Thursday, October 10, 2019

முப்பத்தாறாம் நாளின் வாசிப்பனுபவம் (07.10.2019)



ழகியசிங்கர்




இரண்டு நாட்களாக நான் படித்துக்கொண்டிருக்கும் புத்தகம் நாட்டுக்கு உழைத்த நல்லவர் வரிசையில் கஸ்தூர்பா காந்தியைப்பற்றி எம் வி வெங்கட்ராம் எழுதிய புத்தகம்.

இந்தத் தலைப்பில் பல புத்தகங்களைத் தாயாரித்திருக்கிறார் எம் வி வெங்கட்ராம்.  74 பக்கங்கள் கொண்ட இப் புத்தகம் ஒரு அரிய பொக்கிஷம்.  நம் நாட்டுத் தலைவர்களைப் பற்றிய வாழ்க்கை வரலாறுகளை ஓரளவு விரிவான வழியில் எழுதியிருக்கிறார் எம்.வி வெங்கட்ராம்.  18 தலைப்புகளில் கஸ்தூர்பா காந்தியின் வாழ்க்கை யை நம் கண் முன் நிறுத்துகிறார் எம் வி வெங்கட்ராம்.
பழனியப்பா பிரதர்ஸ் வெளியிட்டுள்ள இப் புத்தகத்தை ஒவ்வொருவரும் வாங்கிப் படிப்பது அவசியம்.  இந்தப் புத்தகத்தின் விலை ரூ.35தான்.

குஜராத் மாகாணத்தில் போர்பந்தர் என்னும் நகரத்தில் கோகுல்தாஸ் மாகன் ஜீ, விரஜகும்வர்பா என்ற தம்பதிகளுக்கு மூத்த மகளாய்  அவதரித்தவர் கஸ்தூர்பா.  அவர் 1869ஆம் ஆண்டு பிறந்தார்.  மகாத்மாவைவிட ஆறுமாதம் மூத்தவர்.  அக்காலத்தில் பெண்களைப் படிக்க வைக்கும் வழக்கம் பெரும்பாலும் கிடையாது.   கஸ்தூர்பாவும் பள்ளிக்கூடத்தின் பக்கமே போகவில்லை.  ஆனால் குடும்ப வேலைகளில் பயிற்சி இருந்தது.  காந்திஜிக்கும், கஸ்தூர்பாவிற்கும் 13 வயதில் திருமணம் நடந்தது.

காந்திஜியை நெறிப்படுத்திய பெருமை கஸ்தூரி பாவுக்கு உண்டு. காந்திஜி உயர்தரப் பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது ஒரு தீய நண்பனோடு அவருக்குத் தொடர்பு ஏற்பட்டது.  அந்த நண்பனோடு சேர்ந்துகொண்டு கஸ்தூர்பாவின் கற்பொழுக்கம்மீதே சந்தேகம் கொண்டார்.  பின்னர் தன் குற்றத்தை ஏற்கிறார் காந்திஜி. அவர் மனைவியிடம் செய்த பல தவறுகளுக்காக அவருக்குப் பச்சாதாபம் எற்பட்டு தந்தையிடம் மன்னிப்புப் பெற விழைந்தார்.  நேரிடையாக கஸ்தூர்பாவிடம் மன்னிப்புக் கேட்க அவருக்கு வெட்கமாக இருந்தது.

சிற்றின்ப நாட்டத்தினால் கடைசிக்காலத்தில் தந்தையாருக்குப் பக்கத்தில் இருக்க முடியாமல் போனதைப் பற்றி காந்திஜி வெகுகாலம் வருத்தப்பட்டார். காந்திஜி செம்மையாகப் படித்து பாரிஸ்டராகி விட்டார்.  ஆனால் மனைவியிடம் சந்தேகப்படுவதை நிறுத்தவில்லை.  உண்மையில் கஸ்தூர்பா மட்டுமல்லாமல் வேற யாராவது இருந்திருந்தால் காந்திஜியின் தொந்தரவு தாஙக் முடியாமல் காந்திஜியை விட்டுப் போயிருப்பார்கள். காந்திஜியை மகாத்மாவாக உருவாக்கிய பெருமை கஸ்தூர்பாவைத்தான் சேரும்.

