Monday, September 30, 2019

இருபத்தேழாம் நாள் வாசிப்பனுபவம் (28.09.2019)



அழகியசிங்கர்




சங்கரராமின் காணிக்கை என்ற சிறுகதைத் தொகுப்பு தற்செயலாக என் கண்ணில் தட்டுப்பட்டது.  உடனே அதைப் படித்து அதைப் பற்றி அபிப்பிராயம் சொல்ல வேண்டுமென்று தோன்றியது.  சங்கரராம் புத்தகமெல்லாம் தேடத் தொடங்கியபோது சங்கரராமன் நாவலான காரியதரிசி என்ற நாவல் கிடைத்தது.  அது கலைமகள் வெளியீடாக வெளிவந்துள்ளது.  முதல் பதிப்பாக அந்தப் புத்தகம் 1949ஆம் ஆண்டிலும் இரண்டாம் பதிப்பாக 1964ஆம் ஆண்டு வந்துள்ளது.
காலையில் நடராஜனுடன் பேசிக்கொண்டிருக்கும்போது அவர்தான் மண்ணாசை என்ற சங்கரராமின் நாவல் ஒன்றையும் குறிப்பிட்டார்.
சிறுவாணி வாசகர் மையம் மூலம் 2018 இந் நாவல் என் கைக்கு வந்திருக்கிறது.  திரும்பவும் தேடிப் பார்த்தபோது என் புத்தகக் குவியலில் இது கிடைத்தது.  அதேபோல் லயம் வெளியீடாக வந்த புத்தகமும் கிடைத்தது.
மண்ணாசை என்ற நாவல் பிரபலமாக இருந்தாலும் என்னால் சங்கரராம் என்ற பெயருடன் அதை யோசிக்கத் தோன்றவில்லை. மேலும் காரியதரிசி என்ற நாவலையாவது அல்லது மண்ணாசை என்ற தலைப்பில் உள்ள நாவலையாவது படித்திருக்க வேண்டும்.  நான் இதுவரை படித்ததில்லை. இனிமேல்  அவற்றைப் படித்துவிட்டு பிறகு எழுதுவதாக உத்தேசித்துள்ளேன்.
காணிக்கை என்ற சிறுகதைத் தொகுப்பைப் பார்க்கலாம்.  இதில் 11 கதைகள் அடங்கிய தொகுப்பு.  மண்ணாசை என்ற நாவலில் கால சுப்ரமண்யம் சங்கரராமின் பல சிறுகதைத் தொகுப்புகளைக் குறிப்பிட்டுள்ளார்.  அதெல்லாம் இப்போது கிடைக்குமாவென்று தெரியவில்லை.   மேலும் அவர் குறிப்பிடும்போது, பாசம், பொன் படைத்த மனம், தண்டனையே வெகுமானம், பரிசலோட்டி, ரத்தவாகம், பணம் பாஷாணம், கடவுளுக்கு வைத்தியம் போன்ற சில சிறுகதைகள் மட்டும் இலக்கியத்தரம் வாய்ந்தவை என்றும் மற்றெல்லாம் வெகுஜன பத்திரிகைக் கதைகள் என்பதுபோல் குறிப்பிட்டுள்ளார்.
அவர் கருத்துப்படி பார்த்தால் நான் படித்திருக்கும் காணிக்கை யில் உள்ள கதைகள் அனைத்தும் வெகுஜன இதழ் கதைகளாகத்தான் தோன்றுகின்றன. முதலில் இந்தக் கருத்தை ஏற்கவில்லை.  ஆனால் சங்கரராமன் கதைகள் இப்போது படிக்க எப்படி உள்ளன என்ற குறிக்கோளுடன்தான் படித்தேன். எல்லாவற்றையும் என்னால் படிக்க முடிகிறது.  ஆர்ப்பாட்டமில்லாத நடையில் வெகு சுலபமாகக் கதைகளை எழுதிச் செல்கிறார்.  முப்பது இறுதியில் அவர் தமிழில் கதைகள் எழுதி வருவதாகத் தெரிவதாக கால சுப்பிரமணியன் குறிப்பிடுகிறார்.
கிட்டத்தட்ட 1940களிலிருந்து சங்கரராம் கதைகள் வெளிவருவதாகக் கொள்ளலாம்.  எல்லாக்  கதைகளும் இப்போது வாசிக்கும்போது எப்படி தோன்றுகிறது?  காணிக்கை என்ற தொகுப்பில் உள்ள கதைகளை எந்த ஆண்டில் எழுதி உள்ளார் என்ற குறிப்பும் எதுவும் என் புத்தகத்தில் இல்லை.
1978ஆம் ஆண்டு பழனியப்பா பிரதர்ஸ் இந்தப் புத்தகத்தை அச்சடித்துள்ளார்கள்.  இன்னும் கூட அங்கு இந்தப் புத்தகப் பிரதி விலைக்குக் கிடைக்கலாம்.  விலை ரூ.4 தான்.  வாசகர்களைப் பிடித்து இழுப்பதுபோல் ஒரு நடையில்  கதைகளை சங்கரராம்  ஆரம்பிக்கிறார்.  உதாரணமாக:

காணிக்கை என்ற கதையின் ஆரம்ப வரிகளைப் பார்ப்போம்

.'வாசுதேவனும் பத்மாவதியும் ஒருவரையொருவர் மனப்பூர்வமாக விரும்பி மணந்துகொண்டவர்கள்.  ஊரே கண் போடும்படியான தம்பதிகளாக அவர்கள் அமைந்தனர்.'

இவ்வாறு ஆரம்பிக்கும் போது நமக்கு உடனே கதையைப் படிக்க வேண்டுமென்ற எண்ணம் உண்டாகிறது.  இந்தக் கதை மட்டுமல்ல பெரும்பாலான கதைகளில் துடிப்பான ஆரம்ப வரிகள்.  எது கடமை என்ற கதையை எடுத்துக்கொள்வோம்.

'பகல் சுமார் பன்னிரண்டு மணி இருக்கும். கடுமையான வெயில்.  பெரிய குளத்திலிருந்து கோடைக்கானலுக்குச் செல்லும் காட்டுப்பாதையில் காளியம்மாள் வந்து கொண்டிருந்தாள்.'

கிட்டத்தட்ட எல்லாக் கதைகளும் நாலைந்து பக்கங்களுடன் முடிந்து விடுகின்றன.   ஆபாசமாக எழுதப்படவில்லை.   கதைகளைப் படிக்கும்போது அந்தக் காலத்து மனசாட்சியைப் படம பிடித்திருப்பதுபோல் தோன்றுகிறது.

மனம் ஒரு புதிர் என்ற தொகுப்பிலுள்ள கடைசிக்கதையை எடுத்துக்கொள்வோம்.  விநாயத்திற்கு பதினைந்து வயதுதான்.  அவனை திருவண்ணாமலையில் வீடு கட்டியிருக்கும் அக்காவின் வீட்டு கிரஹப் பிரவேசத்திற்கு அனுப்புகிறாள் அவன் தாய்.  வண்டிச் செலவு போக தனியாக ரூ 100 பணம் கொடுத்து அனுப்புகிறாள்.  அவள் அக்காவிற்கும் கணவருக்கும் புத்தாடைகள் வாங்கிக்கொடுக்க.

பஸ் ஒரு இடத்தில் நிற்கிறது.  அங்குள்ள ஓட்டலில் சாப்பிட்டு வரும்போது நூறு ரூபாய் பணத்தை விட்டுவிடுகிறான் விநாயகம்.  அவ்வளவுதான் துடியாய் துடித்துப் போய்விடுகிறான்.  என்ன செய்வது என்று தெரியவில்லை. தற்கொலை பண்ணிக்கொள்ளலாமா என்றும் யோசிக்கிறான்.  அம்மா வீட்டிற்கும் அக்கா வீட்டிற்கும் போக முடியாத நிலை.  பஸ் பயணத்தை ரத்து செய்துவிடுகிறான்.

யார் அந்தப் பணத்தைத் திருடினார்களோ அந்தப் பணமே திரும்பவும் கிடைப்பதுபோல் நாடகம் ஆடுகிறார்கள்.  விநாயகத்திற்கு பணம் திரும்பவும் கிடைத்த மகிழ்ச்சி.  வருகிற இன்னொரு பஸ்ஸில் திருவண்ணாமலைக்குக் கிளம்புகிறான்.  பணத்தை எடுத்துக்கொண்டவன் மனம் மாறி திரும்பவும் விநாயகத்திற்கு பணம் கிடைக்கும்படி செய்கிறான் இதுதான் கதை.

'ஆனால் இந்தக் கதையின் முடிவில் ஒரு வரி வருகிறது.  மனம் ஒன்றுதான். ஆனால் அதற்கு இரண்டு குணமா? இது ஒருபுதிர்தான்.'

திருட்டைப் பற்றி இரண்டு மூன்று கதைகள் இத் தொகுதியில் வருகின்றன. பணம் இல்லாதவனிடம்தான் பணம் பறிபோகிற மாதிரி கதைகளில் வருகின்றன.

தனிப்பிறவி என்ற கதையும் அப்படித்தான்.  திருடுப் போவதைப் பற்றி கதை.

'ஆறுமுகத்துக்குச் சுமார் முப்பத்தைந்து வயது இருக்கும் சிறுவயதிலிருந்து அவன் கற்றுக்கொண்ட தொழில், தென்னைமரம் ஏறுவது ஒன்றுதான்.ý என்று ஆரம்பிக்கிறது கதை.  உடனே கதையை கடகடவென்று படிக்கத் தோன்றுகிறது.   ரேஷன் அரிசி வாங்கச் செல்லும்போது ஆறுமுகத்தின் மனைவி தனம் ஐந்து ரூபாய் பணத்தைத் தொலைத்துவிடுகிறாள்.  அன்றைய காலத்தில் ஐந்து ரூபாய் பணம் பெரிய தொகை.  அங்கு குப்பன் என்கிறவன் பரிதாபத்துடன் பணத்தைத் தொலைத்த தனத்தைப் பார்க்கிறான்.  அவள் அவன் அக்கா போல் தோன்றுகிறாள். அவளுக்கு உதவி செய்ய அவன் பணத்தையே ஒரு நாடகமாடிக் கொடுத்து விடுகிறான். இதுதான் கதை.  முன் கதைச் சுருக்கமாக இத் தொகுதியில் உள்ள கதைகள் அனைத்தையும் விவரிப்பது வேண்டாமென்று தோன்றுகிறது.

கடவுளுக்குக் காணிக்கை அளிப்பதால் தீராத நோய் தீர்ந்து விடும் என்பதுபோல் சங்கரராமிற்கு நம்பிக்கை இருக்கிறது.  அதன் அடிப்படையை வைத்து இரண்டு கதைகள் எழுதியிருக்கிறார்.   எது எப்படி இருந்தால் என்ன? கதையின் வடிவம் பிடித்துப் போய் விடுகிறது.  படிக்க வேண்டுமென்ற எண்ணத்தைத் தூன்டுகிறது.

இந்த சிறுகதைத் தொகுப்பை வாசித்தவுடன்தான் அவருடைய காரியதரிசி என்ற நாவலையும் மண்ணாசை என்ற நாவலையும் வாசிக்க வேண்டுமென்று எடுத்து வைத்திருக்கிறேன்.  கூடிய சீக்கிரம் வாசித்துவிடுவேன் என்று நினைக்கிறேன்.







இருபத்தாறாம் நாளின் வாசிப்பனுபவம் (27.09.2019)

