Saturday, October 5, 2019

முப்பதொன்றாம் நாளின் வாசிப்பனுபவம் (02.10.2019)



அழகியசிங்கர்




ராஜேஸ்குமார் எழுத்துலகில் 50 ஆண்டு பாராட்டு விழா  இன்று கவிக்கோ மன்றத்தில் 5.30 மணிக்கு நடைபெறுகிறது.  ராஜேஸ்குமார் வாசகர்கள் இதை நடத்துகிறார்கள். 
கூட்டத்திற்கு வருபவர்களுக்கு அவருடைய சிறந்த சிறுகதைப் புத்தகத்தை வழங்குகிறார்கள்.
அறுபதுகளில் எட்டாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தபோது நான் துப்பறியும் கதைகளை வாசிப்பதுண்டு.  க்ரவுன் தியேட்டர் எதிரில் பிளாட்பாரக் கடைகளிலிருந்து பி டி சாமி, சிரஞ்சீவி, மாயாவி என்று பலருடைய மர்ம நாவல்களை வாங்கிப் படித்திருக்கிறேன்.  அதை இப்போது முழுக்க முழுக்க மறந்து விட்டேன்.  ஆனால் பின்னால் க்ரைம் நாவல்களுக்கு அதிக மரியாதையை ஏற்படுத்தியவர் சுஜாதா.
ராஜேஸ்குமார் ஐம்பது ஆண்டு எழுத்து வாழ்க்கையில்  1500 க்ரைம் நாவல்கள் எழுதி உள்ளார்.  அசோகமித்திரன் ராஜேஸ்குமாரைப் பற்றி சொல்லும்போது அவருடைய உழைப்பை யாரும் குறைவாக மதிப்பிட முடியாது என்பார்.
அசோக்நகரில் உள்ள பழைய பேப்பர் கடையில் அதிகமாக ராஜேஸ்குமார் புத்தகங்கள் கிடைக்கும்.  15 ரூபாய் புத்தகங்கள் என்றாலும் ரூ,5 க்குக் கிடைக்கும்.  ராஜேஸ்குமார் தவிர இப்போதெல்லாம் புதிதாக நாவல் எழுதுபவர்கள் குறைந்து போய்விட்டார்கள் என்று நினைக்கிறேன்.
ராஜேஸ்குமார் ம்ட்டுமல்ல பாக்கெட் நாவல் மார்க்கெட்டை பிடித்துக்கொண்டவார்கள் தேவிபாலா, சுபா, ரமணிசந்திரன், பட்டுக்கோட்டை பிரபாகரன், இதில் பாலகுமாரனும் ஒருவர்.  பெண் எழுத்தாளர்களில் இந்துமதி, சிவசங்கரி நாவல்களையும் பார்த்திருக்கிறேன்.  நிறைய பெண் எழுத்தாளர்கள் எழுதுகிறார்கள்.  அவர்கள் பெயர்கள் எதுவும் தெரியவில்லை.
இவர்கள் நாவல்கள் ஏன் அதிகமாக விற்கின்றன என்று யோசித்துப் பார்த்தால், மிகக் குறைவான விலையில் விற்கிறார்கள். பொதுவாக பயணத்தின்போது இந்த நாவல்கள் வாங்கிப் படிக்கிறார்கள்.  பேப்பர் கடைகளில் இந்த நாவல்கள் விற்கப்படுகின்றன.  இந்த நாவல்களைப் பெரும்பாலும் படித்து முடித்தவுடன் சில நாட்களில் படித்தோமா என்று கூட மறந்து விடுவோம்.  ஏன் இப்படி சொல்கிறேன் என்றால் 13.11.2015ல் ராஜேஸ்குமார் நாவல் ஒன்றைப் படித்தேன்.  இப்போது அது சுத்தமாக ஞாபகத்தில் இல்லை.  திரும்பவும் படிக்கவேண்டும். படிக்க ஆரம்பித்தால் புதிய நாவலை படிப்பதைப் போல படிக்க வேண்டி உள்ளது.   ராஜேஸ்குமார் 1500 நாவல்கள் எழுதி உள்ளாரே அவரே அத்தனை நாவல்களையும் ஞாபகம் வைத்திருப்பாரா? 
