என் நண்பர் வேணுகோபாலனின் 'தர்ப்பண சுந்தரி' என்ற கதைத் தொகுப்பு
அழகியசிங்கர்
எஸ்வி வேணுகோபலனின் 'தர்ப்பண சுந்தரி' என்ற சிறுகதையை இன்று (25.12.2019) மதியம் 2 மணிக்குப் படித்து முடித்து விட்டேன். இது குறித்து மாலை பேச வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார் எஸ்வி.வி.
எஸ்.வி.வி என் பால்ய காலத்து நண்பர். மாம்பலத்தில் நானும் அவரும் நடந்து போகாத பாதை கிடையாது. என் ஒவ்வொரு அசைவும் அவருக்கும் அவருடைய ஒவ்வொரு அசைவும் எனக்கும் தெரியும்.
நான் இந்தத் தொகுப்பைப் படித்தபோது பழைய கால நினைவுக்குப் போய்விட்டேன். இதில் ஒவ்வொரு கதையாக எழுதியதைப் படித்தேன். அவர் எந்தச் சுழலில் இந்தக் கதையை எழுதினார் என்று எனக்குப் புரிய ஆரம்பித்தது.
நாங்கள் கதைகள் எழுத ஆரம்பித்தபோது பத்திரிகை பத்திரிகையாக அலைந்தோம். எந்தப் பத்திரிகையில் கதைகள் பிரசுரமாகும் என்று. நாங்கள் என்கிறபோது நானும், எஸ்.வி.வி மட்டுமல்ல. சுவாமிநாதன் என்கிற என் ஒன்றுவிட்ட சகோதரனையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அப்போதுதான் 'தூதுவன்' என்ற கையெழுத்துப் பத்திரிகையை சுவாமிநாதன் ஆரம்பித்தார் அதில் எழுத ஆரம்பித்தேன். ஆனால் எஸ்.வி.வி அதில் எழுதினாரா என்று தெரியவில்லை. ஆனால் சுவாமிநாதன் கூடிய விரைவில் 'மலர்த்தும்பி" என்ற சிறு சஞ்சிகையைத் தொடங்கினார். அதில் நானும் எஸ்.வி.வியும் புகுந்துகொண்டோம்.
நாங்கள் மூவரும்தான் பிரதான அங்கம் வகித்தோம். எஸ.வி.வி 'சுகந்தன்' என்ற பெயரில் கவிதைகள் எழுதுவது, வேணுகோபலன் என்ற பெயரில் கதைகள் எழுதுவது என்று பத்திரிகை முழுவதும் எடுத்துக்கொண்டார். நானும் என் இயற்பெயரான மௌலி என்று வைத்துக்கொண்டு கவிதை, கதைகள் எழுத ஆரம்பித்தேன். இத் தொகுப்பில் 'தீர்த்தம்' என்ற கதையில் எஸ்.வி.வி என்னையும் என் சகோதரரைப் பற்றிதான் எழுதியிருப்பார். ஒரு காட்சி படிமம் அந்தக் கதை.
உண்மையில் எங்கள் எழுத்து ஒரு இரண்டுகெட்டான் எழுத்தாகத்தான் இருந்தது. கணையாழி, தீபம் படித்துக்கொண்டிருந்ததால் அதில் வரும் கதைகள் கவிதைகள் எங்களை வசப்படுத்தத் தவறவில்லை. ஆனாலும் எங்களால் கணையாழி தீபத்திற்கெல்லாம் எழுத முடியாது என்று அப்போது நினைத்தோம்.
எங்களுடைய 'மலர் தும்பி' பத்திரிகையிலேயே நாங்கள் திருப்தி அடைந்து விட்டோம். மலர் தும்பியை அச்சிடுவோம். பெரும்பாலும் சுவாமிநாதன்தான் அதிக செலவு செய்து அச்சிடுவார். பத்திரிகையை வங்கியில் உள்ள நண்பர்களிடம் வினியோகிப்பேன். பெரும்பாலோர் வேண்டா வெறுப்பாக வாங்கி வைத்துக்கொள்வார்கள்.
