Monday, October 7, 2019

முப்பத்துமூன்றாம் நாளின் வாசிப்பனுபவம் (04.10.2019)



அழகியசிங்கர்





இரண்டு நாட்கள் குடும்பத்துடன் திருப்பதிக்குச் சென்றேன். கூடவே இரண்டு புத்தகங்கள் எடுத்துக்கொண்டு போனேன். ஒரு புத்தகம். சுஜாதாவின் 'கணையாழியின் கடைசிப் பக்கங்கள்.'  இன்னொரு புத்தகம் பா ராகவனின் 'மெல்லினம்' என்ற நாவல்.

காரில் பயணம் செய்யும்போதே படித்துக்கொண்டு வந்தேன்.   கோயிலுக்குப் போகும்போது புத்தகத்தை உள்ளே எடுத்துக்கொண்டு போகவில்லை.  அங்குள்ளவர்கள் கோயிலுக்குள் போகும்முன் கையில் எதையும் வைத்துக்கொள்ளக் கூடாது.  தூக்கி விசிறி அடித்து விடுவார்கள்.  முன்பே இது தெரியுமாதலால் புத்தகத்தை எடுத்துக்கொண்டு போகவில்லை.

சுஜாதாவின் üகணையாழியின் கடைசிப் பக்கங்களை (1965-1998)ý படித்தேன்.  அதனால் பா ராகவன் நாவலைப் படிக்க முடியவில்லை.  சுஜாதாவின் புத்தகத்தையும் 140 பக்கங்கள் வரைதான் படித்தேன்.  1965லிருந்து 1973வரை.  இப்படி பாதிப்பாதியாய் படித்த புத்தகங்களின் லிஸ்ட் தர விரும்புகிறேன்.
1. கண்ணதாசனின் 'வனவாசம்.'
2. தேவதச்சனின் 'மர்ம நபர்.'
3. புதுமைப்பித்தன் கதைகள்.
4. தொ.மு.சி ரகுநாதனின் 'பாரதி காலமும் கருத்தும்'.

மற்றபடி எல்லாப் புத்தகங்களையும் முழுதாகப் படித்து விட்டேன். 

இன்னும் ஆயிரம் பக்கங்கள் உள்ள புத்தகங்களைத் தொடவில்லை.   படிப்பது என்பது அவ்வளவு எளிதான விஷயமில்லை.

பதிப்புரையில் மனுஷ்ய புத்திரன், தமிழில் பத்தி எழுத்து என்ற வடிவத்திற்கு ஒரு குணாதிசயத்தையும் அழகியலையும் வழங்கியவர் சுஜாதா என்கிறார். முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக  சுஜாதா எழுதிய பத்திகளின் இப்பெருந்தொகுதி ஒரு காலகட்டத்தின் கலை, இலக்கிய, சமூக வரலாற்றின் நுட்பமான பதிவுகளாக இருக்கின்றன என்கிறார். உண்மைதான்.

1965ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாத இதழில் தமிழ் சினிமா என்ற தலைப்பில் தமிழ் சினிமாப் படங்களை கிண்டல் செய்திருக்கிறார்.  'ஓட்டைப் படம் வந்தாலும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தவறாமல் போய் தரிசிப்பார்கள்.'  வேற வழியில்லை.  தமிழ்ப்படம் என்று எது வந்தாலும் போய்ப் பார்த்துவிடுவார்கள்.  

ஜானகிராமனின் 'நாலு வேலி நிலம்,' என்ற படத்தில் பாட்டைப் போட்டுக் கெடுத்துவிடுகிறார்கள்.  நம் டைரக்டர்களிடம் ஸ்ரீதர், கோபாலகிருஷ்ணனுக்கு திறமை கிடையாது என்று எழுதுகிறார் சுஜாதா.  ஆகஸ்ட் 1965ல் எழுதி உள்ளார்.

சிறுகதை தற்போது எதைப் பற்றி வேண்டுமானாலும் புதுசு புதுசாக எழுதுகிறார்கள்.  ஆனால் தமிழில் இல்லை.  இங்கிலீஷில் என்கிறார் நவம்பர் 1965 கணையாழி இதழில்.