தன் வக்கீல் தொழிலை சரிவர இந்தியாவில் தொடர முடியவில்லை. அதனால் காந்திஜி தென்னாப்பிரிக்காவிற்குப் பயணம் ஆகிறார். ஒரு வருடத்திற்குள் மறுபடியும் சந்திப்போம் என்று காந்திஜி மனைவிக்கு ஆறுதல் கூறிவிட்டு விடை பெற்றார்.  பிரிவுத் துயரை கஸ்தூர்பா ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்தது.  அப்போது அவருக்கு வயது இருபத்துநான்கு.

ஓராண்டு தங்கும் எண்ணத்தோடு போனவர் மூன்றாண்டுகள் தென்னாப்பிரிக்காவில் தங்கிவிட்டார்.  தென்னப்பிரிக்க இந்தியரின் போராட்ட சம்பந்தமாக இங்கு பல தலைவர்களையும், பத்திரிகை ஆசிரியர்களையும் சந்தித்தார்.  பின், கஸ்தூரிபாவும். இருகுழந்தைகளையும், சகோதரி மகனையும் மகளையும் அழைத்துக்கொண்டு தென்னப்பிரிகாகவுக்குக் கப்பல் ஏறினார்.  குடும்பத்தோடு அவர் செய்த முதல் கப்பல் பிரயாணம் இதுதான்.

தென்னாப்பிரிக்க அரசாங்கம் காந்திஜி மீண்டும் அந்நாட்டுக்கு வருவதை விரும்பவில்லை.  அதனால் வெள்ளைக்கார இளைஞர்களால் காந்திஜி தாக்கப்பட்டார்.  வெளிநாட்டில் முதன் முதலாக காலடி எடுத்து வைத்த கஸ்தூரிபாவுக்கு இந்த அனுபவம்.  அடியுண்ட காயங்களுடன் கணவரைக் கண்ட பதைத்துப் போனார் கஸ்தூர்பா.

தென்னப்பிரிக்காவில் காந்திஜி சத்தியக்கிரக இயக்கத்தைத் தொடங்கிய காலம் கஸ்தூர்பா நோய்வாய்ப்பட்டார் ஓயாத ரக்தப் பெருக்கு. 
ஆபரேஷன் செய்த பிறகு மிகவும் பலவீனமாக இருந்தார் கஸ்தூரிபா.   கஸ்தூரிபாவுக்கு மாட்டிறைச்சி சூப் கொடுக்கலாமா என்று டாக்டர் காந்திஜிக்குக் கடிதம் எழுதி கேட்கிறார்.  கஸ்தூர்பா வே அதை ஏற்றுக்கொள்ளவில்லை.  தான் இறந்தாலும் பரவாயில்லை என்ற முடிவுடன் இருந்தார் கஸ்தூர்பா.  மருத்துவமனûயிலிருந்த வீட்டிற்கு அழைத்து வந்து விட்டார்கள் கஸ்தூர்பாயை.  உடம்பு குணமாக உப்பையும் மசாலாவையும் விடும்படி கஸ்தூர்பாவை வற்புறுத்துகிறார் காந்திஜி.  'டாக்டர் சொன்னா நீங்க விடுவீங்களா உப்பையும் மசாலாவையும்,' என்று எதிர்க்கேள்வி கேட்கிறார் கஸ்தூர்பா.  கஸ்தூர்பாவிடம் அன்பைக் காட்ட நல்ல சந்தர்ப்பம் என்று நினைக்கிறார் காந்திஜி. 'இன்று முதல் ஒரு வருஷ காலம் நான் உப்பு, மசாலாக்களைத் தொடமாட்டேன்.  நீ விட்டாலும் சரி, விடாவிட்டாலும் சரி,' என்கிறார் காந்திஜி.

உப்பையும் மசாலாவையும் நீக்கியதால் கஸ்தூரி விரைவில் நலமுற்றார். ரத்தப்போக்கு அறவே அகன்றுவிட்டது.  ஏற்கனவே üபாமர வைத்தியன்ý என்று பெயர் எடுத்தவர் காந்திஜி.  இந்த நிகழ்ச்சியால் அவருடைய புகழ் பரவியது.
இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது எனக்கு இது காந்திஜியைப் பற்றிய புத்தகமா கஸ்தூர்பாவைப் பற்றி புத்தகமா என்று சந்தேகம் வந்து விட்டது. ஆனால் இது கஸ்தூர்பாவைப் பற்றிய புத்தகம்தான்.  காந்திஜி எந்த அளவிற்குப் பிடிவாதமாக இருந்தாரோ அந்த அளவிற்கு கஸ்தூர்பா தன் உரிமைகளை விட்டுக்கொடுக்காமலிருந்தார்.  தனக்கும் தனிப்பட்ட கருத்துக்கள் உண்டு என்ற பல நிலைகளில் உறுதி படுத்தியிருக்கிறார்.
காந்திஜி தாம் சிற்றின்ப வேட்கையை ஒடுக்க மிகவும் துன்பப்பட்டவர்.  கஸ்தூர்பாவுக்கோ அது மிகவும் எளிதாக இருந்தது.    இறுதியாக தென்னாப்பிரிக்க இந்தியரின் அறப்போர் வெற்றிகாமாக முடிந்தது.  அந்நாட்டு அரசாங்கம் இந்தியருக்கு நீதி வழங்க முன் வந்தது.

