Wednesday, September 18, 2019

பதினைந்தாம் நாளின் வாசிப்பனுபவம் (16.09.2019)

பதினைந்தாம் நாளின் வாசிப்பனுபவம் (16.09.2019)



அழகியசிங்கர்



எந்தச் சமயத்தில் எந்தப் புத்தகம் படிக்க வேண்டுமென்ற குழப்பம் என்னுள் இருந்துகொண்டே இருக்கும்.  ஒரு மணி நேரத்தில் பெரும்பாலும் ஒரு புத்தகத்தை என்னால் படித்து முடிக்க முடியாது.  ஆனாலும் படித்தவரை அந்தப் புத்தகத்தைப் பற்றிச் சொல்வது தீர்மானம் செய்துள்ளேன்.
இன்று நான் படித்த புத்தகம் ஜென் சதை ஜென் எலும்புகள் என்ற புத்தகம்.  பால் ரெப்ஸ், நியோஜென் சென்ஸகி எழுதிய ஆங்கிலப் புத்தகத்தின் தமிழாக்கம். தமிழில் சேஷையா ரவி செய்திருக்கிறார்.  மீள்பார்வை ஆர் சிவக்குமார்.  அடையாளம் வெளியீடாக இந்தப் புத்தகம் வந்திருக்கிறது.
ஒவ்வொருவரும் கட்டாயம் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டிய புத்தகம்.  ஜென் என்பது ஓர் அனுபவம்.  கிட்டத்தட்ட 101 கதைகள் மொழிபெயர்த்துள்ளார்கள்.  இதைத் தவிர வாசலற்ற வாசல் என்ற தலைப்பில் சில தத்துவங்கள். பின் மையப்படுத்துதல் என்ற தலைப்பில் இறுதியில் ஜென் என்பது என்ன என்ற ஒரு பக்கத்தில் விளக்கம்.  இத்தனையும் இந்தப் புத்தகத்தில் பதிவாகி உள்ளது.
ஜென் என்பது என்ன? என்ற கேள்வியை எழுப்பி பதில் கொடுக்கிறார்கள்.  விருப்பப்பட்டால் முயலுங்கள்.  ஆனால் ஜென் தானாகவே வருகிறது.  உண்மையான ஜென், தினசரி வாழ்வில் தன்னைக் காட்டிக்கொள்கிறது.  அது செயலாக உள்ள பிரக்ஞை.  வரம்புக்குட்பட்ட எந்த விழிப்புணர்வையும் விடக் கூடுதலாக அது நம் எல்லையற்ற இயல்பை அடையும் எல்லாக் கதவுகளையும் திறக்கிறது. 
இனாயத் கான் ஒரு இந்துக் கதையைச் சொல்கிறார்.  ஒரு மீன், ராணி மீனிடம் போய்க் கேட்டது.  üநான் கடலைப் பற்றி எப்போதும் கேள்விப்பட்டுக்கொண்டிருக்கிறேன்.  அதென்ன கடல்? அது எங்கே இருக்கிறது?ý 
ராணி மீன் விளக்கியது : 'நீ வாழ்வதும், அசைவதும், உன் உயர் இருப்பதும் கடலில்தான்.  கடல் உனக்குள்ளும் இருக்கிறது. நீ இல்லாமலும் இருக்கிறது.  நீ கடலால் ஆனவள்.  நீ கடலில்தான் முடிவாய். கடல் உன் சொந்த உயிரைப் போல உன்னைச் சூழ்ந்துள்ளது.'  ஏதோ புரிகிற மாதிரி இருக்கிறதா?  அதுதான் ஜென்.
இதில் பெரும்பாலும் உள்ள ஜென் கதைகள் அரைப்பக்கம், முக்கால் பக்கம், முழுப்பக்கம், ஏன் கால் பக்கம் கூட.  ஒவ்வொன்றையும் நிதானமாக வாசிக்க வேண்டும்.  ஏன் படித்துவிட்டு கண்ணை மூடிக்கொண்டு யோசிக்க வேண்டும்.  அப்போதுதான் ஜென் புரிகிற மாதிரி தோன்றும்.  ஜென் அனுபவத்திற்கு கொஞ்சம் கொஞ்சமாகப் போகிறீர்கள் என்று அர்த்தம்.
நான் இந்தப் புத்தகத்தைப் படித்து முடிக்கவில்லை.  படித்து முடித்தபின்னும் முடித்துவிட்டேன் என்றும் சொல்ல முடியாது.  அந்த அளவிற்கு ஆழமாகக் கருத்துக்களைக் கொண்டது.  புரிகிற மாதிரி இருந்தாலும், புரியாத மாதிரி தோன்றும்.  நன்றாக யோசிக்க வைக்கும்.
இந்தப் புத்தகத்தைத் தொகுத்தவர்கள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.  பால் ரெப்ஸ் ஜென் தத்துவங்களால் தூண்டப்பட்ட பல்வேறு அ-புனைவுகளையும், கவிதைகளையும் இயற்றியிருக்கிறார்.  இவற்றுள் üஜென் டெலக்ராம்ஸ்ý (ஜென் தந்திகள்) நூலும் ஒன்று.  இவர் இந்தியா, நார்வே, ஜப்பான் என்று பல நாடுகளில் வாழ்ந்த அமெரிக்கர்.  வாழ்நாள் முழுவதும் ஞானத் தேடல்களில் ஆழ்ந்திருப்பவர்.  வயதானாலும் மகிழ்ச்சியைப் பெற முடியும் என்ற நம்பிக்கை கொண்டவர்.
நியோஜென் சென்ஸகி சர்வதேச அளவில் புகழ்பெற்ற புத்த ஞானி.  தனக்கென்று ஒரு வீடு இல்லாத அவர், ஒரு மடாலயத்திருந்து மற்றொன்றுக்கு மாறியபடி தேசமெங்கும் அலைந்து கல்வி பயின்றுவந்தார்.  அவருடைய பயணம் காலப்போக்கில் அவரை அமெரிக்காவிற்குக் கொண்டுவந்து சேர்த்தது.  
இந்தப் புத்தகத்தின் பின் அட்டையில் ஒரு வாசகம்.  பத்து லட்சத்திற்கும் அதிகமான பிரதிகள் விற்ற üஜென் சதை, ஜென் எலும்புகள்ý எண்ணற்ற மக்களின் வாழ்வுக்கு ஒரு தூண்டுதலாக இருக்கிறது.  
உண்மைதான்.  இந்தப் புத்தகம் படிக்கும்போது அந்த எண்ணம் உண்டாகாமல் இல்லை. ஒரு ஜென் கதையோடு முடிப்போம்.

