Wednesday, October 9, 2019

முப்பத்தைந்தாம் நாளின் வாசிப்பனுபவம் (06.10.2019)




அழகியசிங்கர்




ஞாயிற்றுக்கிழமையோடு சேர்த்து (20.10.2019) மூன்று நாட்கள் எதுவும் எழுத முடியாமல் போய்விட்டது.  இதோ இன்று (திங்கள்) மயிலாடுதுறை பயணம்.  கையில் பா.ராகவனின் 'மெல்லினம்' புத்தகம்.  இன்னும் சில புத்தகங்களையும் கொண்டு போயிருக்கிறேன்.  ஆனால் படிக்க முடியுமா என்று தெரியவில்லை.

நான் ஏற்கனவே ஆரம்பித்த 'மெல்லினம்' என்ற பா.ராகவனின் நாவலை ஒரு வழியாகப் படித்து முடித்துவிட்டேன்.  அதன்பின் இன்னொரு நாவலையும் எடுத்துப் படிக்க ஆரம்பித்து விட்டேன்.  கையில் ஒரு நோட்டு எடுத்துக்கொண்டு போனேன். ராகவன் நாவலைப் பற்றி எழுதத் தொடங்கினேன்.

'மெல்லினம்'  என்ற நாவல் 'கல்கி' பத்திரிகையில் தொடர்கதையாக வந்தது.  இந் நாவலைப் படிக்கும்போது கல்கி வாசகர்களுக்காக எழுதப்பட்ட நாவல் போல் தோன்றவில்லை.  நாவல் சொல்லும் முறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளார்.   சிறுவர்களை மையமாக வைத்துக்கொண்டு ஒரு நாவலை எழுதி விட்டார்.  ஒரு விதத்தில் இது சிறார்களின் நாவலா என்பதை ஏற்க முடியவில்லை.  நாவலை எப்படி வேண்டுமானாலும் கட்டமைத்துக் கொள்ளலாம் என்பதற்கு இந்த நாவல் ஒரு உதாரணம். 

நாவலில் ஜக்குவும், குட்டியும் அறிமுகமாகிற விதமே சிறப்பாக இருக்கிறது. ஜக்கு மூலம் பட்டாம்பூச்சியை அறிமுகப்படுத்துகிறார். அறிமுகப்படுத்துகிற விதமே சிறப்பாக இருக்கிறது.  

ஜக்கு பட்டாம்பூச்சியைப் பிடித்து அதைக் கொஞ்சிவிடடு திரும்பவும் பறக்கவிடுவான்.  அவனுடைய அரவணைப்பில் பட்டாம் பூச்சி மயங்கி இருக்கும்.  நாய், பூனையுடன் விளையாடிக்கொண்டிருக்கும்.  ஜக்கு எப்படிப் படிப்பில் கெட்டிக்காரனாக இருக்கிறான் என்ற சந்தேகம் குட்டிக்கு.

குட்டியிடம் ஜக்கு சொல்கிறான் : 'பாடம் படிக்கிறது மட்டும் போதாது குட்டி.  பலதும் கத்துக்கணும்.  அப்பத்தான் சயின்டிஸ்டாக பொயட்டாக இன்னும் என்னென்னவாக நினைக்கிறோமோ அதெல்லாம் முடியும்,' என்கிறான். 

ஆறாம் வகுப்புப் படிக்கும் ஜக்குவும், நான்காம் வகுப்பு படிக்கும் ககுட்டியும் இப்படியெல்லாம் பேசுகிறார்கள். ஜக்குவின் அப்பா - அம்மாவின் அறிமுகம் நடக்கிறது.  ஜக்கு அப்பா குமார் குற்றச் செய்தியாளனாகச் சேர்ந்து ஆறு வருடங்கள் ஆகியிருந்தன.  அவனுடைய மனைவி அழகு சாதன நிறுவனத்தில் கணக்காளராக இருக்கிறாள். 

