ஏழாம் நாளின் வாசிப்பனுபவம் (08.09.2019)
அழகியசிங்கர்
நான் கடந்த சில தினங்களாகப் புத்தகம் படித்துக்கொண்டிருக்கிறேன். முழுதாக ஒரு நாவலோ அதிகப் பக்கங்கள் உள்ள புத்தகமோ என்னால் குறிப்பிட்ட நேரத்திற்குள் படிக்க முடிவதில்லை. நானே எனக்குள் ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு படிப்பதால் பல புத்தகங்களுடன் தொடர்பு கொள்ள முடிகிறது.
தேவதச்சனின் மர்ம நபர் என்ற புத்தகத்தை இவ்வளவுநாளும் பார்த்துக்கொண்டுதான் இருந்தேன். நேற்று எடுத்துப் படித்துவிட்டேன். முழுவதும் இல்லாவிட்டாலும் ஓரளவாவது.
அதேபோல் புதுமைப்பித்தன் கதைகள் சிலவற்றைப் படித்தேன். அதில் ஒருநாள் கழிந்தது இன்னும் ஒரு முறை படிக்க வேண்டும். அதேபோல் தேவதச்சனின் மர்ம நபர் என்ற கவிதையைப் படிக்க வேண்டும்.
நான் இன்னொரு புத்தகத்தை எடுத்துப்படிக்கும்போது ஏற்கனவே படித்த புத்தகங்களையும் ஞாபகம் வைத்துக் கொள்ளுகிறேன்.
இப்படி திட்டம்போட்டு படித்தால்தான் உண்டு. மேலும் ஒரு எழுத்தாளன் இன்னொரு எழுத்தாளனின் புத்தகத்தைப் படிக்கும்போது அவனே ஒரு வாசகனாக மாறி விடுகிறான். கநாசு ஒருபக்கம் புத்தகங்களைப் படித்துக்கொண்டும் இன்னொரு பக்கம் எழுதிக்கொண்டும் இருப்பார். புதுமைப்பித்தன் பற்றியும் மௌனியைப் பற்றியும் கநாசுதான் எழுதியிருப்பார். ஆனால் அவர்கள் இருவரும் கநாசுவைப் பற்றி எழுதவில்லை.
நான் எடுத்துக்கொண்டு படித்த புத்தகங்கள் இரண்டு. அதைப்பற்றி இங்குக் குறிப்பிட விரும்புகிறேன். ஒரு புத்தகம் பறந்து திரியும் ஆடு என்ற சிறார் நாவல். எழுதியவர் எஸ் ராமகிருஷ்ணன். ராமகிருஷ்ணனைப் பற்றியும் ஒரு வார்த்தை சொல்ல வேண்டும். அவர் மற்ற படைப்பாளிகளின் புத்தகங்கள் பற்றியும் அவருடைய வாசகர்களுக்குச் சொல்லி புத்தகங்களை வாங்க வைத்திருக்கிறார்.
சிறார்களுக்கு நாவல் எழுதுவது அவ்வளவு சுலபமில்லை. அவர்களுக்கு அறிவுரை கூறுவதுபோல கதை சொல்லவேண்டும். கதையும் படிக்கச் சுவாரசியமாக இருக்க வேண்டும்.
யக்கர் என்ற வயதானவர் பற்றி இந் நாவல். நாற்பது ஆடுகள் வைத்துக்கொண்டு மேய்த்துக் கொண்டிருப்பவர். அவர் திருமணம் செய்துகொள்ளவில்லை. ஆடுகளும் அவரும்தான். யக்கர் ஆடுகளை மேய்க்கும் இடம் பூமியில் இல்லை. வானவெளியில். ஒவ்வொரு ஆட்டிற்கும் அவர் பெயர் வைத்திருக்கிறார். அந்தப் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டால் ஆடுகள் திரும்பிப் பார்க்கும்.
இந்த நாவலை ஒரே மூச்சில் படித்து விடலாம். 40 ஆடுகளில் ஒரு ஆடு குருட்டு ஆடு. குட்டி ஆடு. எப்போதும் மேய்ந்து விட்டு பூமிக்குத் திரும்பி வரும்போது, டுவிங் என்ற குட்டி ஆடு மாத்திரம் திரும்பவில்லை. காணாமல் போய் விடுகிறது.
லிமா என்ற ஆட்டின் குட்டிதான் டுவிங். அது காணாமல் போய்விடுவதை யக்கரிடம் சொல்கிறது. அன்று இருட்டானதால் வானவெளிக்குச் செல்ல முடியாது. அடுத்த நாள்தான் போக முடியும்
டுவிங்கின் பயணம்தான் இந் நாவல். மேகம், வண்ணத்துப்பூச்சி, பாறை, சூரியகாந்திப் பூ என்று ஒவ்வொருவரைச் சந்திக்கிறது. அப்படி சந்தித்துப் பேசும்போது யக்கர் சொன்னார் என்று சந்திக்கின்றவர்களிடம் தன் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கிறது. இறுதியில் யக்கர் ஆட்டுக்குட்டியைக் கண்டு பிடித்துவிடுகிறது.