அழகியசிங்கர்




க நா சுப்ரமண்யம் நாவலான 'பெரிய மனிதன்' புத்தகத்தைப் படித்து முடித்தேன்.  85 பக்கங்கள் கொண்ட புத்தகம். ஆனால் அவ்வளவு எளிதாகப் படித்துப் புரிந்துகொள்ள முடியாத நாவல் இது.
குறைவான பக்கங்களைக் கொண்ட நாவல்களை க நா சு எழுதித் தள்ளியிருக்கிறார்.  என் கையில் இந்தப் புத்தகம் பல ஆண்டுகளாக இருந்தாலும் படிக்கத் துணியாத புத்தகமாக இது இருந்தது.  க நா சு நாவல்களைப் படிக்கும்போது நாம் வேற ஒரு நிலைக்குத் தயாராக வேண்டும். நாவல் மூலம் என்ன சொல்ல விரும்புகிறார் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
பெரிய மனிதன் என்ற இந்த நாவலில் யார் பெரிய மனிதன் என்ற கேள்வியை எழுப்புகிறார்.  எப்படிப்பட்டவர்கள் பெரிய மனிதனாக மாறுகிறார்கள் என்ற ஐயமும் எழுகிறது.  சமூகத்தில் இன்றுள்ள நிலையில், தவறு செய்யாமல் பொருளாதார ரீதியில் முன்னேறவும் முடியாது என்கிறார் க.நா.சு.  அவர் கூற்று இன்றுவரை உண்மைதான்.
பெரிய மனிதனாக இருக்க வேண்டியவன் தவறு செய்யாமல் பொருளாதார ரீதியில் முன்னேறவும் முடியாது.  தவறு செய்யலாம் தப்பித்துக்கொள்ளலாம் என்கிற பொருளாதார யுகத் தத்துவம் இருக்கிறதே, அது பயங்கரமானது என்கிறார் க நா சு.  நாம் பார்க்கிறோம் இன்று கூட இது உண்மையாக இருக்கிறது.
சமுதாயத்தில் பெரிய மனிதனாக அறிமுகம் ஆகிறவர்களெல்லாம் அயோக்கியனாக இருக்கிறான் என்ற தத்துவத்தை க நா சு 1959 ஆண்டிலேயே கண்டுபிடித்து ஒரு நாவல் எழுதியிருக்கிறார்.
இந்த நாவலில் நாத் என்பவன் ஒரு சுயசரிதமாக டைரி குறிப்பாக எழுதுகிறான்.  உண்மையில் அவன் எழுத்தாளன் இல்லை.
இந்த நாவலில் ஒருவர் 25 அல்லது 30 பக்கங்கள் படித்து மீண்டு வந்தால்தான் மேலும் படிக்க முடியும்.  முதல் 30 பக்கங்களில் இது கட்டுரையா நாவலா என்பது தெரியவில்லை.  கட்டுரை மாதிரி யோசித்துப் பார்த்தால் கட்டுரை மாதிரியும் தெரியவில்லை.
ஒரு நாவல் எப்படியும் எழுதலாம் என்பதற்கு இந்த நாவல் உதாரணம்.  படிக்கிறவர்களின் ஆர்வத்தைக் கட்டுடைத்தல்தான்  இந்த நாவல்.  
மிஸ்டர் நாத் என்பவனுக்கு 45 வயது முடிந்து  விடுகிறது.  தன்னுடைய வாழ்க்கையைப் பற்றி யோசித்துப் பார்க்கிறான்.  எல்லோரும் குறிப்பிடுவதுபோல் சமூகத்தில் அவன் பெரிய மனிதன்.  பெரிய மனிதனாகவே எப்போதும் இருப்பதற்கு அவன் தவறு செய்து விடுகிறான்.  இந்த 46வது வயதில்தான் அதைப் பற்றி யோசிக்கிறான்.
அவன் மனைவியின் பெயர் மீனாட்சி.  அவள் ஏற்கனவே திருமணமாகி விதவை ஆகிவிட்டாள்.  அவளுக்கு ஏற்கனவே முதல் கணவன் மூலம் ஒரு பையன் இருக்கிறான்.  இருந்தும் அவளைத் துணிந்து திருமணம் செய்து கொள்கிறான் நாத்.
மீனாட்சியைப் பற்றிக் குறிப்பிடும்போது இப்படிச் சொல்கிறான் நாத்.
'நான் அவளை (மீனாட்சியை) மணம் செய்துகொண்டது காதலால் அல்ல.  வேறு ஏதோ காரணத்தினால்தான் என்பதை அவள் ஊஹித்துக் கொண்டிருக்கலாம்.  அதனால் தான் அவளுக்கு என்னுடன் வாழ்ந்த வாழ்வு சௌகரியமான வாழ்வாக இருந்ததே தவிர, உண்மையில் இன்பம் அளிப்பதாக இல்லை.'
இந்த இடத்தில் க.நாசு நாத் பாத்திரம் மூலம் பெண்களின் சுபாவத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.
'பெண்கள் சுபாவத்தில் இரண்டு வகையுண்டு.  ஒரு வகையினர் எல்லா விஷயங்களையும் உரக்க வாய்விட்டுப் பேசியே தீர்த்துக் கட்டிவிடுவார்கள்.  வார்த்தைகளுக்கு அடங்காத விஷயங்களைக் கண்ணீரால் கொட்டித் தீர்த்து விடுவார்கள்.'
நாத்திற்கு மீனாட்சி மூலம் பிறந்த குழந்தைகளில் மூத்தவள் மைதிலி, இரண்டாவது ராஜாராமன் என்கிற பையன், மூன்றாவது ஒரு பெண்.  நளினிக்கு வயது பதினாறுதான் ஆகிறது.  அதற்குப்பின் இரண்டு குழந்தைகள் பிறந்து இறந்து விட்டன.  அதற்குப் பிறகு பிறந்தவன் ராமநாதன்.  மைதிலி, ராஜாராம் பற்றிய குறிப்புகள்தான் இந்த நாவல் முழுவதும் வருகிறது. மற்ற பிள்ளைகளான நளினி, இராமநாதனை பின்னால் குறிப்பிடப்படவில்லை.   அதேபோல் மீனாட்சி முதல் கணவன் மூலம் பிறந்த பையன்  வினாயகத்தை நாத்தால் சரிவர அறிந்துகொள்ள முடியவில்லை.
மூன்று நிகழ்ச்சிகளை நாத் எழுதுகிறான் அவனுடைய சுய சரிதத்தில்.  முதல் நிகழ்ச்சி ஒரு தடவை பாரிஸ÷க்குப் பறந்து கொண்டிருக்கும்போது விமானத்தில் ஏதோ பழுது ஏற்பட்டு, நாத்தும் இன்னொருவரும் மோதிக்கொண்டு விழுந்து கிடக்கிறார்கள்.  அவர்கள் இருவருக்கும் சொற்பக் காயங்கள் மட்டுமே.  அவர்களுடன் பயணம் ஆன இரண்டு பயணிகள் அந்த இடத்திலேயே இறந்து விட்டார்கள்.  எத்தனையோ தடவைகளில் ஆச்சரியமாக உயிர் தப்பியது என்பது தன் வாழ்க்கையின் முக்கியத்துவத்தை அறிவுறுத்தப்பட்டதாக நினைக்கிறான்.
இரண்டாவது நிகழ்ச்சி.  ஒரு தடவை நாத்தின் பணம் ஒரு சினிமா எடுக்கப் பயன் பட்டது.  இந்த மாதிரி சந்தர்ப்பத்தை நாத்தின் தகப்பனார் எப்படிப் பயன்படுத்தி இருப்பார் என்பதை நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. இந்தப் பணத்தை ஒன்றுக்கு ஒன்றரையாகப் பெருக்குவதற்குத் தவிர. இந்த முயற்சி எதனாலும் பயன்படப் போவதில்லை என்று நினைக்கிறான் நாத்.
ஒரு பெரிய மனிதர் வீட்டுப் பெண் காரியதரிசியாக நாத்திற்கு இருந்தாள்.  அவள் முத்தப் பெண் மைதிலி மாதிரி இருந்தாள்.  அவளை நாத் தன் பெண் போல் நடத்தத் தயாராய் இருந்தான்.  அந்தப் பெண் வேறுவிதமாக நினைத்தாள்.  இரண்டு பங்கு வயதான நாத்தை தன் காதலனாக அங்கீகரிக்க அவள் தயாராக இருப்பதுபோல் இருந்தது.  அதனால் அவளை வீட்டிற்கு அனுப்பி விட்டான் நாத்.  அவனுடைய பாங்க் பணத்திற்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற பயம்.
வியாபாரம் விருத்தி அடைந்து வரும் காலத்தில் நாத்தின் வாழ்க்கையில் ஒரு முட்டாள் குறுக்கிட்டான்.  அவனை முட்டாள் என்று சொல்வது தவறு.  அவன் மகா புத்திசாலி. 1950 ல் செய்ய வேண்டிய காரியத்தை 1935 லேயே செய்யச் சொல்லி வற்புறுத்துவான்.  அவன் சண்டைக்காரன் பிடித்த பிடியை லேசில் விட மாட்டான்.  டைரக்டல் போர்டில் தொல்லை கொடுப்பான்.  அவனைத் தீர்த்துக் கட்ட வேண்டுமென்று நினைத்துத் தீர்த்துக் கட்டிவிடுகிறான்.  நாத் பற்றி யாருக்கும் சந்தேகம் வரவிலலை.  கொலை செய்ததை ருஜ÷ப்படுத்த முடியவில்லை.  அன்றிலிருந்து மீனாட்சி நாத்திடமிருந்து ஒதுங்கி நின்று வாழத் தொடங்கினாள்.  நாத்தின் வாழ்க்கையில் அன்பு என்கிற அம்சம் சிறிதும் இல்லாமல் போனதற்கு அது ஒரு முக்கியக் காரணமாக இருக்கலாமென்று நினைக்கிறான்.
இந்த 45வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் நாத் தன் வாழ்நாளில் குறுக்கிட்ட சீனுவாசனை அப்புறப்படுத்திய நிகழ்ச்சியை ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கிறான்.  அவனுக்கு உறுத்தலாக இருக்கிறது.   அதற்குப் பிராயச்சித்தம் செய்ய வேண்டுமென்று தோன்றுகிறது.
அந்த சீனுவாசனுக்கு ஒரு பையன் இருக்கிறான்.  நாத்தின் பெண் மைதிலிக்கு திருமணம் செய்து வைத்துவிடலாமென்று நினைக்கிறான்.   அவ்வாறு செய்துவிட்டால் கொலைகாரன் என்ற உணர்ச்சி தனக்குப் போய்விடும் என்று நினைக்கிறான் நாத்.  இப்படி யோசிக்கும்போது அவன் மனது நிம்மதி அடைகிறது.
தொடர்ந்து கவனமாக இந்த நாவலை ஒருவர் வாசித்துக்கொண்டிருக்க வேண்டும்.  மனசாட்சியைத் திருப்பிப் பார்க்கிற ஒரு நிகழ்வாக 46வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிற நாத்திற்குத் தோன்றுகிறது.
இந்த நாவல் கைப்பிரதியாக இருக்கும்போது ஒரு நண்பரிடம் படிக்கக் கொடுத்திருக்கிறார் க நா சு.  üஇது ஒரு மனிதக் குணத்தைத் தகர்க்கும் கதை,ý என்று நண்பர் கூறியிருக்கிறார்.  க.நாசு அந்த நண்பரிடம், üஅப்படி இருந்தால் அது இக்காலத்து நிலையைப் பூரணமாகப் பிரதிபலிப்பதாக ஆகும்ý என்று கூறி உள்ளார்.
குறைவான பக்கங்கள் ஆனால் அதிக கனமான ஒரு விஷயத்தைக் கையாண்டுள்ளார்.  
திருவல்லிக்கேணியில் உள்ள வேல் புத்தக நிலையத்திலிருந்த இந்த நாவல் முதல் பதிப்பாக 1959ல் வெளிவந்துள்ளது.  அப்போது விலை : ரூ.1.50.







Sunday, September 29, 2019

இருபத்தைந்தாம் நாளின் வாசிப்பனுபவம் (26.09.2019)



அழகியசிங்கர்


தொடர்ச்சியாக சின்ன அண்ணாமலை புத்தகமான சொன்னால் நம்ப மாட்டீர்கள் புத்தகத்தை ஒரு வழியாகப் படித்து முடித்துவிட்டேன்.   இது ஒரு சுயசரிதம்.   தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை வரிசையாக அடுக்கிக் கொண்டு போகிறார்  பல பெரிய மனிதர்களுடன் அவருக்கு சவகாசம்.  கல்கி மீது அளவற்ற நம்பிக்கை.  நட்பு.  முதலில் குறிப்பிட்டமாதிரி ஒரு காரையே கல்கி அவர்கள் சின்ன அண்ணாமலைக்கு வழங்கி விடுகிறார்.
காங்கிரஸ், காந்தி, கல்கி, ராஜாஜி என்று சுற்றிச் சுற்றி வருகிறார்.  இதைத் தவிர மற்ற விரோத கட்சிகளுடன் கூட நட்புடன் பழகுபவர்.  ம பொ சியின் அபிமான நண்பர்.  
1946ஆம் ஆண்டு இவர் ஒரு பத்திரிகை ஆரம்பிக்கிறார்.  வெள்ளி மணி என்று பத்திரிகையின் பெயர்.  குமுதம் பத்திரிகையும் அப்போதுதான் துவங்கப்பட்டது.  வாரம் ஒரு முறை வெள்ளி மணி பத்திரிகை வெளிவருகிறது.  அப்போது குமுதம் கூட வாரம் ஒரு முறை வரவில்லை.
ஆனால் ஆனந்தவிகடன், கல்கி முதலிய பத்திரிகைகளைப் பார்த்துக்கொண்டு தீபாவளி மலர் தயாரிக்கிறார்.  அதில் சறுக்கி விழுகிறார்.  தீபாவளி மலர் விற்பனை ஆகவில்லை.  ஏகப்பட்ட பணம் நஷ்டம் ஏற்பட்டு விடுகிறது.  அதன் காரணமாகப் பத்திரிகையைத் தொடர்ந்து நடத்த முடியவில்லை.
பம்பாயில் வகுப்புக் கலவரம் நடைபெறுகிறது.  சினிமா பார்த்துவிட்டு சின்ன அண்ணாமலை அவர் தங்கியிருக்கும் மாதுங்காவிற்குப் போக நினைத்து ஆட்டோவைக் கூப்பிடுகிறார்.  எந்த ஆட்டோகாரனும் வரப் பயப்படுகிறான். கடைசியில் ஒரு கார்காரனிடம் கெஞ்சிக் கூத்தாடி வரும்படி கேட்டுக்கொள்கிறார்.  அவனிடம், üநானும் ஒரு இந்து.  நீயும் ஒரு இந்து.  உதவி செய்ய வேண்டாமா?ý என்கிறார்.
"ஆமாம். இந்துவிற்கு இந்து உதவி செய்ய வேண்டும் ?" என்று அவரைக் கொண்டு போய் மாதுங்காவில் விடுகிறான்.  கொண்டு போய் விட்டவுடன், சொல்கிறான், "சார், நான் இந்துவல்ல, ஒரு முஸ்லிம்," என்கிறான்.  மேலும், 'உண்மையில் முஸ்லிம் யாருக்கும் தீங்கு செய்யக் கூடாதென்பது குரான் வாக்கு,' என்கிறான்.
சின்ன அண்ணாமலை கல்லாய் சமைந்து நிற்கிறார்.  இப்படி ஏகப்பட்ட அனுபவங்கள்.  
திராவிடக் கழகத்தினரின் அட்டகாசம் எல்லை மீறி போய்விடுகிறது.  சின்ன அண்ணாமலையும், ம பொ சி அவர்களும் தான் மேடைக்கு மேடை திராவிடக் கழகத்தைக் கண்டிக்கிறார்கள். அதனால் அவர்கள் உயிர்களுக்கே ஆபத்தாகப் போய்விடும் போல் இருக்கிறது.
இந்தப் புத்தகத்தில் காமராஜ் ராஜாஜி உரசலை மிக துல்லியமாக சின்ன அண்ணாமலை வெளிப்படுத்துகிறார்.  
ராஜாஜி - காமராஜ் சண்டையில்தான், காங்கிரஸ் நாளாவட்டத்தில் பலவீனமடைந்தது.  தேசிய சக்திகள் குன்ற, தேச விரோத சக்திகள் பலமடைந்தன என்று குறிப்பிடுகிறார்.
இரண்டு முக்கியமான திரைப்படங்களை எடுக்க சின்ன அண்ணாமலை காரணமாக இருந்திருக்கிறார்.  1. கப்பலோட்டிய தமிழன் 2. வீர பாண்டிய கட்டபொம்மன்.  
'இந்த இரண்டு திரைப்படங்களும் தமிழில் வெளிவர அஸ்திவாரம் நான்தான் என்பது பலருக்குத் தெரியாது.  அஸ்திவாரம் எப்போதும் கண்ணுக்குத் தெரியாது என்பது அனைவருக்கும் தெரியும்,' என்று சின்னஅண்ணாமலை குறிப்பிடுகிறார்.
அதே போல் எம்ஜியாரின் திருடாதே என்ற படம் வருவதற்கு இவர்தான் காரணம்.  சரோஜாதேவி என்ற நடிகையை அறிமுகப்படுத்திய பெருமை இவருக்குச் சேரும்.
பெரியார் தந்த பத்து ரூபாய் என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள கட்டுரையை ஒருவர் கட்டாயம் வாசிக்க வேண்டும்.  பெரியாரை சின்ன அண்ணாமலை தாக்கிப் பேசுவது வழக்கம்.  ஒருமுறை பெரியாரைப் போய்ப் பார்க்கிறார்.  பெரியார் இவர் தாக்கிப் பேசுவதை வரவேற்கிறார். மேலும் இவர் பேசுவதைக் கேட்க வேண்டும் என்று விரும்புகிறார்.  ராஜாஜி காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி விடுகிறார். புதியதாக ஸ்வராஜ்யா என்ற கட்சி ஆரம்பிக்கிறார்.  சின்ன அண்ணாமலையை தன் கட்சியில் சேரும்படி ராஜாஜி வற்புறுத்துகிறார்.  சின்ன அண்ணாமலை அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.  காங்கிரûஸ விட்டு வர முடியாது என்கிறார்.  அப்படியும் ராஜாஜியுடன் நட்புடன் இருக்கிறார்.  
ராஜாஜி ஒருமுறை சின்ன அண்ணாமலை வீட்டிற்கு வருகிறார்.  அந்த சமயத்தில் சின்ன அண்ணாமலை டிபன் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்.  பாதி சாப்பிட்டவுடன் எனக்காக எழுந்திருக்க வேண்டாம் என்கிறார் ராஜாஜி.  
'தாங்களும் ஏதாவது சாப்பிடுவதாக இருந்தால் நானும் சாப்பிடுவேன்,ý'என்கிறார் சின்ன அண்ணாமலை.  
'செட்டி நாட்டு இட்லி எனக்கும் இரண்டு கொடுங்கள்,' என்கிறார் ராஜாஜி.  
வாழை இலையைப் போட்டு இரண்டு இட்லி எடுத்து வைத்து அவர் மனைவி, 'பிராமணர்கள் எங்கள் வீட்டில் சாப்பிட்டால் பெரும் பாவம் என்கிறார்களே?'  என்கிறார் அவர் மனைவி.
அதற்கு ராஜாஜி, 'சுத்தமான இடத்தில் சமையலாகும் எதையும் யாரும் சாப்பிடலாம்,'  என்கிறார்.
இந்த நிகழ்ச்சி சின்ன அண்ணாமலையும் ராஜாஜி எவ்வளவு நெருக்கமாக இருந்தார் என்பதைக் காட்டுகிறது.  
திடீரென்று ஒரு நாள் ராஜாஜி இறந்த செய்தியைக் கேள்விப்பட்டு அவரது சடலத்தைத் தரிசிப்பதற்கு அவசரம் அவசரமாக ராஜாஜி மண்டபத்திற்கு போகிறார் சின்ன அண்ணாமலை.
அப்போது சின்ன அண்ணாமலை மனைவி உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார்.  தானும் போய்ப் பார்க்கவில்லையே என்று அழுதுகொண்டு படுக்கையை விட்டு எழுந்திருக்கிறாராம்.  ராஜாஜியின் சடலத்தைத் தரிசிக்க வேண்டுமென்று தட்டுத் தடுமாறி எழுந்திருக்கிறார்.  அப்படியே கீழே விழுந்து விடுகிறார்.  ராஜாஜி போய் விட்டாரே என்று சொல்லியபடி அவர் உயிரும் போய் விடுகிறது.
இந்தப் புத்தகம் முழுவதும் பல சம்பவங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.  இந்தப் புத்தகத்தை முடித்தபின் எனக்குத் தோன்றிது சின்ன அண்ணாமலை எப்படி கூட்டத்தில் பேசுவார் என்பதைக் கேட்க வேண்டுமென்று தோன்றியது.  அதையெல்லாம் யார் பதிவு செய்திருக்கப் போகிறரர்கள். 
இந்தப் புத்தகத்தில் சொல்வதைப் போல இந்தப் புத்தகத்தைப் படித்துவிட்டேன் என்று சொன்னால் நம்ப மாட்டீர்கள்.