குட்டி ஜகனைப் பார்த்துக் கேட்கிறாள் : 'நீ எதிர்காலத்துல என்னவாக ஆக விரும்புகிறாய்?'

ஜக்கு சொல்கிறான்.  'நான் ஒரு பட்டாம்பூச்சியாக விரும்புகிறேன்.'

ஜக்கு பட்டாம்பூச்சியுடன் பேசுகிறான்,  ஒரு நாயை வளர்க்கிறான்.  அதற்கு வெங்கடாஜலபதி என்று பெயர்.  மகாபலிபுரம் போய்விட்டு வந்தபின் ஒரு குரங்குடன் அவனுக்கு சகவாசம் உண்டாகிறது.  அவனுடன் குரங்கு பேசுவதுபோல் வருகிறது.  இதெல்லாம் நிஜமா? கற்பனைதான்.  கற்பனையை அப்படி எழுதுகிறார்.  இதெல்லாம் சாத்தியமா? சாத்தியமில்லைதான்.  ஆனால் இதை என்ன சொல்வது? மேஜிக்கல் ரியலிஸம் என்று குறிப்பிடலாமா? அந்தத் தியரியை ராகவன் நாவலில் கொண்டு வருகிறாரா?  ஆனால் ஒரு பிரபல பத்திரிகையில் தொடர்கதையாக இதைக் கொண்டு வருகிறார்.  பெரிய முன்னேற்றம்.  இயல்பான கதை கிடையாது. துணிச்சலான முயற்சி.

ஜக்கு சராசரியாக இருக்கக் கூடாது என்று கதாசரியர் நினைக்கிறார்.  ஒரு இடத்தில் இப்படிக் குறிப்பிடுகிறார்.  

'சராசரிகளின் அந்தரங்கம் அநேகமாக ஒரே மாதிரிதான் இருக்கிறார்கள். இடங்களும் பெயர்களும் சம்பவங்களும் மாறினாலும் உணர்ச்சிகள் ஒரேதரம்தான்.'

அப்பாவின் பழைய டைரிகளை எடுத்து எதாவது காலிப்பக்கங்கள் இருக்குமா என்று தேடுகிறான்.  அந்த டைரியில் அப்பா எழுதி வைத்ததைப் படிக்கிகாற்ன.  

 கல்யாணத்திற்கு முன்னால்  அப்பாவிற்கு ஒரு காதலி இருக்கிறாள். அவள் பெயர் நிர்மலா. டைரி மூலம் இதைத் தெரிந்து கொண்டு விடுகிறான். அன்றிலிருந்து அவன் நிம்மதி இல்லாமல் தவிக்கிறான்.  படிப்பில் கவனம் இல்லாமல் போகிறது.  வகுப்பில் வந்தால் கூட வெறித்து எங்கோ பார்த்துக்கொண்டிருக்கிறான். குட்டியோடு அவன் சரியாகப் பேசவில்லை. அவன் பள்ளிக்கூடத்தில் காதலைப் பற்றி ஏற்கனவே அவனுக்கு ஒரு அனுபவம் இருக்கிறது.  காதலை நோய்க் கிருமியாகப் பார்க்கிறான். அப்பாவின் டைரியில் வரும் காதலை அவன் படிக்கும்போது இப்படி நினைக்கிறான். 'வரிகளில் நிறைந்திருந்த எழுத்துகளிலிருந்து கிருமிகள் எழும்பி வந்து அவனது கண்கள் வழியே ஊடுருவி நேரே அவனது மூளையைத் தாக்கியது..'

அப்பா காதலித்த நிர்மலா அதிகப் பணம் சம்பாதிக்க அமெரிக்கா செல்ல நினைக்கிறாள்.  ஜக்கு அப்பா குமார் இதற்கு சம்மதிக்கவில்லை.  தன்னுடைய அப்பா அம்மாவை தனியாக விட்டுவிட்டு வரப்பிடிக்கவில்லை. காதல் முறிந்து விடுகிறது.  நிர்மலா அமெரிக்கா போய்விட்டாள்.  