இந்தியா திரும்பியதும் சபர்மதி ஆசிரமத்தை நிறுவி காந்திஜியும் கஸ்தூரிபாயும் வசிக்கலானர். ஆசிரமத்தின் முதல் உறுப்பினர் கஸ்தூரிபா. அங்கு இருபத்தைந்து பேர்கள் இருந்தார்கள். எளிய முறையில் வாழ்ந்து சேவை செய்வதே அவர்கள் நோக்கம்.

ஆரம்பத்தில் ஹரிஜனங்களை ஆசிரமத்தில் சேர்க்க கஸ்தூர்பா உடன்படவில்லை.  ஆசிரமத்தின் லட்சியங்களில் ஹரிஜனங்களையும் சேர்ப்பது ஒன்று என்று காந்திஜி பிடிவாதமாக இருந்தார்   கஸ்தூர்பா இதற்கு உடன்படவில்லை என்ற போது மனம் வேதனைப் பட்டார். ஏழுநாட்கள் உண்ணாவிரதம் இருந்தார்.  கஸ்தூர்பாவிற்குத்தான் இது தெரியும்.  தீண்டத்தகாதவர்கள் என்று மக்களுள் ஒரு பிரிவினர் ஒதுக்கி வைக்கப்பட்டு மனிதவுயிர்களுக்குள்ள எல்லா உரிமைகளும் அவர்களுக்கு மறுக்கப்படுகின்றன என்பதை உணர்ந்து கஸ்தூர்பா மனம் மாறினார்.  மகாத்மா 1921இல் ஒத்துழையாமை இயக்கம் நடத்தினார்.  1922ஆம் ஆண்டு அவர் கைதானார்.  அந்த வழக்கு பிரபலமான வழக்கு.  பல தலைவர்கள் சிறையில் இருந்தார்கள்.  அப்போது கஸ்தூர்பாதான் தலைமை ஏற்று ஒரு அறிக்கை வெளியிட்டார்.

காந்தி அடிகள் வாழ்நாள் முழுவதும் ஹிந்து - முஸ்லிம் ஒற்றுமைக்காகப் பாடுபட்டார்  1924ஆம் ஆண்டு தில்லியில் 21 நாட்களுக்கு உண்ணாவிரதம் இருந்தார்.  அன்னை கஸ்தூர்பா கலக்கம் அடைந்து விட்டார்.  காந்திஜிக்கு அவர் உயிர் பெரிதல்ல. ஆனால் அன்னைக்கு அந்த உயிர் பெரிதாயிற்றே.  மகாத்மா நாட்டுக்கு துன்பம் ஏற்றார்.  அன்னையோ நாட்டுக்காகவும் கணவருக்காகவும் துன்பங்களை ஏற்றார்.  எம் வி வெங்கட்ராமன் இந்தப் புத்தகத்தை சிறப்பாக எழுதியிருக்கிறார்.

பா தன் மகன் ஹீராலாலுக்குக் கடிதம் எழுதுகிறார்.  அவர் முகம்மதியராக மதம் மாறியபோது அதை ஏற்றுக்கொள்ளவில்லை பா. 
பையனிடம் இப்படி கடிதம் எழுதுகிறார்.  'நீ மதம் மாறியதை நான் விரும்பவில்லை.  ஆயினும் üநன்னேறி செல்லவே மதம் மாறினேன்,ý என்று நீ அறிவித்தபோது மதமாற்றங்கூட நல்லதுதான் என்று உள்ளுக்குள் மகிழ்ந்தேன்.' என்கிறார்.

ஹரீலால் மீண்டும் ஹிந்துவானார்.  தம் செய்கைகளுக்காக வருந்தினார்.  ஆனால் அவர் பெற்றோர்களிடம் வாழ விரும்பவில்லை.