இப்படி சுஜாதா கூறும் குறிப்புகளிலிருந்து அந்தக் காலத்தில் சரியாக சிறுகதைகள் வரவில்லை என்று அர்த்தப்படுத்திக்கொள்ளலாம்.

இந்தப் பத்தியில் அங்கங்கே நகைச்சுவை உணர்வுடன் எல்லாவற்றையும் சொல்லிக்கொண்டே போகிறார்.  

'மெஸ்ஸில் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் என் நண்பர் ஸ்ரீ....திடீரென்று தேசபக்தி மிஞ்சிப் போய் ஜவான்களுக்கு ரத்தம் கொடுக்க வெலிங்கடன் ஆஸ்பத்திரிக்குச் சென்றார்.  அவருக்கு ரத்தம் கொடுத்து அனுப்பினார்கள்.'  இதுதான் சுஜாதா.  இந்தப் புத்தகம் முழுவதும் அதிகமாக நக்கல், நையாண்டி எல்லாம் உண்டு. அதே சமயம் பாராட்ட வேண்டுமென்று நினைத்தால் தாராளமாகப் பாராட்டுகிறார்.   இந்தக் கடைசிப் பக்கங்களைப் படிக்கும்போது இவருக்கு சிறுபத்திரிகை மீதும், அதில் எழுதும் படைப்பாளிகள் மீதும் மரியாதை உண்டு என்பது தெரிகிறது.

ஒரு இடத்தில் இப்படி எழுதுகிறார் : ü லா.ச.ராவின் üபாற்கடல்ý என்ற கதையைப் படித்துப் பாருங்கள்.  அதற்கு ஈடான கதை இதுவரை  எழுதப்படவில்லை என்று போகிற போக்கில் எழுதுகிறார். 

இந்தப் பத்திகளில் ஜோக்ஸ் ஏராளமாக எழுதிக்கொண்டு போகிறார்.  üகனாட் பளேஸ் கம்பெனி ஒன்றில் மிஸ்....டைபிஸ்டாகச சேர்ந்தாள்.  அதன் மானேஜர் முதல் மாதச் சம்பளத்துடன் ஒரு புடவையும் அவளுக்குப் பரிசாகக் கொடுத்தார்.. அடுத்த மாசம் முதல் அவளிடமிருந்து சம்பளம் பெற்றார் மானேஜர்.  கிண்டல் பண்ணுவதில் ஜென்னையும் விட்டு வைக்கவில்லை இவர். 

'நான் ஒரு வெண்பா எழுத ஆரம்பித்து பாதியில் நின்றுபோய்விட்டது. இதை முடிக்க யாராவது முயற்சிக்கலாம் : 

குத்தாத முள்ளுண்டோ கொத்தாத பாம்புண்டோ
பத்தாத வீமெண்ணை தானுண்டோ?'

என்று சவால் விடுகிறார் சுஜாதா.

ஒரு இதழில் குறுக்கெழுத்துப் போட்டி நடத்துகிறார்.  தமிழ் சினிமாப் பாட்டுக்களை கொஞ்சம் மாற்றிப் போட்டு எழுதுகிறார். உதாரணமாக :

காற்று வாங்கப் போனேன் - ஒரு 
கழுதை வாங்கி வந்தேன், அதைக்
கேட்டு வாங்கிப் போனேன் அந்த 
வண்ணான் என்ன ஆனான் - ஆ ஆ
என்கிறார்.  புகுந்து விளையாடி இருக்கிறார்.  அறிவுப் பூர்வமாகபும் எழுதி இருக்கிறார்.

நகுலனின் நிழல்கள் நாவலை சிலாகித்து எழுதியிருக்கிறார்.

ஒரு முறை லா.ச.ரா டில்லி வந்திருந்தார்.  சுஜாதா வீட்டிற்குப் போயிருக்கிறார்.  அவர் வீட்டில் சாப்பிட நிபந்தனைகளை விதித்திருக்கிறார்.  'புளியைக் குறை. எலுமிச்சம் பழம் நிறையச் சேர்த்துக்கொள், மோர் வேண்டும், ரசத்தில் தாளித்துக் கொட்டும்போது கொஞ்சம் சீரகம் சேர்த்துக்கொள்...சமையலறையில் பிரவேசித்து இன்றைக்கு மத்யானம் என்ன சமைத்தாய் என்று கேட்கும் சகஜ பாவம் அவருடைய வெற்றியின் ரகசியங்களில ஒன்று.'