இந்த முறை ராஜேஸ்குமார் நாவல் ஒன்றை எடுத்துப் படிக்கலாமென்று தோன்றியது.  எக்ஸலண்ட் நாவல் என்ற தலைப்பில் ராஜேஸ்குமார் நாவல் ஒள்றை வாங்கினேன். üஎனக்கு நானே பகையானேன்ý என்பது நாவலின் தலைப்பு. இந்த நாவல் எந்த மாதத்தில் எந்த வருடத்தில் வந்தது என்ற குறிப்பு இல்லை.காலையில் எழுந்தவுடன் பத்திரிகைகளில் கொலைகளைப் பற்றி செய்திகள் வராமல் இருப்பதில்லை.  பேர்கள்தான் மாற்றம் விதம்விதமான கொலைகள்.  அதைதான் ராஜேஸ்குமார் கண்ணும் காதும் வைத்து கதைகளாக மாற்றுகிறாரென்று நினைக்கிறேன்
கைக்கு அடக்கமான புத்தகம்.  விலை ரூ.15. 98 பக்கங்களில் இந்த நாவல் எழுதப்பட்டிருக்கிறது. முதலில் கதையை சுலபமாக சொல்லி விடுகிறார்.  படிக்க ஆரம்பிக்கும்போது கீழே வைக்கத் தோன்றவில்லை.  அவ்வளவு விறுவிறுப்பு.  
அக்காவும் தங்கையும்.  அக்கா நர்ஸ். திருமணம் செய்து கொள்ள ஆர்வமில்லாதவள். தங்கையை பெரிய பணக்காரர் ராகவராஜ் அவர் பையன் பார்த்திபனுக்கு கல்யாணம் முடிப்பதற்காக பெண் பார்க்க வருகிறார்கள்.  சாந்தா உடனே சம்மதிக்கவில்லை.  அவள் அக்கா லலிதா அவசரப்படுகிறாள்.  சாந்தா சம்மதிக்கிறாள்.  திருமணம் ஆனவுடன்தான் அவள் கணவன் பார்த்திபனுடைய சொரூபம் தெரிகிறது.  அலுவலகத்தில் பார்க்கவி என்ற பெண்ணுடன் அவனுக்குத் தொடர்பு. அந்தத் தொடர்பால் கருத்தரித்துவிடுகிறாள் பார்கவி. அபார்ஷன் செய்யும்போது இறந்து விடுகிறாள்.  பார்த்திபன்தான் காரணம் அதைப் பற்றி கவலைப்பட வில்லை.  
பார்க்கவி தமபி  கொடுத்தப் புகாரில் போலீஸ் அவனை கேள்வி கேட்கிறது.  இப்படியே போய் கொண்டிருக்கிறது நாவல். ஒருமுறை அவனுக்கும் அவன் மனைவி சாந்தாவுக்கும் ஏற்பட்ட கலகலப்பில் போதை அதிகமாக இருந்த பார்த்திபன் மாடிப்படிகளிலிருந்து தவறி கீழே விழுநது விடுகிறான்.  நினைவு தப்பிப் போகிறது.
ஆபத்தில் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறான்.  பார்த்திபன் உயிரோடு இருக்க வேண்டாம் என்று அவனை கருணை கொலை செய்துவிடுகிறாள் சாந்தா.  96 பக்கங்களில் கடகடவென்று எழுதிக்கொண்டு போகிறார்.  இதுதான் கதை. ராஜேஸ்குமார் மாத்தி மாத்தி பல கதைகள் எழுதிக்கொண்டு போகிறார்.  1500 கதைகள் வரை.  அவர் கதைகளுக்கு இலக்கிய அந்தஸ்து கேட்கவில்லை. அவர் இதுமாதிரியான கதைகளுடன் வாழ்கிறார்.  அவர் கதைகளுக்கு டிமான்ட் இருக்கிறது. 



No comments:

Post a Comment