'வெள்ளையனே வெளியேறு' என்ற கோஷத்துடன் மகாத்மா 1942ஆம் ஆண்டு தம் இறுதிப் போராட்டத்தைத் தொடங்கினார்.  பல தலைவர்களையும் மகாத்மாவையும் கைது செய்தார்கள்.  மகாத்மாவை காலையில் கைது செய்தார்கள்.  கஸ்தூர்பா மகாத்மாவுடன் பிர்லா மாளிகையில் தங்கியிருந்தார்.

அன்று மாலை சிவாஜி பார்க்கில் மகாத்மா ஒரு பெரும் கூட்டத்தில் பேசுவதாக இருந்தார்.  அவர் சிறைப்பட்டதால் அக் கூட்டத்தில் பா பேசுவதென்று முடிவு செய்தார்.  அவ்வாறே அறிவிக்கப்பட்டது.  இதை அறிந்து போலீஸ், பாவையும், பியாரிலாலையும் டாக்டா சுசீலா நாயரையும் கைது செய்தார்கள்.  மகாத்மா காந்தி பூனாவில் ஆகாகான் அண்மனையில் சிறை வைக்கப்பட்டிருந்தார்.  அங்கு பாவையும் அழைத்துச் செல்லப்பட்டார். மகாத்மா காந்தியுடன் இருந்த மகாதேவ தேசாய் ஆகாகான் அரண்மனையில் உயிர் துறந்தார்.  சொந்த மைந்தரை இழந்ததுபோல் கதறினார் பா.

பா உடல்நிலையும் நாளுக்குநாள் நலிந்து வந்தது.  1945ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒரே வாரத்தில் இரண்டு முறை அவருக்கு ஹிருதய நோய் வந்தது. டிசம்பர் மாதம் மறுபடியும் இரண்டு முறை குணமாகிவிட்டாலும் மிகவும் பலவீனமாகவே இருந்தார்.  அவர் வேண்டிக்கொண்டதற்கு இணங்கி பிள்ளைகளும் பேரர்களும் அவரைப் பார்க்க் அரசாங்கம் அனுமதி வழங்கியது.  1944  பிப்பரவரி 22ஆம் தேதி சிவராத்திரி புண்ணியதினம் 75ஆம் வயதில் உயிர் துறந்தார்.

அவர் உயிரோடு போராடியபோது பென்சிலின் என்ற மருந்தை அப்போதுதான் கண்டுபிடித்திருந்தார்கள்.  அதை போடலாமா வேண்டாமா என்ற குழப்பம் இருந்தது.  இறுதியில் பென்சிலின் ஊசி போடவில்லை. ஊசிப் போட்டிருந்தால் அவர் இன்னும் சில மணி நேரங்கள் உயிரோடு இருந்திருப்பார்.

இந்தப் புத்தகத்தைப் படிக்க படிக்க  உருக்கமாகவே இருந்தது.  பா என்ன விதமான தியாக வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார்.  74 பக்கங்களுக்குள் ஒரு முழு வாழ்க்கைச் சரிதத்ததை எம் வி வெங்கட்ராம் கொடுத்துள்ளார். இதுமாதிரி வாழ்க்கைச் சரிதத்தை எழுதுவது அவ்வளவு சுலபமில்லை.  பல புத்தகங்களைப் படித்து சரியாக எழுத வேண்டும்.  அதை திறன்பட தந்திருக்கிறார் எம்.வி வெங்கட்ராம்.  



1 comment:

  1. எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களின் ‘ஈரம்’ என்னும் குறுநாவல் வாசித்தேன். அவரது கதையின் நாயகி மிகவும் வித்தியாசமான பெண்ணாகத் தெரிகிறார். ஒரு இளைஞனுடன் பழகுகிறாள். ஊர் காதலாக இருக்குமோ என்று கிசு கிசுக்கிறது. ஒரு பெண் ஆணுடன் பழகினால் அதற்கு காதல் என்று ஒரு அர்த்தம்தானா இருக்கும்? நட்பு என்றும் எடுத்துக் கொள்ளலாமே என்கிற அர்த்தத்தில் போய் முடிகிறது நாவல். கதையில் நிகழும் உரையாடல்கள் மிகவும் அறிவு பூர்வமாகவும், சாதாரண வகை உரையாடல்கலீல் இருந்து மாறுபட்டு, ஒரு வகை ஹை லெவலில் இருப்பதாகவும் படுகிறது.

    ReplyDelete