நண்பர் கவிஞர் தேவதத்தன் எழுதியது என்று அடிக்கடி சில கவிதை வரிகள் எழுதியிருக்கிறார்.  எனக்கு சந்தேகம்.  இது சுஜாதாவின் வரிகள்தானா என்று.

உம். தாவணியும் பூவாளியும் சின்னப்பெண் போலே
தேவையான பௌடர்பூச்சு கன்னத்தின் மேலே.

1969 ஜøன் மாத இதழில்: üஎஸ்.வைதீஸ்வரன் சென்ற சில இதழ்களில் எழுதிய சில கவிதைகளைப் படிக்கையில் நிச்சயம் அவரைப் புதுக்கவிதை எழுதுபவர்கள் எல்லோரிலும் சிறந்தவர் என்று சொல்லத் தோன்றுகிறது. இவர் கவிதைகள் தொகுப்பாக வராதது ஒரு பெரிய குறை.  இந்த மாதிரி இன்றைய தினத்தின் சலனங்களைத் தெரிவிக்கும் கவிதைகளை வெளியிடவே பத்திரிகைகள் குறைவாக இருக்கின்றள.ý என்று மனதார பாராட்டுகிறார்.  யார் இதுமாதிரி பாராட்டுவார்கள்? சுஜாதாவைத் தவிர. சக கவிஞர்களைப் பாராட்டாத உலகமிது.

சோ வைப் பற்றி ஒரு தமாஷ்.  'தமிழ் நாட்டிலே எதுவுமே நம்ம இஷ்டப்படி நடக்காது. அப்பா அம்மா இஷ்டபடி கல்யாணம் பண்ணிக்கணும். ஹோட்டலுக்குப் போனா சர்வர் இஷ்டப்படி சாப்பிடணும்.  சினிமாக்காரங்க எடுக்கிற சினிமாவை நாம் பார்க்கணும். சபாôக்காரங்க போடற டிராமாவை நம்ப ரஸிக்கணும். பஸ்லே போனா டிரைவர் நிறுத்தற இடத்திலே இறங்கணும். டாக்ஸிகாரன் அழைச்சுகிட்டு போற ரூட்லே நாம போகணூம்...'

முடிக்கும்போது சுஜாதா இப்படி சொல்கிறார் ; "ஸ்ரீரங்கம் எஸ.ஆர் எழுதுவதை நாஙக (வாசகரக்ள) படிக்கணும்.."

தமிழை எங்கே கொண்டு நிறுத்த என்று ஞானக்கூத்தன் கேட்கிறார்.  நிறுத்த வேண்டாம் என்று குறிப்பிடுகிறார் சுஜாதா புதிதாக கசடதபற இதழைப் பார்த்து.  எங்கே கிடைக்கும் என்ற விபரத்தையும் குறிப்பிடுகிறார்.  எவ்வளவு நல்ல மனது சுஜாதாவுக்கு. சுஜாதா மாதிரி ஒருவர் சொல்லும்படி இல்லை.

இன்னொரு இடத்தில் தமிழில் தீவிரமாக எழுதுபவர்களைக் கிண்டல் செய்கிறார். 'என்ன சொல்கிறாரகள் என்று தெரிந்து கொள்வதற்கு திரும்பத் திரும்பப் படித்துப் படம் வரைந்து பாகங்களைக் குறிக்க வேண்டியிருக்கிறது' என்கிறார். 

இந்தப் புத்தகத்தில் 170 பக்கங்கள்  ஒரு ஓட்டமாக ஓட்டி விட்டேன. இன்னும் 540 பக்கங்கள் இருக்கிறது.  இப்போதுதான் செப்டம்பர் 1973 வரை முடிததிருக்கிறேன். 

உயிர்மை வெளியீடாக இப் புத்தகம் வந்துள்ளது. 540 பக்கங்கள் கொண்ட இப் புத்தகம் விலை : ரூ.460.





No comments:

Post a Comment