இந்தப் புத்தகத்தைத் தரமான முறையில் சந்தியா பதிப்பகம் (044-24896979)வெளியிட்டுள்ளது.  194 பக்கங்கள் கொண்ட இப்புத்தகத்தின் விலை : ரூ.160.


Saturday, September 28, 2019

இருபத்துநான்காம் நாளின் வாசிப்பனுபவம் (25.09.2019)





அழகியசிங்கர்





கடந்த சில தினங்களாக நான் சில புத்தகங்களை முழுவதும் முடிக்க முடியாமல் திணறுகிறேன்.  இரண்டு நாட்கள் எடுத்துக்கொள்கிறேன்.  இன்று நான் படிக்க எடுத்துக்கொண்ட புத்தகம். சொன்னால் நம்ப மாட்டீர்கள்.  சின்ன அண்ணாமலை எழுதிய புத்தகம்.  நான் இந்தப் புத்தகத்தை வாங்கிய தேதி. கிழமையைப் புத்தகத்திலேயே குறித்து வைத்திருக்கிறேன்.  வாங்கிய தேதி 05.10.2015 - திங்கட் கிழமை.  கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் முடிந்து விட்டன.

படிக்காமலேயே இந்தப் புத்தகத்தை வைத்திருக்கிறேன்.  இன்னும் பல புத்தகங்கள் பல ஆண்டுகளாகப் படிக்காமல் வைத்திருக்கிறேன்.  நான் படித்த புத்தகங்களில் பல படித்தும் மறந்து போயிருக்கிறேன்.  

கட்டாயம் படிக்க வேண்டுமென்ற நிபந்தனையின் (நானே ஏற்படுத்திக்கொண்டது). பேரில்தான் இந்தப் புத்தகங்களை எல்லாம் எடுத்து வாசிக்கிறேன்.  ஒரு புத்தகம் வாங்கினால் நாம் எப்போது வாசிக்கப் போகிறோம் என்பதில்தான் நம் கவனம் இருக்க வேண்டும். 

இன்று பலர் புத்தகம் வாங்குவதுமில்லை, படிப்பதும் இல்லை. ஜாலியாக இருக்கிறார்கள்.  என்னைப் பார்க்க வரும் உறவினர்கள் எல்லோரும் இவன் ஏன் புத்தகங்களைக் கட்டிக்கொண்டு அழுகிறான் என்று நினைக்கத் தோன்றும்.  ஆனால் அவர்கள் நினைப்பது போல் இல்லை.  வாழ்க்கையில் அவர்கள் எதையோ தவற விட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்று நினைப்பேன்.

சொன்னால் நம்ப மாட்டேன் புத்தகத்தில் நான் இதுவரை 110பக்கங்கள் படித்துவிட்டேன்.  இதுவரை படித்ததைப் பற்றி எதாவது சொல்வோம் என்றுதான் இந்தக் கட்டுரையை எழுதுகிறேன்.  இந்தப் புத்தகத்தில் பாரதி நிதி வரை 110 பக்கங்கள் படித்து விட்டேன்.  30 அத்தியாயங்கள் படித்து விட்டேன். இன்னும் 34 அத்தியாயங்கள் படிக்க வேண்டும்.  கிட்டத்தட்ட 82 பக்கங்கள் படிக்க வேண்டும். நாளை படித்துவிட்டு அதைப் பற்றியும் எழுதுகிறேன்.

முதல் அத்தியாயம் காந்தி தரிசனம் என்ற பெயரில் காந்தியைப் பார்த்த அனுபவத்தை எழுதுகிறார்.  கார் ஒன்று அலங்காரம் செய்யப்பட்டிருக்கிறது.  அதில் மகாத்மாவை வைத்து ஊர்வலம் நடத்தப் போவதாகச் சொன்னார்கள். அதைக் கேள்விபட்டதலிருந்து சின்ன அண்ணாமலை பரபரப்புக்கு ஆளாகிறார்.  எப்படியாவது காந்தியைப் பார்க்க வேண்டுமென்று துடிப்பாக இருக்கிறார்.

காந்தி வந்து விட்டார்.  காரிலும் ஏறி உட்கார்ந்து விட்டார்.  ஆனால் கூட்டம்.  காந்திஜியின் முகம் தெரியவில்லை.  முதுகு மட்டும் தெரிந்தது. சட்டென்று காரின் காரியலில் ஏறி உட்கார்ந்துகொண்டு காந்திஜியின் முதுகைத் தொடுகிறார்.  காந்திஜி திரும்பிப்பார்த்துச் சிரிக்கிறார்.  உடனே ஒரு ஆப்பிளைக் கொடுத்து கன்னத்தில் செல்லமாகத் தட்டுகிறார்.  அதன்பின் அவர் பின்னுக்குத் தள்ளப் படுகிறார்.  காந்தி கொடுத்த ஆப்பிளைச் சுவைத்துச் சாப்பிடுகிறார்.  அன்றிலிருந்து சின்ன அண்ணாமலை காந்தியைப் பின்பற்றி வருவதாக எழுதியிருக்கிறார்.

பாட்டியின் சாபம் என்கிற இன்னொரு கட்டுரை உருக்கமாக இருக்கிறது. சின்ன அண்ணாமலையை தேவகோட்டைக்கு சுவீகாரம் விடுவதென்று அவர் பெற்றோர்களால் தீர்மானிக்கப்படுகிறது.  இந்த முடிவு பாட்டிக்குப்பிடிக்கவில்லை (தந்தையைப் பெற்றவர்).  விக்கி விக்கி அழுதபடி சின்ன அண்ணாமலையின் அப்பாவைப் பார்த்து சாபம் இடுகிறார்.  இனிமேல் ஆண் வாரிசே இல்லாமல் போகுமென்று.  அதேபோல் ஆகிவிடுவதாக சின்ன அண்ணாமலை குறிப்பிடுகிறார்.  அவர் அப்பாவை சேர்ந்த யாருக்கும் ஆண் வாரிசு இல்லாமல் போய் விடுகிறது. 

ஒவ்வொரு கட்டுரை முடிவிலும் சொன்னால் நம்ப மாட்டீர்கள் என்று குறிப்பிட்டு முடிக்கிறார்.  அதுதான் இந்தக் கட்டுரைகளின் விசேஷம்.  
டாக்டர் டி எஸ் எஸ் ராஜன் அவர்கள் ராஜாஜி மந்திரி சபையில் இருந்தபோது அவரைப் பார்க்கப் போகிறார் சின்ன அண்ணாமலை.  "என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?" என்று டாக்டர் ராஜன் கேட்கிறார். "புத்தகம் போட்டுக்கொண்டிருக்திறேன்," என்று பதில் சொல்கிறார் சின்ன அண்ணாமலை. 
"அது சரி சாப்பாட்டுக்கு என்ன பண்ணுகிறீர்கள்?" என்று கேட்கிறார் ராஜன்.  
"என் மனைவியின் நகைகளை விற்றுச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன்," என்று கூறுகிறார்.
மறுநாள் ராஜாஜி சின்ன அண்ணாமலை வீட்டிற்கு வந்து மனைவியிடம் இனிமேல் நகைகளை விற்பதில்லை என்று உறுதிமொழி வாங்கிக்கொள்கிறார்.  
கூட்டங்களில் பேசும்போது சின்ன அண்ணாமலை கல்கி எழுதும் தலையங்கக் கட்டுரைகளை மனப்பாடமாகப் படித்து விடுவார்.  பின் அதையே கூட்டங்களில் பேசப் பயன்படுத்துவார். கூட்டத்தில் பேச வேண்டுமென்ற மோகம் சின்ன அண்ணாமலைக்கு உண்டு.  ஒரு சமயம் ராஜாஜி  தேவகோட்டையில் பேசக் கூட்டம் ஏற்பாடாகியிருந்தது. சின்ன அண்ணாமலை கெஞ்சி ராஜாஜி கூட்டத்தில் பேச அனுமதி வாங்கியிருந்தார்.  
ஆனந்தவிகடனில் எழுதிய கல்கியின் தலையங்கக் கட்டுரையை அப்படியே ஒப்பித்துப் பேசிவிட்டார் சின்ன அண்ணாமலை.  கூட்டத்தில் கரகோஷம்.  ராஜாஜி அன்புடன் சின்ன அண்ணாமலையைத் தட்டிக்கொடுத்து தைரியமாகப் பேசு என்று கூறி உள்ளார்.  எல்லோரும் பேசி முடித்தவுடன், ராஜாஜியின் பாதத்தைத் தொட்டு வணங்கியபோது, 'நன்றாக மனப்பாடம் செய்திருக்கிறாய்,' என்று பாராட்டி உள்ளார்.  சின்ன அண்ணாமலைக்கு சங்கடமாகப் போய் விட்டது, ராஜாஜி கண்டு பிடித்துவிட்டாரேயென்று.  
மேடையின் பின்னால் போய் அமர்ந்து கொள்கிறார் சின்ன அண்ணாமலை. அருகிலிருந்த ஒருவர், 'நன்றாகப் பேசினீர்கள், இதையெல்லாம் எதில் படித்தீர்கள்?' என்று கேட்டுள்ளார். 'ஏன்?' என்று வெலவெலத்துப் போய்க் கேட்கிறார்.  
'யார் எழுதியது என்பது தெரியுமா?' என்று கேட்கிறார். 
'கல்கி எழுதியது,' என்கிறார் சின்ன அண்ணாமலை.
'கல்கியைத் தெரியுமா?' 
'தெரியாது. பார்த்ததில்லை.'
'பார்த்தால் என்ன செய்வீர்கள்?'
'பார்த்தால் நமஸ்காரம் செய்ய வேண்டுமென்று நினைக்கிறேன்.'
'சரி என்னையே நமஸ்காரம் பண்ணுங்கள்?' என்கிறார் கல்கி.
'ஏன்?'
'நான்தான் அந்த கல்கி.'
கல்கியின் திருக்கரங்களைப் பற்றி ஆனந்தக் கண்ணீர் வடித்தேன் என்கிறார் சின்ன அண்ணாமலை.   ராஜாஜியுடனும், கல்கியுடனும் உள்ள அவருடைய நட்பு கடைசி வரை வருகிறது.
இந்தப் புத்தகத்தில் கல்கி தந்த கார் என்ற அத்தியாயம் இருக்கிறது.  கல்கி சென்னையில் அடையாறு பங்களாவில் வசித்தபோது, தினமும் 4 மணிக்கு கல்கியைப் பார்க்கப் போவார் சின்ன அண்ணாமலை.  ஒருநாள் இரவு பத்து மணி மேல் ஆகிவிட்டது.  கல்கியிலிருந்து விடைபெற்றுப் போகும்போது, கல்கி சின்ன அண்ணாமலையைப் பார்த்து, 'கார் எங்கே?' என்று கேட்கிறார். 'காரா? கார் ஏது?' என்கிறார் சின்ன அண்ணாமலை.  
'தினமும் மாம்பலத்திலிருந்து எப்படி வருகிறீர்கள்?' என்று கல்கி கேட்க.
'பஸ் மூலம்தான்.  தினமும் லஸ்வந்து பஸ் மாறி அடையாறு வருவேன்,' என்கிறார் சின்ன அண்ணாமலை.
மைத்துனனைக் கூப்பிட்டு சின்ன அண்ணாமலையை காரில் கொண்டு போய் விடச் சொல்கிறார்.  அடுத்தநாள் வழக்கம்போல சின்ன அண்ணாமலை கல்கியைப் பார்க்கப் போகிறார்.  அவரை கீழே கூட்டிக்கொண்டு போய் போர்டு ஆங்கிலியா காரை கொடுத்து விடுகிறார். திகைப்பாகப் போய்விடுகிறது சின்ன அண்ணாமலைக்கு. 'என்னிடம் பணம் இல்லை.  இந்த காருக்குப் பணம் கொடுக்க முடியாது.' என்கிறார் சின்ன அண்ணாமலை.  
கல்கி சொல்கிறார் : 'என் ஆப்த நண்பராகிய நீங்கள் பஸ்ஸிலும் நடையிலும் என்னைப் பார்க்க வருவதை நான் தெரிந்துகொண்டும் சும்மா இருந்தால் அந்த நட்பு உண்மை நட்பாகாது. இந்தக் கார் உங்களையும் என்னையும் தினம் சேர்த்து வைக்கும்,'
சொல்லும்போது அவர் கண்களில் நீர் பனித்தது.  'என் கண்களோ குளமாயின,' என்கிறார் சின்ன அண்ணாமலை.  
'என் தாய் இறந்தபோது கூட எனக்கு அழுகை பொங்கி வரவில்லை.  ஆனால் காந்திஜி இறந்தபோதும், கல்கி இறந்தபோதும் நான் விக்கி விக்கி அழுதேன்,' என்கிறார் சின்ன அண்ணாமலை.    
திருவாடானைச் சிறையில் 1942ஆம் ஆண்டு  ஆகஸ்ட் 8ஆம் தேதி இரவு 12 மணிக்கு போலீசார் சின்ன அண்ணாமலையை கைதி செய்கிறார்கள்.  
20000க்கும் மேற்பட்ட மக்கள் ஒன்று சேர்ந்து திருவாடானை சப்-ஜெயிலுக்கு சின்ன அண்ணாமலையை விடுதலை செய்ய வந்து கொண்டிருக்கிறார்கள் என்று அதிகாரிகள் கேள்வி படுகிறார்கள்.  எல்லோரும் என்ன செய்யலாம் என்ன செய்யலாம் என்று சின்ன அண்ணாமலையிடமே ஆலோசனை கேட்கிறார்கள்.
சின்ன அண்ணாமலை யோசனைப்படி போலீஸôர் தங்கள் உடைகள் அனைத்தையும் கழற்றி அவர் இருந்த சப்ஜெயிலுக்கு முன்னால் போட்டார்கள்.  எல்லோரும் அவரவர் வீட்டிற்குப் போய் நிம்மதியாக இருக்கச் சொல்கிறார் சின்ன அண்ணாமலை.  
'இந்தச் சிறையை உடைத்து உங்களை விடுதலை செய்ய வந்திருக்கிறோம்,' என்கிறது கும்பல்.  'சரி அப்படியே செய்யுங்கள்?' என்கிறார் சின்ன அண்ணாமலை.  அதன்படியே அவர்கள் கொண்டு வந்த கடப்பாரை முதலிய ஆயுதங்களால் சின்ன அண்ணாமலையை அடைத்து வைத்திருந்த சப்-ஜெயில் பூட்டை உடைத்து விடுதலை செய்கிறார்கள்.  
இது குறித்து சின்ன அண்ணாமலை இப்படி எழுதுகிறார் : üபட்டப் பகல் 12 மணிக்குப் பல ஆயிரக்கணக்கான மக்கள் சூரியன் அஸ்தமிக்காத பிரிட்டிஷ் சாம்ராச்சியத்தில் இம்மாதிரி சிறைக் கதவை உடைத்து ஒரு அரசியல் கைதியை விடுதலை செய்தது சரித்திரத்தில் அதுதான் முதல் தடவை.,ý என்கிறார். புத்தகம் தலைப்புப்படி சொன்னால் நம்ப மாட்டீர்கள்.  
இதுமாதிரி எத்தனையோ சம்பவங்களை விவரித்துக்கொண்டு போகிறார் சின்ன அண்ணாமலை.  படிக்க படிக்க இன்னும் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டுகிறது.  இந்தப் புத்தகம் முழுவதையும் படித்து விட்டு இன்னும் எழுதுகிறேன்.  