ஒரு கட்டத்தில் 'மலர் தும்பி' நின்றுவிட்டது. அதற்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை என்பதால் அலுத்துப்போய் சுவாமிநாதன் நிறுத்தி விட்டார்.
எஸ்.வி.வியும் அதன் பின் எழுதுவதை நிறுத்திவிட்டாரென்று நினைக்கிறேன். சுவாமிநாதன் பெரிய பத்திரிகைகளில் எழுத ஆரம்பித்து ஓரளவு வெற்றி பெற்றார். அவருடைய நீண்ட நாவல் ஒன்று ஆனந்தவிகடனில் பிரசுரமானது.
எஸ்.வி.வி நான் பணிபுரிந்த வங்கியில் சேர்ந்தார். எஸ்,வி.வி திறமையானவர். எதையும் பார்த்த மாத்திரத்தில் கிரஹித்துக்கொண்டு அப்படியே சொல்வார். ஒரு சுஜாதா கதையைப் படித்தாரென்றால் அதை மனப்பாடமாக ஒப்பிப்பார்.
எஸ்.வி.வி ஏன் தொடர்ந்து எழுதவில்லை என்று நான் யோசித்துப்பார்க்கிறேன். 'மலர் தும்பியில்' 1979ல் எழுதிய கதைக்குப் பிறகு அவர் கதை எழுதியது 1985ஆம் ஆண்டு. இந்த இடைப்பட்ட ஆண்டுகளில் அவர் வங்கியில் சேர்ந்து டிரேட் யூனியனில் முக்கியப் பங்கு எடுத்துக்கொண்டு விட்டார். அது அவர் எழுத்தைப் பாதித்ததோ என்று எனக்குத் தோன்றும்.
மேலும் அவர் எழுத்தில் தீவிரத் தன்மை எழுத்துமில்லை, பத்திரிகைத் தனமாகக் கதை எழுதும் தன்மையும் இல்லை. அதனால் ஜனரஞ்சகமாக இயங்கும் பத்திரிகைகளில் அவருக்குப் பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை.
உண்மையில் அவருக்குக் கவிதை எழுதுவதில் ரொம்பவும் ஆர்வம். இரண்டுமே அவர் பல ஆண்டுகளாகத் தொடரவில்லை என்று நினைக்கிறேன்.
அதே மாதிரி அவர் தீவிரத்தனமாக கதைகளை சிறுபத்திரிகைலும் தொடரவில்லை. அப்போது மலர்தும்பியை விட்டால் வேறு சிறுபத்திரிகை தெரியவுமில்லை. இத் தொகுப்பில் உள்ள 'கவித்துவம்' என்ற கதை கணையாழியில் 1985ல் வெளிவந்துள்ளது.
தொழிலாளர் இயக்கத்தோடு அவர் இயங்கியதால் அவரால் தொடர்ந்து கதையும் கவிதையும் எழுதத் தோன்றவில்லை என்று நினைக்கிறேன். டிரேட் யூனியனில் ஏற்பட்ட பக்தியால் அவர் படைப்புகளில் சிவப்பு கலர் பூசப்பட்டிருக்குமா என்று நினைத்தேன். நல்லகாலம் இல்லை. ஆனால் அவர் அதனால்தான் எழுத முடியாமல் போய்விட்டதா என்றும் தோன்றியது. அவர் கதை கவிதை எழுதவில்லை என்று நினைத்தேன். ஆனால் அவர் கட்டுரைகளை ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதிக் கொண்டிருந்தார். எல்லாம் நாட்டின் நடைமுறை சிக்கல்களை. அரசியலை.
நானும் அவரும் நட்புடன் இருந்த காலத்தில் அவருக்குப் பேச்சுத் திறமையெல்லாம் கிடையாது. (எனக்கு எப்போதும் கிடையாது) டிரெட் யூனியனில் சேர்ந்து இந்தத் திறமையெல்லாம் அவர் வளர்த்துக்கொண்டார். எதையும் எப்போதும் வேண்டுமானாலும் உடனே பேசுவார். யாருக்கு எந்த உதவி தேவைப்பட்டாலும் உடனே போய் விடுவார்.