இந்த நாவலில் ஒரு இடத்தில் பெயர் குழப்பம் இருக்கிறது.  குட்டியோடு அம்மா பெயர் காஞ்சனா.  நிர்மலா என்ற பெயரி ஜெகன் அப்பா குமாரின் காதலியின் பெயர்.  நிர்மலா குட்டியின் அம்மா பெயராக் ஒரு இடத்தில் தவறுதலாகக் குறிப்பிடப்படுகிறது. எப்படி பா.ராகவன் இந்தத் தவறை தெரியாமல் விட்டுவிட்டார்?

குட்டியிடம் ஜகன் நிறையா பொய் சொல்கிறான்.  அப்பா டைரியில் எழுதிய கனவை தான் கண்டதாக சொல்கிறான்.  பின் வயலட் புடவைக் கட்டிய மேட்டுத் தெரு பொல்லாத ஆவி ஒன்று இரவு தன் அப்பாவை பயமுறுத்துகிறது என்கிறான்.  யாரிடமும் சொல்லாதே என்று குட்டியை மிரட்டுகிறான். குட்டி கேட்கிறாள்.  ஏன் அந்த ஆவி உன் அப்பாவை மட்டும் பயமுறுத்த வேண்டும் என்று.  அதற்கு ஒரு கதை சொல்கிறான்.  

குட்டி ஜகன் சொன்னதையே கற்பனை செய்து ரத்தக்காட்டேரி என்று ரஞ்சனா என்ற வகுப்புத் தோழியிடம் சொல்கிறாள். ரஞ்சனா அவள் அம்மாவிடம் சொல்ல குட்டி அம்மாவுடன் ரஞ்சனா அம்மா சண்டைக்கு வந்து விடுவாள் போல் தோன்றுகிறது.  சின்னவர்கள் பேசிக்கொள்வது பெரியவர்கள் சண்டையாகப் போய்விடும்போலிருக்கிறது. 

ஜக்கு இரண்டாவது டூரில் தனியாக பள்ளிக்கூட ஆசிரியார்கள் மாணவர்களோடு போகிறான்.  மூன்று நாள்.  அவன் ஒருநாள் காணாமல் போய்விடுகிறான்.  வேண்டுமென்றே.  அவன் அப்பாவை இறுதியில் பார்க்கும்போது அவன் குழப்பமெல்லாம் தீர்ந்து விடுகிறது. 

இந்தக் கதையல் ஒன்று புரியவில்லை.  ஆரம்பத்தில் குட்டி நாலாங்க்ளாஸ் படிப்பதாகவும், ஜகன் ஆறாம் வகுப்புப் படிப்பதாகவும் நாவலாசிரியர் எழுதியிருக்கிறார்.  இங்கேதான் லாஜிக் உதைக்கிறது.  ஜகன் எட்டாம் க்ளாஸ் படிக்கிறவனாகவும் குட்டி ஆறாம் க்ளாஸ் படிக்கறவளாகவும் விவரித்தால் சரியாக இருக்கும்போல் தோன்றுகிறது. காதல் என்கிற விஷயம் சிறுவர்களிடம் எப்படிப் புகுந்து போகிறது என்பதை விவரிப்பதுதான் இந்த நாவல். 

இந்த நாவல் 2004 ஆம் ஆண்டு கிழக்குப் பதிப்பகதில் வந்துள்ளது.  அப்போது விலை ரூ.70.




1 comment:

  1. எழுத்தாளர் அய்யா சோ.தர்மன் அவர்களின் ‘கூகை’ என்கிற நாவலை இத்தனை நாட்களாக ஓய்வு நேரங்களில் வாசித்தேன். பக்கங்களின் எண்ணிக்கை 319!

    இக் கதையைப் பற்றி எனது முகநூலில் விரிவாக எழுதியிருக்கிறேன். விருப்பமுள்ளவர்கள் வாசித்துக் கொள்ளலாம்.

    ReplyDelete