Friday, September 27, 2019

இருபத்திமூன்றாம் நாளின் வாசிப்பனுபவம் (24.09.2019)


அழகியசிங்கர்



ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் என்னால் முழுவதும் புத்தகம் படிக்க முடியவில்லை.  அவ்வளவு கெடுபிடி.  அதேபோல் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடந்தது.  ஒரு புத்தகத்தை முழுவதும் படிக்க முடியவில்லை.  நான் முதலில் ம பொ சியின் தமிழன் குரல் என்ற புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டிருந்தேன்.  அதைப் படிக்க ஆரம்பித்தவுடன் என்னால் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை படிக்க முடியாது.  அதனால் வேற புத்தகம் எடுத்துக்கொண்டேன்.  80 பக்கங்கள் அடங்கிய புத்தகம்.

நேற்று பாதிப் பொழுது நம்மவீட்டுப் பிள்ளை என்ற பேத்தலான படம் பார்த்தோம்.  கூட்டமோ கூட்டம்.  அதுவும் உதயம் தியேட்டரில் அந்தப் படம் பார்த்தேன்.  இனிமேல் உதயம் தியேட்டரில் மட்டும் படம் பார்க்கக் கூடாது என்று தோன்றியது.  காரணம் குடித்து விட்டு சினிமாவிற்கு வருகிறார்கள்.  அப்படி வருகிறவர்கள், அமைதியாகப் படம் பார்த்துவிட்டுப் போகலாம், ஆனால் கெட்ட வார்த்தையால் எல்லோரையும் பார்த்து சத்தம் போடுகிறார்கள். உதயம் தியேட்டர் நிர்வாகம் இது குறித்து ஒன்றும் செய்யவில்லை.  அந்த 3 மணி நேரததிற்கு பல புத்தகங்களைப் படித்து விட்டிருக்கலாம்.  என் நேரமெல்லாம் வீண்.

என்ன புத்தகம் படிப்பதென்று நான் தேடிக்கொண்டிருந்தேன்.  என் கையில் நவகாளி யாத்திரை என்று சாவி எழுதிய புத்தகம் கிடைத்தது.  ஆனாலும் அந்தப் புத்தகத்தை நேற்றே படித்து முடிக்க வில்லை.

இன்று காலையில்தான் படித்து முடித்தேன்.  மொத்தமே 80 பக்கங்கள்தான்.  க்ரவுன் அளவில் அந்தப் புத்தகம் உள்ளது.  கொஞ்சம் பெரிய எழுத்தில்தான் அந்தப் புத்தகம் அச்சடிக்கப்பட்டிருக்கிறது.

சாவி எழுதிய இந்தப் புத்தகத்திற்கு கல்கி முன்னுரை எழுதியிருக்கிறார். இதில் காந்தியின் மரணத்தை கல்கி தன் முன்னுரையில் பதிவு செய்திருக்கிறார்.  

'காந்தி மகான் காலமாகி நாள் இருபது ஆகியும் கலக்கம் சிறிதும் நீங்கவில்லை.    உலகம் சுழன்றுகொண்டிருக்கிறது; வாழ்க்கை நடந்து ஆறுதலும் கொண்டிருக்கிறது. 

எனினும், ஜனவரி 30க்கு முன்பு இருந்ததுபோல் இப்போது ஒன்றுமில்லைý என்கிறார் கல்கி உருக்கமாக.

கல்கி பத்திரிகை சார்பாக நவகாளிக்குப் போகிறீர்களா என்று கல்கி சாவியைக் கேட்கிறார். உடனே ஒப்புக்கொள்கிறார்.  கல்கி உடனே நவகாளிக்குப் போவது எவ்வளவு ஆபத்தானது என்று விவரிக்கிறார்.  

'காரியம் யோசிக்க வேண்டிய காரியம்தான்.  நவகாளி என்று சொன்னாலே அப்போதெல்லாம் உடம்பு நடுங்கிற்று.  உள்ளம் பதைத்தது.  மனிதர்கள் செய்வார்கள் என்று எண்ண முடியாத பயங்கரமான பைசாச் செயல்கள் அந்தப் பிரதேசத்தில் நடந்திருக்கினறன.  பத்திரிகைகளில் படிக்கும்போதே குலைநடுக்கம் உண்டாயிற்று.' என்கிறார் கல்கி.

ஆனால் சாவி அவர் கட்டுரையில் அப்படி பயந்தபடி எழுதவில்லை.  காந்தி நவகாளியைப் பற்றி குறிபிட்டுருப்பதைப் பற்றி கல்கி எழுதியிருக்கிறார்.

"என்னுடைய இலட்சியங்களுக்குக் கீழ் வங்காளத்தில் கடும் சோதனை ஏற்பட்டிருக்கிறது.  இதற்குமுன் இத்தகைய ஒரு பெரும் சோதனையில் நான் ஈடுபட்டதில்லை.  இந்தப் பரீட்சையில் நான் தேறாமல் போனால் அஹிம்சா தர்மத்திற்குத் தோல்வியாகாது.  அஹிம்சைக் கொள்கையை ஸ்தாபிக்க நான் கடைப்பிடித்த முறைதான் தோல்வி அடைந்ததாகும்.  இப்போது நான் தோல்வி அடைந்தாலும் பிற்காலத்தில் தோன்றப் போகும் உத்தமர்களும், மகான்களும் இந்த முயற்சியில் வெற்றி பெறுவார்கள் என்பது நிச்சயம்," என்று கூறியுள்ளார். 

காந்திஜி எப்போதும் பாடும் பஜனை பாட்டில் üஈசுவர அல்லா தேரே நாம்ý இந்த வரியை ஹிந்துக்கள் விரும்பவில்லை.  

ஆனால் ஜனவரி 30ஆம் தேதி காந்தி மகான் உயிர்த் தியாகம் செய்த பிறகு, எத்தனை லட்சக்கணக்கான ஹிந்துக்கள் மனதில் சிறிதும் தயக்கமோ கல்மஷமோ இல்லாமல், ஈசுவர அல்லா தேரே நாம் என்னும் பஜனை வரியை விம்மிக்கொண்டும் வாசித்துக்கொண்டும் பாடியிருக்கிறார்கள்

ஒருநாள் மாலை தியாகராயநகர் பனகல் பார்க்கைச் சுற்றி வேகமாக நடை போட்டுக் கொண்டிருக்கிறார் சாவி.  அவரைக் கவனித்த நண்பர்கள் சிலர், ஏன் இதுமாதிரி நடை போடுகிறீர்கள் என்று கேட்கிôர்கள்.  நவகாளிக்குப் போகிறேன் என்கிறார் சாவி.  அவர்கள் கேட்கிறார்கள்.  நவகாளிக்கு நடைப் பயணமாகப் போகிறார்களா என்று கேட்கிறார்கள்.  இல்லை இல்லை. 

காந்தியடிகளின் அடிச் சுவடுகளைப் பின்பற்றி நடக்கப் போவதாகவும். அவருடன் கூட நடக்கும்போது வேகமாக நடக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறார் சாவி.

நவகாளிக்குப் போவதற்கு முன் தென்னிந்தியப் பிரமுகரான திரு சாரியார் வீட்டிற்குப் போகிறார் சாவி.  இரண்டு நாட்களுக்கு நவகாளியைப் பற்றி விஜாரிக்கிறார்.  இரண்டாவது பிரயாணத்திட்டத்தில் காந்திஜியை ஸ்ரீநகர் என்னும் கிராமத்தில்தான் சந்திக்க முடியும் என்ற விபரம் கிடைக்கிறது. 

ஒரு வழியாக அரை குறை ஹிந்தி பாஷையை வைத்துக்கொண்டு, ரயில் ஏறி, கப்பல் ஏறி, மூங்கில் படகு ஏறி, மோட்டார் ஏறி, மாட்டு வண்டி ஏறிக் கடைசியில் ஒரு விதமாக úஸôணாய் மூரி என்ற கிராமத்துக்குப் போய்ச் சேர்கிறார் சாவி.  அங்கிருந்து மகாத்மாஜி இருக்குமிடத்துக்குப் பத்து மைல் தூரம்.  அந்த இடத்துக்கு வண்டிப் பாதை இல்லை.  நடைபாதைதான். தனியாய் ஏகாந்தமாகப் பிரயாணம் செய்கிறார்.

சிரமப்பட்டு காந்தி மகாத்மாவைக் காண்கிறார் சாவி.  அது குறித்து, 'என்னுடைய பிரயாண அலுப்பெல்லாம் சூரியனைக் கண்ட பனிபோல் அடியோடு மறைந்தன,' என்கிறார்.  

மகாத்மாஜி காலையில் தடியை ஊன்றிக்கொண்டு வெளியே புறப்பட்டு விட்டார்.  வாசலில் நின்ற நாய் அவரை அணுகியது.  'அச்சா குத்தா' என்று சொல்லி காந்திஜி அதை அன்புடன் தடவிக்கொடுத்தார்.  அந்த நாயைப் பற்றி  அங்கு சந்தித்த மாணிக்கவாசகம் என்ற சாவி நண்பர் விபரமாய் கூறினார். 

"நவகாளி ஜில்லாவிலுள்ள நோவாகாலா என்ற ஒரு கிராமத்தில் பெரிய ஹிந்துக் குடும்பம் இருந்தது.  அந்தக் குடும்பத்தில் ஆண் பெண்  அடங்கிய ஒன்பது பேர் இருந்தனர்.  அந்த ஒன்பது பேர்களும் வெறிகொண்ட காலிக் கூட்டத்தினரின் வாளுக்குப் பலியாகிக் கூண்டோடு போய்விட்டனர்.  அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தது இந்த நாய்.  மகாத்மாஜி மேற்படி கிராமத்துக்குப் போயிருந்த சமயம். இந்த நாய் அவரைப் பார்த்துவிட்டு ஓடி வந்து அவரைச்சுற்றிச் சுற்றி வந்தது. பின், தன்னுடைய குடும்பத்தார் வெட்டிப் புதைக்கப்பட்டிருந்த இடத்துக்கு மகாத்மாஜியை அழைத்துச்சென்று புதைக்கப்பட்ட இடத்தைக் காட்டியது.  காந்திஜி நாயின் அபூர்வ அறிவைப் பார்த்து வியந்தார்.  அன்றிலிருந்து மகாத்மாஜி செல்லும் இடங்களுக்கெல்லாம் பின் தொடர்ந்து நாய் வருகிறது."

இப்படிப் பல சிறு சிறு சம்பவங்களைக் கொண்டதுதான் இந்தப் புத்தகம். மகாத்மாவின் மாசு மருவற்ற தூய வாழ்க்கையில் சந்தேகம் கொண்ட ஒரு துராத்மா கடிதத்தின் மூலம் ஒரு சந்தேகத்தைக் கிளப்பியிருந்தான்.  

பிரார்த்தனைக் கூட்டத்தில் அதற்குப் பதில் அளிக்கிறார். 'கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக நான் பிரம்மசரியத்தைக் கடைபிடித்து வருகிறேன். ஐம்புலன்களையும் அடக்கி ஆண்டு வருகிறேன்.  நாவுக்கு ருசியாகப் பண்டங்களைச் சாப்பிடுவது கிடையாது.  உயிர் வாழ்வதற்கு எவ்வளவு ஆகாரம் அவசியமோ, அதைவிடக் குறைவாகவே சாப்பிட்டு வருகிறேன். என்னுடன் எந்த நேரமும் பெண்கள் இருந்து வருவது உண்மையே. பெண்களின் அருகிலேயே இருந்தும் பிரம்மசரியத்தைக் காப்பதுதான் உண்மை யோகியின் லட்சணம்.'

இந்தப் புத்தகம் நான்கு அத்தியாயங்கள் கொண்டது.  முதல் அத்தியாயம். நவகாளி யாத்திரை, இரண்டாவது அத்தியாயம். இந்துஸ்தானி விழா, மூன்றாவது அத்தியாயம் மதுரையில் மகாத்மா, நான்காவது அத்தியாயம் நவகாளி நினைவுகள்.

மகாத்மாவின் சென்னை மாம்பல விஜயத்தினால் மாம்பலம் சில தினங்களாகத் தேர்த் திருவிழா பட்ட பாடாயிருந்து கொண்டிருக்கிறது.   ஓட்டல்களில் கொடுக்கப்படும் காப்பியிலிருந்து மாம்பலத்தில் கூடும் அன்றாடக் கூட்டத்தின் கணக்கைச் சுலபமாக அறிந்துகொண்டு விடலாம் என்கிறார் சாவி.