அவர் எழுத்தில் அவருக்கு அலாதியான திறமை இருந்தாலும் அவர் கட்டுரைகளில்தான் அதிகம் கவனம் செலுத்தினார். அவ்வளவாய் கதைகள எழுதவில்லை, கவிதைகள் எழுதவில்லை. அல்லது இந்தப் புத்தகத்தைத் தவிர எனக்கு அவ்வளவாய் தெரியவில்லை.
இந்தப் புத்தகத்தை சற்றுமுன்தான் முழுவதும் படித்து முடித்தேன். அவருடைய எழுத்து வெகுஜன வாசகரை கவர்ந்திழுழக்கும் எழுத்தில்லை.
கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் அவர் எழுத்து எதை மையப் படுத்தி எழுதப்பட்டிருக்கிறது. 'மரணம்.' இவருடைய இத் தொகுப்பில் உள்ள பெரும்பாலான கதைகள் மரணம் என்பதைச் சுற்றி சுற்றி வருகிறதோ என்று தோன்றுகிறது.
'கடைசி நாள் படுக்கை' என்ற கதையில் அவருடைய சகோதரியின் மரணத்தை எழுதியிருப்பார். உருக்கமாக இருக்கும். பெரும்பாலும் அவர் கதைகளில் அவரைச் சுற்றி நிகழ்கிற நிகழ்ச்சிகளாக இருக்கும். அதன் மூலம் ஒரு அர்த்தத்தைக் கண்டு பிடிப்பார்.
'சூடாமணி மாமி\ என்ற இன்னொரு கதை. அதில் வருகிற வரிகளைப் படிக்கிறேன். 'உயிர் கடிகாரம் நின்ற இடத்தில் அது காட்டும் காலத்தைப் பற்றி இனி என்ன கேள்வி, அது காலத்தைக் கடந்து விட்டது இப்போது.'
மூன்றாவது 'மாநகர்ப் புதைக்குழி" என்ற கதை. குழாய் ரிப்பேர் செய்ய வந்த பையன் ரிப்பேர் எசய்ய வந்த இடத்தில் பஸ் மோதி இறந்து விடுவான்.
'முட்டுச் சந்து' என்ற இன்னொரு கதை. இரண்டு கதைகளில் தற்கெகாலை செய்ய முயன்று தப்பிப்பதுபோல் வரும்.
'தர்ப்பண சுந்தரி' என்ற கதை மேல் ஜாதி பெண்ணை கீழ் ஜாதி பையன் திருமணம் செய்து கொண்டதால் குடும்பங்களில் ஏற்படும் பிளைவை விவரித்துக்கொண்டு போகிறார்.
இவர் கதைகளை எப்படி எழுத வேண்டுமென்பதில் ஒரு ஒழுங்கு இருக்கிறது. ' மரணம் முன் வைத்து எழுதப்படும் கவிதைகள், கதைகள் தத்துவ தரிசனமாக நகர்கின்றன' என்கிறார் வேணுகோபாலன். எல்லாம் சரிதான் இவர் மணரம் என்கிற பொதுத் தன்மையை மட்டும் கதைகளாக வராமல், வாழ்க்கையின் வேறு பல அம்மசங்களையும் கதைகளாக மாற்றியிருக்கலாம்.
'உதிர்ந்தும் உதிராத' என்ற புத்தகதில் எல்லாம் 'அஞ்சலி கட்டுரைகள்'. இப்படி தலைப்பு கொடுத்து எழுதுவதை விட மறக்க முடியாத மனிதர்கள் என்று தலைப்பில் இதைக் கொண்டு வந்திருக்கலாம். இது என் வேண்டுகோள்தான்.
இந்த இரண்டு புத்தகங்களும் பாரதி புத்தகாலயத்தில் விற்பனைக்ககு கிடைக்கும். தொலைபேசி : 044-24332424.
No comments:
Post a Comment