியவேண்டும் என்று நினைத்தேன்.
யாராவது எதாவது கேள்வி கேட்பார்களா என்றுகூட ஆவலுடன் எதிர்பார்த்தேன்.  ஏமாந்து போய்விட்டேன்.  யாரும் கேட்கவில்லை. ஆனால் நான் அசரவில்லை.  யதியைப் படிக்க ஆரம்பித்தேன்.  கொஞ்சம் கண்ணைச் சுழட்ட ஆரம்பித்தது.  சரி தூங்குவோம் என்று தூங்கினேன்.  ஆனால் யதியை என் மடியில் வைத்துக்கொண்டு தூக்கம் போட்டேன்.
திரும்பவும் கண் விழித்தபோது யதி.  பக்கங்கள் வேகமாகப் புரண்டன. வண்டியை விட்டு இறங்கியவுடன் எனக்குத் திருப்தியாக இருந்தது. கிட்டத்தட்ட 200 பக்கங்கள் தாண்டி விட்டேன்.  நான் உறவினர் வீட்டு கிரஹப்பிரவேசத்திற்குத்தான் பெங்களூர் வந்தேன். 
உறவினர் வீட்டுக்கு வந்தபின்னும் யதியை விடவில்லை.  முதல் நாள் பூஜை. அடுத்தநாள்தான் கிரஹப்பிரவேசம்.  முதல் நாள் பூஜையின்போதே யதி புத்தகத்தை எடுத்துக்கொண்டு போய்விட்டேன்.  
அங்கே யதி புத்தகத்தை எல்லோரும் பார்க்கும்படி பிரித்துப் படித்துக்கொண்டிருந்தேன்.  யாரும் என்னை அதிசயமாகப் பார்க்கவில்லை. என்னடா இவன் இத்தனை தடிப் புத்தகத்தைப் படிக்கிறானே என்ன என்று கேட்போம் என்று யாருக்கும் தோன்றவில்லை.  என்னை வினோதமான மனிதனைப் பார்ப்பதுபோல் பார்த்தார்கள்.
அடுத்தநாள் நிறையா பேர்கள் கிரஹப் பிரவேசத்திற்கு வந்தார்கள். ம்..யாரும் என்னைப் பொருட்படுத்தவில்லை.  கன்னடத்தில் பூஜை செய்யும் குருக்கள் மட்டும் என் புத்தகத்தைக் கேட்டு வாங்கிக்கொண்டு திரும்பவும் கொடுத்து விட்டார்.  அவர் கன்னடத்தில் பூஜை செய்து கொண்டிருந்தார்.  
மதியம் மேல் நானும் நண்பரும் ப்ளாசம்ஸ் போய் புத்தகங்களை வாங்கினோம்.  உண்மையில் ரூ.600 கொடுத்துத்தான் புத்தகங்கள் வாங்கினேன்.  இன்னும் கூட வாங்கியிருக்கலாமென்று தோன்றியது. ஹெம்மிங் வேயில்ன் கடைசி நாவல் ஐலெண்ட்ஸ் இன் த ஸ்டிரீம்) வாங்கிக்கொணடு வந்தேன். ப்ளாசம்ஸில் இது மாதிரி பழைய புத்தகங்கள் கிடைக்கும். ஆனால் விலையும் அதிகம்தான். 
என் நண்பர் என் பிறந்தநாளிற்கு ஒரு புத்தகம் அன்பளிப்பாகத் தந்தார்.  84 சாரிங்க க்ராஸ் ரோடு என்ற கடிதங்களால் ஆன நாவல். நான் அமெரிக்காவிலிருந்து வந்ததிலிருந்து ஆங்கில நாவல்களை முழுவதும் படித்ததில்லை. 
அடுத்தநாள் நான் பாரதி மணி வீட்டிற்கு நண்பரோடு சென்றேன்.  அவர் சில புத்தகங்களை அன்பளிப்பாகக் கொடுத்தார்.  திரும்பவும் சென்னை.  இந்தமுறை லால்பாக்.  லால் பாக் வண்டியில் உட்கார்ந்து வருவது சௌகரியமாக இருக்கிறது.  காலை நன்றாக நீட்ட முடிகிறது.  நான் ஜன்னல் பக்கத்தில் உட்கார்ந்திருந்தேன்.  என் பக்கத்திலிருந்தவர்கள் ரொம்ப பருமனாக இருந்தார்கள்.  அவர்களைத் தாண்டிப் போவது கொஞ்சம் கஷ்டமாக இருந்தது.   திரும்பவும் புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டேன்.  படிக்க ஆரம்பித்தபிறகு நேரம் போனதே தெரியவில்லை.
ஆனால் சென்னை வந்திறங்கியபோது 533 பக்கங்கள்தான் படிக்க முடிந்தது.  இன்னும் 925 பக்கங்கள் இருக்கின்றன.  இந்த நாவலைச் சிறப்பாக எழுதியிருக்கிறார் ராகவன்.  யதியைப் படிக்கும்போது எனக்கு இன்னும் இரண்டு நாவல்கள் ஞாபகத்திற்கு வந்தன.  ஒன்று: அசோகமித்திரனின் மானசரோவர்.  இரண்டாவது க.நா.சுவின் அவதூதர்.  நான் குறிப்பிடுகிற இந்த இரண்டு நாவல்களுக்கும் யதிக்கும் எந்த சம்பந்தமுமில்லை.  இந்த நாவலைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் நாவலை முடித்துவிட்டுத்தான் சொல்லவேண்டும்.  தமிழுக்கு இது புதிய முயற்சி என்று படுகிறது. எல்லோருக்கும் புரிகிற மாதிரி சரளமான நடையில் எழுதியிருக்கிறார்.
    

No comments:

Post a Comment