காப்பி கறுப்பு வர்ணமா? சரி, ஐம்பதினாயிரம் பேர்.  கொஞ்சம் தண்ணீர் கலந்த வெண்மை நிறமா? எழுபத்தைந்தாயிரம் பேர்.  நீர் நிறைந்த வெறும் திரவ பதார்த்தமா? சரி, லட்சம் போர்.  இப்படியே கணக்கிட்டு விடலாம் என்கிறார் சாவி.

அடுத்தபடியாக காந்திஜி மதுரை, பழனி யாத்திரையின்போது 30 லட்சம் தமிழ் மக்கள் அவரைக் கண் குளிரக் கண்டு மகிழ்ந்தார்கள். ஹரிஜன் நிதிக்காக ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் கொடுத்தனர்.

நவகாளி நினைவுகள் என்ற பெயரில் எழுதியிருக்கும் பகுதியில் சாவிக்கு மகாத்மாவை நேரிடையாகப் பார்க்க ஒரு நிமிஷம்தான் ஒதுக்கப்பட்டிருந்தது.

சென்னையிலிருந்து இங்கு வர எவ்வளவு பணம் செலவாயிற்று? என்று கேட்கிறார். 

"300 ரூபாய்."

உடனே காந்தி, "வீண் தண்டம்.  அந்தப் பணத்தை ஹரிஜன நிதிக்குக் கொடுத்திருக்கலாமே, சரி நாளை மறுதினம் திரும்பிப் போய்விடவேண்டும், என்ன?" என்று கூறுகிறார்.

இரண்டே தினங்கள்தான் காந்தியுடன் தங்கும் வாய்ப்பு கிட்டியது.  இந்த இரண்டு தினங்களுக்குள் எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் என் வாழ்நாட்களில் வேறு எப்போது கிடைக்கும் என்கிறார்.  

இந்தப் புத்தகத்தின் பின் அட்டையில் சாவியைப் பற்றிக் குறிப்பு வருகிறது. அத்தனை தமிழர்களும் அறிந்த எழுத்தாளர் சாவி பேராசிரியர் கல்கி அவர்களிடம் பத்திரிகை உலக வாழ்க்கையைத் தொடங்கியவர். கல்கி, ஆனந்தவிகடன், பத்திரிகைகளில் நீண்ட நாள் பணியாற்றி அனுபவம் பெற்ற பின், தினமணி கதிர் ஆசிரியர் பொறுப்பேற்று நடத்தியவர்.  

கலைஞர் மு கருணாநிதி குங்குமம் வார இதழைத் தொடங்குவது என்று முடிவு செய்தபோது அதன் ஆசிரியர் பொறுப்பை ஏற்கும்படி கலைஞர் அழைத்தது சாவியைத்தான்.
 


Wednesday, September 25, 2019

இருபத்திரண்டாம் நாளின் வாசிப்பனுபவம் (23.09.2019)


அழகியசிங்கர்






இன்று வாசித்த புத்தகம் சரவணன் சந்திரனின் ரோலக்ஸ் வாட்ச் என்ற புத்தகம்.  இந்த நாவல் பல சம்பவங்களின் கோர்வை என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும்.  
இந்தச் சம்பவங்கள் வரம்பு மீறியவை.  ஆனால் இந்த நாவலைப் படிப்பது ஒரு புது அனுபவமாக இருக்கிறது.  இந்த நாவலில் வருகிற கதாநாயகன் பெயர் என்ன என்று தெரியவில்லை.  அவர் தானே முன்வந்து சொல்வதுதான் இந்த நாவல்.  நாவல் முழுவதும் ஒருவர் பேசுவதுபோல் ஆரம்பிக்கிறது.  இந்த நாவலில் கதா மாந்தர்கள் தப்பாக நடக்கிறார்கள்.  அடிக்கடி குடிக்கிறார்கள்.  பெண்களுடன் தகாத உறவு வைத்துக்கொள்கிறார்கள். கதையில் ஒரு ஒழுங்கு என்று எதிர்பார்ப்போம்.  அந்த ஒழுங்கை இந்த நாவல் கட்டுடைக்கிறது. 
சந்திரன் என்ற நண்பனுடன் ஏற்பட்ட நட்பைச் சுற்றி இந்த நாவல் வட்டமிடுகிறது.  
சுந்தர் அண்ணா என்பவர், ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லாத இந்த நாவலின் கதாநாயகனைப் பார்த்து, üஒரு மோசமான கண்டம் ஒன்று இப்போது உன் அமைப்பு படி உருவாகி இருக்கிறது.  அந்தக் கண்டத்தைத் தாண்டி விட்டால் அதற்கடுத்து சக்ரவர்த்திக்கு நிகரானவனாக மாறிப் போவாய்ý என்கிறார்.  
"என்னுடைய எண்ணங்கள்தான் என்னை வழி நடத்துகின்றன. என்னுடைய செயல்கள்தான் எல்லாவற்றுக்கும் எல்லாவற்றிக்கும் காரணம்," என்கிறான் கதைசொல்லி. 
சந்திரன் காதலிதான் மாதங்கி.  அவளைப் பற்றி ஒரு இடத்தில் கதைசொல்லி இப்படிக் கூறுகிறான். மாதங்கிதான் என் சிநேகிதி, அம்மா எல்லாம் என்று. கல்லூரி காலத்திலிருந்து கதைசொல்லியின் உணவு உடை சமாச்சாரங்கள் எல்லாம் மாதங்கி கவனித்துக் கொண்டிருக்கிறாள்.  சந்திரன்தான் அதை மேற்பார்வை செய்து கொண்டிருக்கிறான்.  
இந்த நாவல் கல்லூரியில் படிப்பதில் சுழன்று வருகிறது. இளங்கலை படிப்போடு கதைசொல்லி தன் படிப்பை முடித்து விடுகிறான்.  மாதங்கி, சந்திரன் எல்லாம் முதுகலை படிப்பிற்குத் தயாராகிறார்கள்.  இவர்களுடைய இன்னொரு கல்லூரி நண்பர்கள்தான் கதைசொல்லியின் நண்பர்களாக மாறுகிறார்கள்.  
இங்கே திவ்யா என்ற கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்துகிறார் கதா ஆசிரியர்.  சந்திரனுடன் படித்த தோழிதான் திவ்யா.  திவ்யாவிற்கும் கதைசொல்லிக்குமான உறவு ஒரு சாதாரண புள்ளியிலிருந்து ஆரம்பமாகிறது. 
ஒரு ரெஸ்ட் ரூமில் திவ்யாவுடன் கதைசொல்லிக்கு இப்படி ஒரு அறிமுகம் நடக்கிறது.  üஇயல்பாக நெருங்கி வந்து என் கைகளை இறுகப் பற்றிக் கொண்டாள்.  கை ஜோதிடம் பார்ப்பதுபோல என் உள்ளங்கைகளை அவளது விரல்களால் வருடிவிட்டாள்.  அவள் நெருங்கி வந்து என்னை மார்போடு ஒட்டி அணைத்து, என் உதட்டருகே அவளது உதடுகளைக் கொண்டுவந்து முத்தமிட்டுக் கொள்ளலாமா? என்றாள்.  நான் பதில் சொல்லாமல் புன்னகைத்தபோது அவள் என் உதடுகளைக் கவ்வினாள்.  நான் அவளது உடலெங்கும் என்னுடைய கைகளை கௌரவமாக நகர்த்தினேன்.ý
சந்திரனும் கதைசொல்லியும் அடிக்கடி பேசிù;கொள்ள மாட்டார்கள்.  அவர்களிடம் ஒரு நிழல் விளையாட்டு நடந்து கொண்டிருக்கிறது.  திவ்யாவுடன் கதைசொல்லி பழகுவது சந்திரனுக்குத் தெரியாது,  அதை அவன் விரும்ப மாட்டான் என்பதால். 
"உன் மாய உலகம் ஒருநாள் உன்னை அடித்து வெளியே துரத்தும்," என்கிறான் சந்திரன் ஒருநாள். அவனுடைய வீட்டில் பணம் இருந்தாலும் விடாப்பிடியாக அதை உதறிவிட்டு வாழ்கிறவன்.  
கதைசொல்லி கோபத்துடன், "உன்னுடைய வாழ்க்கை உனக்கு இப்படிச் சிந்திக்கச் சொல்லித் தந்திருக்கிறது.  என்னுடைய வாழ்க்கையில் உன்னுடைய நியாய தர்மங்களுக்கு வேலையே இல்லை," என்கிறான் கதைசொல்லி. 
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு சந்திரனும் கதைசொல்லி சந்தித்துக் கொள்வதைத் தவிர்த்தார்கள்.  சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் சந்திரன் தவிர்த்துவிட்டான்.  
கதைசொல்லியின் வறுமையைப் பற்றி இந்த நாவலில் பல இடங்களில் வெளிப்படுகிறது.  இந்த இடத்தில் ஒரு குறிப்பு வருகிறது. படிக்கும்போது ரசிக்கும்படி இருக்கிறது.
  'கல்லூரியில் என்னை சந்திரன் முதன்முறையாகப் பார்த்தபோது என்னிடம் இரண்டு சட்டைகள், ஒரு பேண்ட் மட்டுமே இருந்தன. துவைத்து மாறி மாறிப் போட்டுக்கொள்வேன்.  என்னுடைய வகுப்பிலிருந்த பெண்பிள்ளைகள் கூட இதுபற்றி பலமுறை என்னிடம் விசாரித்திருக்கிறார்கள்.  நான் அவர்களிடம் காந்தியைப் பற்றிச் சொல்லித் தப்பித்துக்கொள்வேன். காந்தி எளிமையாக இருக்கச் சொன்னது மனதளவில் என்னைக் கவர்ந்துவிட்டது என்றும் அதனால்தான் விடாப்பிடியாக இந்தப் பழக்கத்தை நான் பின்பற்றிக் கொண்டிருக்கிறேன்,' என்று எல்லோரிடமும் தன் ஏழ்மையை மறைக்கச் சொல்லிக்கொண்டிருப்பான் கதைசொல்லி.
திவ்யா கதைசொல்லியைவிட இரண்டு வயது மூத்தவள்.  திருமணம் ஆனவள்.  கதைசொல்லியுடன் அவள் நெருங்கிப் பழகும்போது நல்ல மூடில் இருந்தால், சிலசமயம் மச்சான் என்பாள், சிலசமயம் பேபி என்பாள். 
இந் நாவலில் ஒவ்வொரு அத்தியாத்திலும் ஒவ்வொரு கதை வருகிறது.  கதைசொல்லியைத் தெடார்புப்படுத்திதான்.  12வது அத்தியாயத்தில் பாண்டியை அறிமுகப்படுத்துகிறார்.  இது தொடர்பாக எதாவது கதை இருக்கும்.  ரசித்துப் படிக்க முடியும். 
பதிமூன்றாவது அத்தியாயத்தில் பரதராமன் என்கிற பிஆர்ரை அறிமுகப்படுத்துகிறார்.  அவருடன் ஏற்பட்ட ஒரு மோசமான அனுபவத்தை கதைசொல்லி விவரிக்கிறார்.  அதேபோல் விக்னேஷ் என்ற சினிமா நடிகனைப் பற்றி தகவல்களைக் கொடுக்கிறார்.  சந்திரனின் தாய் மாமாவைப் பற்றி ஒரு இடத்தில் குறிப்பிடுகிறார்.  தாய் மாமன் சந்திரனை விட கதைசொல்லியுடன் நெருக்கமாகப் பழகுகிறார்.
இந்த நாவலில் அங்கங்கே பல நிஜமாக நடந்த சம்பவங்களைப் புனைவாக மாற்றி எழுதியிருக்கிறார்.  ஆந்திராவில் ஒரு அரசியல் தலைவரின் ஹெலிகாப்டர் மரணம், ஒரு நடிகையைக் குளிக்கும்போது நிர்வாணமாகப் படம் எடுத்ததைப் பற்றி, போலி சித்த மருத்துவர்களைப் பற்றியும் வருகிறது. அதிகார மட்டத்திலிருக்கும் விஸ்வநாதனை யாரோ கொலை செய்து தஞ்சாவூரில் உள்ள கால்வாயொன்றில் போட்டுவிட்டார்கள். அவர் அதிகார மட்டத்தில் கொடி கட்டிப் பறந்தவர்.  அடவடியான காரியங்களுக்கு அந்தக் பகுதியில் அறியப்பட்டவர்.  இந்தக் கொலைக்கான துப்பும் கிடைத்து விடுகிறது.  இது ஒரு அத்தியாயம் முழுக்க வருகிறது. 
ரோலக்ஸ் வாட்ச்சைப் பற்றி குறிப்புகள் 27வது அத்தியாயத்தில் வருகிறது.  ரோலக்ஸ் வாட்ச் மாத்திரம் டுப்ளிக்கேட் கிடைக்காது.  அதற்குக் காரணம் தொழில் சாம்ராஜ்யத்தில் உள்ள ஒரு தொழில் தர்மம்.  
இந்த வாட்ச்சை விற்று வருகிற இலாபத்தில் தான தரும காரியங்கள் பலவற்றை செய்து வருகிறது இந்த நிறுவனம். 
மேரியட்டில் அறையெடுத்து திவ்யாவை வரச் சொல்லி அழைக்கிறான் கதைசொல்லி.  அங்கே அவர்கள் இருவரின் லீலைகள் தொடர்கின்றன.  üüநாம பிரிஞ்சுரலாமா?ýý என்று கேட்கிறான் கதைசொல்லி.  அவளும் சரி என்கிறாள்.  எப்படி இந்த உறவு தற்செயலாக ஆரம்பித்ததோ அதேபோல் பிரிவும் ஏற்பட்டுள்ளது என்று முடிகிறது கதை.
சந்திரனுக்கு பெல்ஸி பால்ஸி நோய்.  ஒவ்வொரு வருடமும் ஐம்பதாயிரம் அமெரிக்கர்களுக்கு இந்த நோய் வருமாம். முகத்தில் ஒரு பக்கம் மட்டும் இழுத்துக்கொண்டு விடுமாம்.  இதற்கு எந்த மருந்தும் கிடையாதாம்.  தானாகவே சரியாகப் போக வேண்டும்.  முகத்தில் பயிற்சிகள் செய்து வரவேண்டும்.  கதைசொல்லி உருகுகிறான்.  தனக்கு வரக்கூடாதா? ஏன் சந்திரனுக்கு வந்தது என்று.  திவ்யாவுடன் ஏற்பட்ட உறவு துண்டித்துப்போனது பற்றி சந்திரனிடம் சொல்லவேண்டும். சுந்தர் அண்ணாவைப் பார்த்து தற்செயலானவன் என்று சொல்ல வேண்டுமென்று நினைக்கிறான் கதைசொல்லி.
156 பக்கங்கள் கொண்ட இந்த நாவல் ஆரம்பித்திலிருந்து முடியும் வரை கீழே வைக்க முடியவில்லை.  விறுவிறுவென்று போகிறது.  இன்னும் இவருடைய மற்ற நாவல்களையும் படிக்க வேண்டும். 