1. ஒரு கோப்பைத் தேநீர்

மெய்ஜி காலத்தில் (1868-1912) ஜென்னைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு வந்த பல்கலைக் கழகப் பேராசிரியர் ஒருவரை ஜப்பானிய குரு நான்-இன் வரவேற்றார்.
நான்-இன் விருந்தினரின் கோப்பையில் தேநீர் ஊற்றினார். அது நிரம்பிவிட்டது.  இருந்தும் அவர் தொடர்ந்து ஊற்றிக்கொண்டே இருந்தார்.
கோப்பை நிரம்பி வழிவதைக் கவனித்த பேராசிரியரால் அதற்கும் மேல் தன்னைக் கட்டுப்படுத்த முடியவில்லை.  'நிரம்பிவிட்டது.  இதற்கும் மேல் கொள்ளாது,' என்றார்.  
'இந்தக் கோப்பை மாதிரிதான்ý என்ற நான்-இன், üநீங்கள் உங்களை சொந்த கருத்துகளையும் எண்ணங்களையும் கொண்டு நிரப்பி வைத்திருக்கிறீர்கள்.  முதலில் நீங்கள் உங்கள் கோப்பையைக் காலி செய்யாவிட்டால் நான் எப்படி உங்களுக்கு ஜென்னைக் காட்ட முடியும்?' என்றார்.
அரைப் பக்கம்தானே என்று நாம் படித்து விடலாம்.  ஆனால் யோசிக்க யோசிக்க நாம் எங்கோ போய்விடுவோம்.

No comments:

Post a Comment