இருபத்தோராம் நாளின் வாசிப்பனுபவம் (22.09.2019)


அழகியசிங்கர்




இன்று பரனுர் பயணம். ஒரு விசேஷம்.  ஒன்றரை மணி நேரம் மின்கார வண்டியில். இரண்டு புத்தகங்கள் எடுத்துக்கொண்டு போக வேண்டுமென்று நினைத்தேன.  ஒரு புத்தகம் லா ச ராமாமிருதத்தின் 'நான்'.  இன்னொரு புத்கதம் 'காண்டாமிருகம்'.  ஆனால் லா ச ராவின் 'நான்' மட்டும் எடுத்துக்கொண்டு போனேன்.  இதைப் படி முதலில் போதும் என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டேன்.  
உறவினர் வீட்டுக்குப் போனபோது 'கண்டாமிருகத்தையும்' எடுத்துக்கொண்டு வந்திருக்கலாமென்று தோன்றியது. 
ஏற்கனவே சிந்தா நதி என்ற பெயரில் லா ச ரா அவருடைய வாழ்க்கைக் குறிப்புகளை எழுதி வைத்திருக்கிறார் என்று தோன்றியது.  அதைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.  கிடைத்தால் அதை உறுதி செய்ய முடியும்.  üநான்ý என்கிற இந்தப் புத்தகம் அவருடைய சுயசரிதம்.  அவர் அம்மாவைப் பற்றி ரொம்ப எழுதியிருக்கிறார்.  குமுதம் ஜங்ஷனில் ஒரு பேட்டி வந்திருந்தது.  அதை இந்தப் புத்தகத்தில் சேர்த்திருக்கிறார்கள்.  இந்தப் புத்தகம் முழுவதும் அவருடைய சுயசரிதம்மட்டும் இல்லை.  3 சிறுகதைகள் சேர்த்திருக்கிறார்கள்.  ஒரு கட்டுரை. 
குமுதம் ஜங்ஷனில் ஒரு பேட்டி.  அதில் ஒரு இடத்தில் இப்படி குறிப்பிடுகிறார்.  üஒருமுறை மௌனி என் வீட்டிற்கு வந்திருந்தார்.  இங்கே இப்படி எனக்கு எதிரேதான் உட்கார்ந்திருந்தார்.  கூட இன்னொருவரும் வந்திருந்தார்.  அவர், "நீங்க ராமாமிருதத்தைப் படித்திருக்கிறீர்களா?" என்று மௌனியைக் கேட்டார்.  "நான் படித்ததும் இல்லை. படிக்கப் போவதும் இல்லை." என்று மூஞ்சியில் அடிப்பது போல் பதில் சொன்னார் மௌனி.
அவர் படிக்காவிட்டால் போகிறார்.  அது பற்றி எனக்கு வருத்தமும் இல்லை.  அவசியமும் இல்லை.  ஆனால் இந்த மனிதன் இப்படிப் பேச வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது.  எனக்குத் தெரியவில்லை, என்று கோபப்படுகிறார் லா ச ரா. 
ஏன் மௌனி அவர் எதிரிலியே அப்படிப் பேசினார்?  எழுத்தாளர்களுக்குள் பொறாமை உணர்ச்சி அதிகமாகவே இருக்கிறது. ஆனால் ஒரு எழுத்தாளர் முன் இன்னொரு எழுத்தாளர் இப்படி வெளிப்படுத்துவது அநாகரிகம். என்னிடம் கூட ஒரு விமர்சகர் மௌனியை தூக்கி வைத்து ராமாமிருதத்தை மட்டமாகப் பேசுவார்.  அதைக் கேட்டு ரொம்ப நாட்களாக ராமாமிருதம் புத்தகங்களைப் படிக்காமல் இருந்திருக்கிறேன்.  அபிதா என்ற நாவலை படித்தவுடன் என் எண்ணம் மாறிவிட்டது.  ஆனால் உண்மையில் மௌனி எழுத்து வேற, ராமாமிருதம் எழுத்து வேற.  இதை நான் ராமாமிருதத்தைப் படிக்கத் தொடங்கிய பிறகுதான் உணர்ந்தேன்.
பல இடங்களில் அம்மாவைப் பற்றி சொல்லியிருக்கிறார்.  üஎன் அப்பா ஒரு பள்ளிக்கூட வாத்தியார், 36, 37 ரூபாய் சம்பளம்.  என்ன பண்ணுவியோ எனக்குத் தெரியாது என்று அம்மா கையில் பணத்தைக் கொடுத்து விடுவார்.  அவள் கை நல்ல கை.  பசுமாடு வளர்த்தாள்.  தோட்டம் போட்டாள்.  எல்லாம் நன்றாக வந்தது.  சீக்காளி ஆம்படையான்.  அவள் ஒழுங்காக அவரைப் பார்த்துக்கொண்டாள். கடமைதான் இது.  காதலினால் பார்த்தாள் என்று அதனை நான் சொல்ல வரவில்லை.  அவளே சொன்னாள். வேண்டியது பண்ணியாகிவிட்டது உங்க அப்பாவுக்கு.  அப்புறம் எனக்கு ஒன்றும் கடன் இல்லையப்பா.  எனக்கு இது பண்ணவில்லையே என்று எந்த குற்றமும் இல்லை.  அவர் இறந்தபோது கொஞ்ச நேரம்தான் அழுதாள்.' 
இன்னொரு இடத்தில் லா ச ரா, "என் எழுத்து புரியவில்லை என்று என்னிடமே வந்து சொல்கிறார்கள்.  புரியவேண்டும் என்பது அவசியமா என்ன? புரியாமல் இருந்துவிட்டுதான் போகட்டுமே.  இப்போது என்ன கெட்டுப் போய் விட்டது?"  இப்படி சொல்வது விரக்தியில் சொல்லாமல் இருக்க வேண்டும்.
லா ச ரா சில இடங்களில் அபாரமாக சிலவற்றை சொல்லிக்கொண்டு செல்கிறார். :. 'கண்ணாடியில் என்னைப் பார்க்கிறேன்.  பிம்பம் என்னைத் திரும்பிப் பார்க்கிறது. எத்தனை அழகு.  நான் இவ்வளவு அழகா என்ன? இல்லை. பிம்பம் என்னைக் காட்டிலும் அழகாக எனக்குத் தோன்றுகிறது.'
லா ச ரா புத்தகத்தில் நான் ரசித்த பகுதிகள்.

சின்ன வயதில், வீட்டில் நடமாடும் சில மொழிகள்.

வேலையிலிருந்து மகன், மாலை திரும்பி வந்ததும், தாய் அவன் வயிற்றைத் தடவிப் பார்ப்பாளாம்.  (என் குழந்தை சாப்பிட்டானா
இல்லியா) பெண்டாட்டி இடுப்பைத் தடவிப் பார்ப்பளாம். (இன்னிக்கு எனக்கு என்ன கொணார்ந்திருக்கே?)
அப்புறம் ஒரு குட்டி உபநிஷக்கதை.
ஒரு மருமகள், மாமியாரை வீட்டை விட்டுத் துரத்தியதுடன் திருப்தி அடையாமல் அவள் தலையைக் கொண்டு வரச் சொன்னாளாம்.  அவள் சொன்னபடியே கணவன் செய்து, தாயின் தலையைப் பிடித்துக் கொண்டு வரும் வழியில் கல் தடுக்கி விழுந்தானாம்.  உடனே தலை பேசிற்றாம்.
'கொழந்தே, அடிபட்டுட்டுதா?'
'ஒரு சமயம் வயல் பரப்பின் மேல் நான் பையனாய் ஓடிக்கொண்டிருக்கையில், திடுக்கென என் வழி குறுக்கே ஒரு பாம்பு தென்பட்டது.  சுமார் நாலடிக்கு எட்ட, அது படமெடுத்து என்னைப் பார்த்துக் கொண்டிருந்தது.  நின்றேன்.  ஒருவரையொருவர் அந் நேரம் சிந்தித்துக் கொண்டிருந்தோமோ?
எனக்குக் கல்லெடுத்து அடிக்கத் தோன்றவில்லை.  ஓடிவிடத் தோன்றவில்லை.  பயமாயில்லை.  கைகால்கள் வெலவெலத்துச் செயலிழந்து விடவில்லை.  எங்களுக்குள் ஏதோ சொந்தம் இருந்ததாகப் பட்டது.  இதோபார் நாம் சோதரர்கள்.  அவரவர் வழியில் போய் விடுவோம்.  ஒருவரையொருவர் ஏன் துன்புறுத்திக் கொள்ள வேண்டும்? என்கிற மாதிரி.
அது படத்தைக் கீழே போட்டு, சாவதானமாக வயலில் இறங்கி தேங்கிய தண்ணீரில் கதிர்களிடையே மறைந்தது.'
தி.ஜ.ர தான் மானசீக குரு என்கிறார் லா ச ராமாமிருதம்.  இதை இந்தப் புத்தகத்தில் பல இடங்களில் குறிப்பிடுகிறார்.  அவர் வார்த்தைகளிலேயே தி ஜ ர வைப்பற்றி என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.  
üதி ஜ ர என் எழுத்தை அதன் போக்கில் வளர்த்தவர்.  அதிநுட்பமான விமர்சகர்.  அவர் காலத்திலேயே அவருடைய முழுத் தகுதியை யாரும் உணரவில்லை.  என் மானஸீக குரு.  புரியாத மட்டுமல்ல, வக்ரமான எழுத்தாளன் என்று நான் எழுத்தாளனாக உருவாகிக் கொண்டிருக்கும் நாளில் சக எழுத்தாளர்களாலேயே கண்டனமான போது எனக்குப் பக்கபலமாய் என் எழுத்தில் நம்பிக்கை மாறாதவராக இருந்தவர்.  அவர்தான், "நீ எதை வேணுமானாலும் எழுதுடா, நான் போடுகிறேன்," என்று தான் சக்தி பத்திரிகை ஆசிரியராக இருந்தபோது சொன்னதை செயலில் காட்டி எனக்குத் தைரியமூட்டினர் அவர்.  அப்படி முதுகைத் தட்டி என்னை வளர்த்திராவிடில், இப்போது எழுத்தாளனாக எங்கிருந்திருப்பேனோ?'
இலக்கியப் பார்வை என்பதற்கு இப்படி பதில் அளிக்கிறார்.
'இலக்கியப் பார்வை என்பது எழுத்தின் பண்பாடு மட்டும் அன்று.  மனத்தின் பண்பாடும் என்றே தோன்றுகிறது.  உலகத்தை இப்படியே பார்த்துக் கொண்டிருக்கும் அளவுக்கு மனப்பக்குவம் கிட்டிவிடுமா?'
லா ச ரா அவருடைய படைப்பில் அடிக்கடி மரணத்தைப் பற்றி எழுதியருப்பார். இதோ:
'யாருடைய மரணமும் அதன் வேளையில்தான் நேர்கிறது என்பது தவறாத உண்மை.  ஆனால் அது எங்கள் குடும்பத்தில் சற்று அடிக்கடி வாசற்படியைக் கடந்திருக்கிறது என்பதும் உண்மை.  அதன் மூட்டம் என் எழுத்தில் அதிகமாகக் கவிந்திருப்பின், அது ஆச்சரியமில்லை.
'ஒருவனின் மறைவுடன், மறைந்தன அவன் அதுகாறும் அவனில் திரட்டிய அனுபவம், ஞானம், சமுதாயத்துக்கு அவன் பயன் அந்த மட்டில் உயிரின் முடிவு, உயிருக்குத் துரோகம், ஆனால் இது ஒரு கோணம், கோணங்கள் எத்தனையோ, அவைகளின் நியாயங்களும் அப்படியே...
'எனக்கு சின்ன வயதில் வாசலில் பிணம் போனால் பயம்.  பிராம்மணப் பிணம் முகத்தையும் மூடி பின்னால் யாரோ துரத்துவதுபோல் அவசரமாய் ஓடும்.
'சாவே, உன்னை ஏற்கிறேன்.  ஏனெனில் எனக்கு வேறு வழியில்லை. நீ நியதி, அதனால் நீ கர்வமடைய வேண்டாம்.  உன்னுடன் என்றும் சமாதானமாக முடியாது.  நீ பலவான்.  ஆனால் நியாயவான் இல்லை...
'இன்றைய பையன்கள் ரொம்பவும் தேறிவிட்டார்கள்.  என் இரண்டாவது பிள்ளை கண்ணனுக்கு மாதம் ஒரு விபத்தேனும் பார்ப்பதில் தனி ராசி போலும்.  'தலை தனியா தண்டவாளம் தாண்டி உருண்டு விழுந்தது பாருங்கோ! என்னப்பா, உடம்பை சிலிர்த்துக்கறேளே! உங்கள் காலத்தை விட இப்போ இடைஞ்சல் அதிகம்.  காலையில் கிளம்பிப் போனோம்னா, மாலை திரும்பி வறோம்னு நிச்சயமில்லை.  உங்கள் காலத்தில் இது சொல்லலங்காரம்.  இப்போ அப்பட்டமான உண்மை.  நாமெல்லாம் இட்லி சாம்பார்தானே! பிணத்தைப் பார்க்கவே பயம்.  விபத்தை எங்கே ஜரிச்சுக்கப் போகிறோம்! '
தி ஜ ரா, ராமாமிருதம் கதைகளைப் பற்றி இப்படி விமர்சிக்கிறார்: 
üüஇன்னொன்று உன்னிடம் பார்க்கிறேன்.  கதைக்குத் கதை பாம்பு வருகிறது.  காரணம் இல்லாவிட்டாலும் பாம்பு வரும்பவடி ஒரு காரணத்தை ஏற்படுத்திக் கொள்கிறாய்.  உபமானமாகவோ உருவகமாகவோ பாம்பைக் காட்டுகிறாய்.  அப்புறம் இன்னொன்று உன் கதைகளில், ஸ்னானம் செய்துவிட்டு ஈரப் புடவையைச் சுற்றிக்கொண்டு ஒரு ஸ்திரி படித்துறை ஏறி வருவாள். இது மாதிரி காட்டல்கள், நீ ஒரு சமயம் பார்த்து, சித்திரம் உன் மனத்தில் அழுத்தமாய் விழுந்திருக்கும்.  ஆனால் அதுவே அப்ùஸஸன் ஆகிவிடக் கூடாது.  ஆனால் எழுதுவதே அப்ùஸஸன்தான்.ýý 
எந்த எழுத்தாளர் இப்படி இன்னொரு எழுத்தாளர் மீது அக்கறை கொண்டு சொல்வார்கள்.  இன்றைய காலத்தில் அப்படி யாரையும் பார்ப்பது அரிது. 
இந்தப் புத்தகத்தில் அவருடைய சுய சரிதம் தவிர நான்கு கதைகள் உள்ளன.  'நன்னு விடசி... பிம்பம்.  சோழம் பாக்க வாங்கோ..பாய் ஃப்ரண்ட்..' இதில் நன்னு விடசி சிறப்பான கதை.  அக் கதையை ஒருவர் கட்டாயம் படிக்க வேண்டும்.  சினிமாவில் தருணங்கள் என்றும் ஒரு கட்டுரை இருக்கிறது.  
மணிகொடி எழுத்தாளர்கள் எல்லோரும் பீச்சில் சந்தித்த நிகழ்ச்சியை ஒரு இடத்தில் விவரிக்கிறார்.  அவர்கள் எல்லோரும் என்ன பேசினார்கள்? இலக்கியம். இங்கே மார் தட்டல் கிடையாது.  வகுப்பு நடத்தவில்லை. உபதேசம் செய்யவில்லை.  இலக்கியத்திலேயே யாருக்கேனும் வாரிசு எடுத்துக்கொண்டு கட்சி ப்ரசாரம் கிடையாது. ஆனால கடற்கரையில் மாலை அந்த இரண்டு இரண்டரை மணி நேரம், இந்த ஏழெட்டு பேர் கூடி மனம் விட்டுப் பேசிக்கொண்டிருந்தார்களே, இதுதான் உண்மையில் இலக்கியப் பட்டறை.ý என்கிறார் லா சு ராமாமிருதம் பரவசத்தோடு.
.
 

Tuesday, September 24, 2019

இருபதாம் நாளின் வாசிப்பனுபவம் (21.09.2019)


அழகியசிங்கர்




முதலில் நான் ஒரு புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டு படிக்கலாமென்று நினைத்தேன்.  பின் வேண்டாமென்று விட்டுவிட்டேன்.  அது ஒரு மொழிபெயர்ப்பு நூல்.  அந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது இன்னும் கொஞ்சம் கவனம் தேவை என்று தோன்றியது.  பின் நேற்று மாலை 4மணிக்குத்தான் இன்னொரு புத்தகத்தை வைத்துக்கொண்டு படித்தேன்.  தொடர்ந்து வாசித்துக்கொண்டிருந்தேன்.  எப்படியாவது இந்தப் புத்தகத்தைப் படித்தே தீர்வது என்று முடிவு கட்டினேன்.  ஆனால் தொடர்ந்து வாசிக்க முடியவில்லை. வேறு வேறு வேலைகள் வந்து தொந்தரவு செய்யத் தொடங்கின.  ஆனால் புத்தகத்தைக் கீழே வைக்கத் தோன்றவில்லை. எப்படியாவது முடித்து விட வேண்டுமென்று கங்கணம் கட்டினேன். இதோ முடித்தும் விட்டேன்.  ஆனால் இந்தப் பதிவை நேற்றே இட முடியவில்லை.
நான் படித்த புத்தகத்திற்கு வருகிறேன்.  அது üராஜாஜியின் ஜெயில் டைரி.ý  206 பக்கங்கள் கொண்ட புத்தகம் இது.  1921ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இருபத்தோராம் தேதி பிற்பகல் ராஜாஜியும் மாகாண கமிட்டித் தலைவர் ஸ்ரீ சுப்பிரமணிய சாஸ்திரியாரும் வேலூர் மத்திய சிறைக்கு வந்து சேர்ந்தார்கள் என்று ஆரம்பிக்கிறது இந்த ஜெயில் டைரி.
ராஜாஜியை ஜெயிலுக்குக் கூட்டிப் போக போலீசு ஜவான்கள் வர கொஞ்சம் காலதாமதம் ஆகிவிட்டது.  அதற்குள் ராஜாஜி ஒரு சிறுகடிதம் மகாத்மாவிற்கு எழுதுகிறார்;
ýஎனக்கு முன்று மாத வெறுங்காவல் தண்டனையே கொடுத்திருக்கிறார்கள்.  அது மிகவும் சொற்ப தண்டனை.  ஆயினும் தாங்கள் ஜனவரி மாதத்திற்குள் சுயராஜ்யத்தைப் பெற்றுவிடுவீர்கள்
என்று நம்புகிறேன்.  அதனால் எவ்வளவு தண்டனை கொடுத்தால் என்ன? ý 
சிறைக்குச் செல்வதற்கு முன் என்னன்ன எடுத்துக்கொண்டு போனார் என்பதை ஒரு விஸ்ட் போடுகிறார்.  ýநான் என்னுடைய சிறு பையில் பற்பொடியும், கிராம்பும், ஒரு குயர் கடுதாசியும், குண்டூசிகளும், பென்சில்களும், ஒரு பௌண்டன் பேனாவும் கொண்டு போயிருந்தேன்.  அத்துடன் பவுண்டன் பேனாவுக்கு üஸ்வான்ý  மையும், ஒரு கூஜாவும், ஒரு சிறு பித்தளைக் குவளையும் வைத்திருந்தேன்.  என்னிடம் சில புஸ்தகங்களும் இருந்தன.  கிறிஸ்துவ வேதம், ஷேக்ஸ்பியர் நாடகங்கள், தாயுமானவர் பாடல்கள், மகாபாரதத் தமிழ் மொழி பெயர்ப்பு, பி சி ராய் எழுதிய மகாபாரதம் ஏழு பாகங்கள், ராபின்சன் க்ரூúஸô - இவைதான் அவர் கொண்டு போன புத்தகங்கள்.  கூடவே தூரத்துப் பார்வைக்கான கண்ணாடியும், படிப்பதற்கான கண்ணாடியும் அவரிடம் இருந்தன.
முதல் பத்து நாட்கள் சிறையில் அவர் வசிக்க வேண்டியிருந்த அறைகள் தனிக் கொட்டடி.  மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் இருக்கக் கூடியவை.  அதில் பத்துநாட்கள் அவர் தங்கினார். 
முதல் நாள் சிறை அனுபவத்தைப் பற்றி இப்படிக் கூறுகிறார்:
üசிறைவாசம் சந்தோஷமாகவே தோன்றுகிறது.  வெளியிலிருப்பவர்கள்தான் சிறைக்குப் பயப்படுகிறார்கள்.  எங்களை மாலை 5.45 மணிக்கே அடைத்து விட்டார்கள்.  அறைக்குள் என்னை வைத்து வெளியே பூட்டிச் சாவியை எடுத்துக்கொண்டு போகும் முதல் அனுபவம் எனக்கு இதுவே.  அதனால் எனக்கு என்னவோ மாதிரி இருந்தது.ý
இன்னொரு இடத்தில் இப்படிக் குறிப்பிடுகிறார் : 'துணி துவைப்பது போன்ற வேலைகளைச் செய்து இந்த வாழ்வைப் பரிபூரணமாக அனுபவிப்பதற்கு என்னிடம் அதிக பலமில்லாமலிருக்கிறதே என்று எண்ணி வருந்தினேன்.'
மோர் நல்ல ஆரோக்கியமான உணவு.  விலையும் அதிகமில்லை. ஆனாலும் அதை அரசாங்கத்தார் கைதிகளுக்கு ஏன் கொடுக்க விரும்பவில்லை என்று ஆச்சரியப்படுகிறார் ராஜாஜி.
ராஜாஜி ஆஸ்துமா நோயால் கஷ்டப்படுகிறார்.  இந்த ஜெயில் டைரி முழுவதும் அவர் ஆஸ்துமா நோயால் படும் அவஸ்தை அங்கங்கே வருகிறது.  
ராஜாஜிக்கு அரசியல் கைதிகளை சரியாகக் கவனிக்க வில்லை என்ற வருத்தம் இருக்கிறது.  சாதாரண கைதிகளுக்குக் கொடுக்கும் உணவையே கொடுக்கிறார்கள்.  உணவைப் பிச்சைக்காரர்கள் மாதிரி அவசரமாக அள்ளி அள்ளிச் சாப்பிட வேண்டியவர்களாக இருக்கிறோம் என்று குறிப்பிடுகிறார்.
அவர் தங்கியிருக்கும் அறையைப் பெருக்க நல்ல துடைப்பம் கிடையாது.  சிறை அதிகாரிகள் அறைகளின் சுத்தத்தைப் பற்றி கவலைப்படுவதில்லை.  மூட்டைப் பூச்சிகளும், கொசுக்களும் தொந்தரவு செய்கின்றன.
ஆங்கிலத்தில் ராபின்ஸன் குரூúஸô என்ற ஓர் அழகான கதைப் புத்தகம் இருக்கின்றது.  அதில் குரூúஸô என்பவர் கப்பல் உடைந்து தன்னந்தனியாக ஒரு நிர்மானுஷ்யமான தீவில் அகப்பட்டுக்கொண்டுள்ளார்.   ஆயினும் அவர் தீவுக்கு வந்த சில காலம் கழித்து, üஏதேனும் கப்பல் வந்து அழைத்துச் செல்லாதா? என்று அடிக்கடி கடலை நோக்கியவண்ணமாக நிற்கிறார் என்று, அந்தக் கதை கூறுகிறது. அதேபோல் சில நண்பர்கள் நம்பிக்கை இழந்து காணப்படுகிறார்கள் என்கிறார் ராஜாஜி.
ராஜாஜியின் சரித்திர அட்டையில் கீழ்கண்ட விவரங்கள் காணப்படுகின்றன.
"அரசியல் கைதி. வந்த தேதி . 21.12.2021.  அப்பீல் செய்ய மறுத்துவிட்ட தேதி 24.12.2021.  பெயர் : ஸி ராஜகோபாலச்சாரியார். பிராமணர். இந்திய தேசிய காங்கிரசின் பொதுக் காரியதரிசி.  கல்வி நிலை : ஸி. 
மேலும் சில விபரங்கள் :
தண்டனைத் தேதி : 21.12.2021
விடுதலைத் தேதி : 20.03.2022
வயது : 42
உயரம் : 5 அடி  4 அங்குலம்
நிறை : 104 ராத்தல். 

தினம்தினம் ஒரே மாதிரி உணவையே காலையும் மாலையும் கைதிகளுக்குக் கிடைக்கிறது.  அதில் எத்தனை மண்ணும் கல்லும். எத்தனை தூசியும் தும்பும். இவற்றை தினமும் உண்பதற்கு நிரம்பக் கஷ்டமாகத்தான் இருக்கிறது.  அதற்குக் காரணம் என்ன என்று யோசிக்கிறார் ராஜாஜி.   அவரே காரணத்தைக் கண்டுபிடித்து சொல்கிற விஷயம் நம்மை ஆச்சரியப்படுத்துகிறது.  அவர் என்ன சொல்கிறாரென்றால், üநாம் இதுவரை நம்மைச் சூழ்ந்துள்ள ஏழை மக்களைச் சிறிதும் எண்ணாமல் பலவிதமான பலகாரங்களை உண்டு பழகியதுதான்.  இந்த விஷயங்களை எண்ணி எண்ணி நாங்கள் உணவை மகிழ்ச்சியுடன் உண்ணப் பழகி விட்டோம்.ýý என்கிறார்.
சர்க்கார் ஏற்படுத்தும் கஷ்டங்களைப் பற்றி கண்டுகொள்ளாமல் இருக்க வேண்டும் என்கிறார் ராஜாஜி.  துன்பத்தைத் தாங்க முடியாமல் இருந்தால் சர்க்கார் வெற்றி அடைந்ததாக மமதையில் இருப்பார்கள். 
இந்த இடத்தில் ஒரு கதையைக் குறிப்பிடுகிறார்.  பகதூர் ஷா என்னும் சக்கரவத்தியைப் பற்றி முகமது ஹ÷úஸன் சொன்ன சுவாரசியமான கதை இது.
பிரிட்டிஷ் உத்தியோகஸ்தர் ஒருவர் பகதூர் ஷாவைக் கேலி செய்வதற்காக அவருடைய மகனின் தலையை வெட்டி ஒரு தட்டில் வைத்துக்கொண்டு வந்து அவர்முன் வைத்தார்.  அப்பொழுது பகதூர் ஷா அதைக்  கண்டு புன்னகை புரிந்தார்.  பிறகு அவருடைய தோழர்கள் அவர் புன்னகை புரிந்ததன் காரணத்தை வினவினார்கள்.  üüஎனக்கு வருத்தம் உண்டாக்கவே அப்படிச் செய்தான்.  நான் வருத்தத்தைக் காட்டினால் அவன் எண்ணம் கைகூடி விடுமல்லவா?ýý என்று பகதூர் ஷா பதிலுரைத்தார்.
இன்னொரு இடத்தில் இப்படிக் கூறுகிறார் : üஒத்துழையாமை என்பது அரசியல் இலட்சியம் ஒன்றை அடைவதற்காக ஏற்படுத்தப்பட்ட சாதனம் மட்டுமன்று.  வாழ்க்கையை எவ்விதம் நடத்த வேண்டும் என்னும் தார்மிக வழியைக் காட்டுவதே அது.  அந்நியாயத்துடன் ஒத்துழையாமலிருப்பதே அவசியம் செய்து தீர வேண்டிய கடமையாகும்.ý  ராஜாஜி சுறும் ஒத்துழையாமை பற்றி கருத்து நாம் எல்லோரும் வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய தார்மிக வழி என்று எனக்குப் படுகிறது.
சிறையில் இருக்கும் ராஜாஜி வெளியே உள்ள கிராமத்திலிருந்து வரும் நாதஸ்வர இசையால் பரவசம் அடைகிறார். 
சிறையில் இருந்துகொண்டு ராஜாஜி நகைச்சுவை உணர்வை இப்படி வெளிப்படுத்துகிறார் : üபொல்லாத ரயில் வண்டி சிறைக்கு அருகில் என்னைத் தமாஷாகக் கேலி செய்வதுபோல் கூவிக்கொண்டே போகிறது.ý  
ஈக்களையும் எறும்புகளைப் பற்றி சொல்லும்போது தன் சிறுவயது நினைவுகளைக் கூறுகிறார் :
"ஈக்களை என்னுடைய சுற்றப்புறத்திலிருந்தும் நீக்க முடியவில்லை.  மனத்திலிருந்தும் நீக்க முடியவில்லை.  ஈக்களும் எறும்புகளும் சின்னஞ் சிறு வயதிலிருந்தே என்னுடைய இரண்டு நண்பர்களாக இருந்து வந்திருக்கின்றன.  இவைகளில் எதைப் பார்த்தாலும் சிறுபிராயத்து நினைவுகளும் அப்போது என் தாயார் எவ்விதம் இருந்தாரோ, அதுவும் என்னுடைய ஞாபகத்திற்கு வந்து விடுகின்றன."
தக்காளிப்பழத்தை வைத்து ராஜாஜி ஒரு ஜோக் அடிக்கிறார்: 
'எனக்குத் தரும் தக்காளிப் பழங்களைப் பார்த்தால் இவைகளை உண்பதற்காகவேனும், விடுதலையான பிறகும் கூட வேலூர்ச் சிறைக்கு வர ஆசை ஏற்படும்போல் தெரிகிறது.'
ராஜாஜி விடுதலை ஆகும் நாள் சமீபித்துக் கொண்டிருக்கிறது. அந்தத் தருணத்தில் ராஜாஜி வருத்தத்துடன் இப்படிக் குறிப்பிடுகிறார் 'வெளியே சென்றதும் நான் பார்க்கக் கூடியது யாது? போர்க்களம் வெற்றிடமாயிருக்கும். போர்வீரர்கள் எங்கும் காணப்பட மாட்டார்கள்.' 
           சின்ன சின்ன தகவல்களைக் கொண்ட இப்புத்தகத்தைப் படிக்க படிக்க பல விஷயங்களை எனக்குப் போதிப்பதாகத் தோன்றுகிறது.  மறக்க முடியாத புத்தகம்.   


Monday, September 23, 2019

பத்தென்பதாம் நாளின் வாசிப்பனுபவம் (20..09.2019)



அழகியசிங்கர்





நான் ஒரு புத்தகத்தை எடுத்து வாசிக்க வேண்டுமென்று என் புத்தகக் குவியலில் தேடிக் கண்டு பிடித்தேன்.  அந்தப் புத்தகம் வானதி பதிப்பகம் மூலம் வெளிவந்துள்ளது. ஏப்ரல் 1990ல் அப் புத்தகம் வெளிவந்துள்ளது.  இன்னும் கூட அப்புத்தகத்தின் பிரதிகள் விற்பனைக்கு வானதியில் கிடைக்கலாம்.  
உண்மையிலேயே கரிச்சான்குஞ்சுவின் நூற்றாண்டில் அவருடைய 3 புத்தகங்களை வைத்துக்கொண்டிருந்தேன்.  முதல் புத்தகம் அவருடைய நாவல் பசித்த மானிடம், இரண்டாவது புத்தகம் சுகவாசிகள் என்ற அவருடைய குறுநாவல்கள்.  மூன்றாவது புத்தகம்தான் முக்கியமான புத்தகம்.  கு ப ரா என்ற மகத்தான எழுத்தாளரைப் பற்றி அவர் எழுதிய கட்டுரைப் புத்தகம்.  
எப்படியும் இந்தப் புத்தகத்தைப் பற்றி எழுதி விடுவதென்று, அசராமல் நேற்றிலிருந்து இன்று முழுவதும் படித்து முடித்து விட்டேன். 282 பக்கங்கள் கொண்ட புத்தகம்.  
1996ஆம் ஆண்டு வெளிவந்த புத்தகம் என்பதால் புத்தகத்தைத் தொட்டுப் படிக்கும்போது தாள்கள் எல்லாம் ஒடிந்து ஒடிந்து விழுந்து கொண்டிருந்தது.  கு.ப.ராவைப்பற்றி கரிச்கான்குஞ்சுவின் இந்தப் புத்தகம் அவ்வளவு உருக்கமாக இருந்தது.
இதைப் பற்றி எழுதும்போது முதலில் கடைசியில் அவர் புத்தகத்தை முடித்திருக்கும் பகுதியிலிருந்து எழுதலாமென்று நினைக்கிறேன்.  
கரிச்சான் என்ற புனைபெயரில் கு ப ராஜகோபாலன் வழக்கமாகக் கட்டுரைகள் எழுதுவார்.  கு ப ராஜகோபாலன் இறந்தபோது அவரைக் குறித்து கலாமோகினியில் துயரக் குறிப்பை கரிச்சான் குஞ்சு என்று புனைபெயரைப் பூண்டு எழுதி உள்ளார்.  'என்றுமே நான் குஞ்சுதான்; கரிச்சான் ஆக மாட்டேன். அந்த மேதை எனக்கேது?' என்று முடித்திருக்கிறார் இந்தப் புத்தகத்தை கரிச்சான்குஞ்சு.
மொத்தம் 12 பகுதிகளாக இந்தப் புத்தகத்தைப் பிரித்திருக்கிறார்.  கரிச்சான் குஞ்சு என்கிற ஆர் நாராயணசுவாமி.  அவர் எழுதிய தலைப்புகள் பின்வருமாறு : 1. பாயிரம் 2. கூôழ்க்கைச் சுருக்கம் 3. கு ப ராவும் பழந்தமிழ் இல்கிகயமும் 4. சிறுகதைகள் 5. கு ப ராவின் வேரோட்டம். 6. நாடகங்கள் 7. கவிதை 8. கண்ணன் என் கவி 9. எதிர்கால உலகம் 10. டால்ஸ்டாய் - வாழ்க்கையும் உபதேசமும் 11. கு ப ரா  - சில நினைவுகள் 1 12. கு ப ரா - சில நினைவுகள் 2
கு ப ராவின் சிறுகதைகளைப் பற்றி 190 பக்கங்களுக்கு எழுதி உள்ளார்.  கிட்டத்தட்ட அவருடைய கதைகள் முழுவதையும் குறிப்பிட்டு எழுதியிருக்கிறார். 
திரு பெ சோ சுந்தரராஜன் üசிட்டிý அவர்கள் கூறுவது :
"கு ப ராஜகோபாலன் தனது கடைசி நாட்களில் எழுதிய சோதனை பூர்வமான கதைகள் பலத்த் சர்ச்சைக்கு உள்ளாயின.  ஆண் - பெண் உறவைப் பற்றி, ஆபாசமாகவோ, அல்லது உணர்ச்சிகளைத் தூண்டிவிடும் வகையிலோ எழுதிவிட்டு, நடப்பியல் ரீதியில் துணிச்சலாக எழுதிவிட்டோம் என்று நினைத்துக்கொள்ளும் சிலர் இன்று செய்யும் தவறுகள் கு ப ராவின் கதைகளில் காணப்படா."
கனகாம்பரம் என்ற கு ப ராவின் சிறுகதைத் தொகுப்பு பற்றி ஆனந்தவிகடன் விமர்சனம் வெளியிட்டிருந்தது.  அதற்கு கு ப ராவின் குறிப்பு இது. கவனிக்க வேண்டிய குறிப்பு;
"என் கதைப் புத்தகத்தை விமர்சனம் செய்த யாரோ ஒருவர், நான், üஉடைந்த மனோரதங்கள், நிறைவேறாத ஆசைகள், தீய்ந்த காதல்கள் - இவற்றைப் பற்றித்தான் எழுதுகிறேன் என்று எழுதிய ஞாபகம்.  இது குற்றச்சாட்டானால் நான் குற்றவாளிதான், நான் கவனித்த வரையிலும் என் அநுபவத்திலும் வாழ்க்கையிலும் அவைதாம் எங்கே திரும்பினாலும் கண்ணில் படுகின்றன.  கண்டதை எழுதுவதுதான் கதை? என்று கேட்கலாம்.  கதை உருவாகும்போது, கண்டது மட்டுமின்றிக் காணாததும் தங்கத்துடன் செம்பும் சேருவது போலச் சேர்கின்றன. "
க நா சு கு.ப.ரா கதைகளைப் பற்றிக் குறிப்பிடும்போது, üüநல்ல எழுத்து எல்லாமே இலக்கியம் ஆகும்போது, புரட்சிகரமாகவும் அமைகிறது என்பது, கு.ப.ராவின் எழுத்துக்களில் தெரிய வருகிறது.  புரட்சி என்கிற ஆசையில் எழுதவில்லை அவர், மனிதன் என்கிற நினைப்பில் எழுதினார்,ýý என்கிறார்.
இதையெல்லாம் கு ப ரா தனது 43 ஆண்டுகளில் எழுதி உள்ளார் (1902 -1944).  இப்போது 70 ஆண்டுகளுக்குப் பிறகு படிக்கும்போது எங்கேயோ போய்விட்டது நமது சமுதாயம்.  ஆனால் கு ப ரா எழுத்துக்களை இன்றும் படிக்க முடிகிறது.  அதன் நுணுக்கங்களைக் கதை சொல்கிற விதத்தை நம்மால் ரசிக்க முடிகிறது.
கரிச்சான் குஞ்சு அவருடைய எழுத்துக்களை லிஸ்ட் போட்டுள்ளார்.  சிறுகதைகள் - அச்சில் புத்தகத்தில் கிடப்பவை -79 
நாவல் - 1. நாடகங்கள் - 8, கவிதை 21.  இதைத் தவிர துர்சேகந்தினி, தேவி சௌது ராணி என்ற இரண்டு வங்காளி நாவல்களை மொழி பெயர்த்திருக்கிறார்.
இரண்டாவது அத்தியாயத்தில் அவர் வாழ்க்கைச் சுருக்கத்தைக் குறிப்பிடுகிறார்.
1902 ஜனவரி மாதம் பிறந்தார் 1944 ஏப்ரல் 27ஆம் தேதி மறைந்தார்.  தந்தை பட்டாபிராமய்ய்ர், தாய் ஜானகி அம்மாள்.  1926ல் திருமணம்.  துணைவியார் அம்மணி அம்மாள்.  முதலில் மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா ஆபிஸில் வேலை பார்த்தார். பிறகு ரெவென்யூ இன்ஸ்பெக்டராகப் பதவி உயர்வு பெற்றார்.அப்போது அவருக்குத் திடீரென்று கண் பார்வை மிக மிகக் குறைந்துவிட்டதால் வேலை போய்விட்டது.  சிட்டி இதைப் பற்றிக் குறிப்பிடும்போது, üஅந்த சமயம் ஒரு குறுகிய காலத்திற்காவது தமிழ் மறுமலர்ச்சி இயக்கத்திற்கு லாபமாக அமைந்தது என்று துயர் கலந்த பெருமை  கொள்ளலாம்ý என்கிறார்.
கும்பகோணத்தில் ஆர் மகாலிங்கம் என்ற கண் மருத்துவர் செய்த அரிய சிகிச்சையால் ஓரளவு கண் பார்வை மீண்டது.  ஆனால் எழுத்தாளராக இருந்து காலத்தை ஓட்டலாமென்று அசட்டு நம்பிக்கையில் காலம் ஓட்டினார். 
உடல் நலம் குன்றி அவர் மருத்துவ மனையில் இருக்கும்போது அவர் காலை எடுத்துவிட வேண்டுமென்று மருத்துவர்கள் கூறினார்கள்.  ஆனால் 'நான் அமைதியாகச் சாக விரும்புகிறேன்' என்று கூறியபடி காவேரி தீர்த்தம் ஒரு டம்ளர் வேண்டுமென்கிறார். உடனே ஓடிப்போய் பக்கத்திலிருந்த பக்தபுரித் தெருவிலிருந்து வாங்கி வந்த நீரை குடித்துவிட்டுத்தான் இறந்தார். 
மூன்றாவதாக கு ப ராவும் பழந்தமிழ் இலக்கியமும் என்ற தலைப்பில் கரிச்சான் குஞ்சு எழுதியிருக்கிறார்  அதில் அவருக்கு ஆர்வம் இருந்ததாகக் குறிப்பிடுகிறார்.
நான்காவதாகச் சிறுகதைகள் என்ற தலைப்பில் 190 பக்கங்களில் கு ப ராவின் பல கதைகளைக் குறிப்பிட்டு எழுதி உள்ளார். 
கரிச்சான் குஞ்சு கு ப ராவின் கதைகளைப் பற்றி இப்படிக் கூறுகிறார் : எல்லோருக்கும் எழுதுகிறார்.  பழகு தமிழில், சாதாரணமான வார்த்தைகளே பழகிய தேய்ந்த சொற் பிரயோகங்களில். யாரும் முன்னம் கண்டிராத புதிய ஒரு உலகையே அவர் தீர்மானிக்க முடித்திருப்பது பேராச்சர்யம்.   இந்த ரசனைத் திறம் கு.ப.ராஜகோபாலன் ஒருவரிடத்தில் மட்டுமே காணப்படுகிறது.
"தமிழ் இலக்கியத்தில் இந்த சிறுகதை உருவப் பிரஞ்ஞையை மறவாது இன்னும் பத்து தலைமுறை மாறினாலும் மறவாத வண்ணம் தமது சிறுகதைகளினால் அழியாவண்ணம் நிலைபெறச் செய்துவிட்டுச் சென்றிருக்கிறார் கு ப ராஜகோபாலன்," என்கிறார் கரிச்சான் குஞ்சு.
ஐந்தாவது பகுதியில் கு ப ராவின் வேறோட்டம் என்ற தலைப்பில் இப்படிக் குறிப்பிடுகிறார் : 'கு.ப.ரா சுயமாக எழுதிய நாவல்கள் இரண்டு.  இரண்டும் முற்றுப் பெறவில்லை.  ஒன்று அச்சிடப்படவே இல்லை.  காண்டேகர் எழுதிய 'கருகிய மொட்டிற்கு' எதிர்வினைபோல் 'கருகாத மொட்டு' என்ற அவரது நாவல் கையெழுத்துப் பிரதியிலேயே பதினொரு பக்கங்களோடு நின்று போயிற்று,ý என்ற கரிச்சான் குஞ்சு குறிப்பிடுகிறார்.  இந்த விபரம் எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது.
அதேபோல் வேரோட்டம் என்ற முற்றுபெறாத நாவலும் எழுதி உள்ளார். வாசகர் வட்டம் கொண்டு வந்த சிறிது வெளிச்சம் என்ற புத்தகத்தில் இந்த நாவல் உள்ளது.  
ஆறாவது பகுதியில் நாடகங்கள் என்ற தலைப்பில் 8 நாடகங்கள் எழுதி உள்ளாதாக கரிச்சான் குஞ்சு குறிப்பிடுகிறார்.
ஏழாவது பகுதியில் கு ப ராவின் கவிதைகளைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.  கு ப ரா 21 கவிதைகள் எழுதி உள்ளார்.  கவிதையைப் பற்றி குறிப்பிடும்போது, கு ப ரா இப்படிச் சொல்கிறார்:
"ஆம், வசன கவிதை என்பதற்கும் உருவம் உண்டு, அதற்கும் அணி உண்டு. அலங்காரம் உண்டு.  தளை உண்டு. மோனை உண்டு. இவை எல்லாவற்றிற்கும் மேலாத அதற்கும் ரிதம் உண்டு.  செய்யுள் எழுதுவதைக் காட்டிலும் வசன கவிதை எழுதி வெற்றி பெறுவது சிரமம்.ýý என்கிறார்.
எட்டாவது பகுதியில் கண்ணன் என் கவி என்ற தலைப்பில் சிட்டியும், கு ப ராவும் எழுதிய புத்தகம்.  இது சிறிய நூல்.  இந்தப் புத்தகம் இரண்டாம் பதிப்பாக 44 ஆண்டுகளுக்குப் பிறகு பூங்கொடி பதிப்பாக வந்துள்ளது என்கிறார் கரிச்சான் குஞ்சு.  இதைக் குறிப்பிடும் ஆண்டு 1990.  இப்போது இந்தப் புத்தகம் கிடைக்குமா என்பது தெரியவில்லை.
ஒன்பதாவது பகுதியில் எதிர்கால உலகம் என்ற தலைப்பில் பல அறிஞர்களைப் பற்றிய குறிப்புகள் அடங்கிய நூலைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.
பத்தாவதாக டால்ஸ்டாய் வாழ்க்கையும் உபதேசமும் அலையன்ஸ் வெளியீடாக முதற் பதிப்பு வந்திருக்கிறது. மிகவும் விரிவான ஆய்வு நூல்.
கு ப ரா- சில நினைவுகள் 1, 2 என்று 11அம் அத்தியாயமும் 12 அத்தியாயமும் கரிச்சான் குஞ்சு கு ப ராவுடன் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை எழுதியிருக்கிறார்.  இந்தப் பகுதி சற்று உருக்கமாக எழுதப் பட்டிருக்கிறது.  இந்தப் பகுதிகளில் கரிச்சான் குஞ்சு அவரைப் பற்றியும் குறிப்பிடுகிறார். இதில் தொண்டர் கடையில் கு ப ரா புத்தகக் கடை வைத்திருந்தார்.  பெரும்பாலும் வருபவர்கள் பேசிக்கொண்டிருப்பார்கள்.  புத்தகங்கள் வாங்க மாட்டார்கள்.  
கு ப ரா வறுமையில்தான் வாடி உயிர் இழந்தார்.  வறுமையை நினைத்து அவர் என்றுமே புலம்பியதில்லை.  இந்தப் புத்தகம் பற்றி இன்னும் சொல்லலாம்.  ஒவ்வொருவரும் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டிய புத்தகம் இது.  வானதி பதிப்பகம் மூலம் வந்துள்ளது. விலை ரூ.24தான.