அனுபவம் தானே ஒருவரை வளரவைக்கிறது. நீ இனிமேலும் நீ ஆட்டுக்குட்டி இல்லை. வளர்ந்த ஆடு என்கிறான் யக்கர். சிறார் நாவல்தான் இது. ஆனால் ஒவ்வொரு முறையும் அலுக்காமல் வாசிக்க முடியும் என்று தோன்றுகிறது. இந்த சிறார் நாவலைப் பொறுத்தவரை இராமகிருஷ்ணனின் கற்பனை வளம் அபாரமாக இருக்கிறது.
நான் படித்த இன்னொரு புத்தகம் துக்கத்தை முடிவுக்குக் கொண்டு வர முடியுமா என்ற ஜே கிருஷ்ணமூர்த்தியின் புத்தகம். நான் ஒரு கிருஷ்ணமூர்த்தி பைத்தியம். என் லைப்பரரியில் டஜன் கணக்கில் கிருஷ்ணமூர்த்தி புத்தகங்கள் இருக்கின்றன. கீரீன்வேஸ் ரேடிற்கு செல்லும்போது வஸந்த விஹாரில் நுழைந்து கிருஷ்ணமூர்த்தி புத்தகங்களை வாங்கிக்கொண்டு வந்து விடுவேன். தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட இப் புத்தகம் ரூ.10தான்.
துக்கத்தை நான் ஏன் ஏற்றுக்கொள்ளúவ்டும்? என்று கேட்கிறார் கிருஷ்ணமூர்த்தி. இது மனதின் இன்னொரு விதமான மேலோட்டமான செயல்பாடே என்கிறார. இறுதியில் இப்படிக் குறிப்பிடுகிறார் நான் துக்கத்தைப் புரிந்து கொள்ளவிரும்புகிறேன் அது எதைக் குறிக்கிறது என்று காண விரும்புகிறேன். அதன் அழகை, அருவருப்பை அதன் அளவுகடந்த ஆற்றலை அறிந்துகொள்ள விரும்புகிறேன். அதை மாற்ற முடியாது என்கிறார். அதைப் புரிந்துகொள்ளவதன் மூலம்தான் முற்றாக அதிலிருந்து விலக முடியும். முற்றாக விடும்படும்போதுதான் பேரறிவு உருவாகும்.
A Rose For Emily by William Faulkner
ReplyDeleteதமிழ்நாட்டு முன்னாள் இளைஞர்கள் பத்மினி, பானுமதி, காஞ்சனா, சரோஜாதேவி போன்ற நடிகைகளை இன்றும் தங்கள் இதய சிம்மானத்தில் இருத்தி வைத்திருப்பதை...... அவர்களைப் பற்றி பேசிச் சிலாகிப்பதையும்
நாம் கண்கூடாகக் காணலாம். அவர்களது திறமை, அழகு அல்லது ஏதோ ஒன்று அவர்களைக் கவர்ந்திருக்கும். அவர்களின் மீது கொண்டுள்ள அன்பும், மரியாதையையும் என்றைக்கும் மறைந்ததில்லை.
அதேபோல்தான், மிஸ் எமிலி இறந்த போது, புராதானச் சின்னம் ஒன்று இடிந்து விட்டதைப் போலவே உணர்ந்தார்கள் அந்த ஊர்ப் பெரியவர்கள். ( ஆண்கள்) அவர்களால் சோகத்தைத் தாங்க முடியவில்லை. எமிலியின் வாழ்க்கை மட்டும் ஏன் இவ்வளவு துக்ககரமாக ஆகிப் போனது என்பதை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.
போர் வீரர்கள் அடக்கம் செய்யப்பட்ட மிக மரியாதைக் குரிய இடத்தில் எமிலியும் அடக்கம் செய்யப் படப் போகிறாள். ஈமச்சடங்கிற்கு, மிலிட்டரியூனிபார்மில் வந்து தாங்கள் அவள் மேல் கொண்டிருக்கும் மரியாதையை வெளிப்படுத்தினார்கள். டைம் மெஷினில் பழைய காலம் நோக்கிப் போனார்கள் கிழவர்கள். எமிலியை காதலித்தது போலவும், காதல் மொழி பேசியது போலவும், அவளுடன் டான்ஸ் ஆடியது போலவும் கனவு கண்டு கண்ணீர் சிந்தினார்கள்.
எமிலியின் குடும்பம், அமெரிக்கன் சுதந்திரப் போரில் பங்கெடுத்த செல்வாக்கான குடும்பம்.
எமிலியைக் கல்யாணம் பள்ளிக் கொள்ள வேண்டும் என்பதுதான் அந்த ஊர் இளைஞர்களின் கனவாக இருந்தது. ஆனால் என்ன காரணத்திற்கென்று புரியவில்லை. எமிலியின் தந்தை அவளை நெருங்கிய இளைஞர்களை எல்லாம் விரட்டி அடித்தார்.
எமிலிக்கு 30 வயதுக்கு மேல் ஆனது. அவளது தந்தையும் இறந்து போனார். அந்த ஒற்றை வீடும் தனிமையும்தான் மிஞ்சியது. ஏழையாகி, யாரும் இல்லாத அனாதையும் ஆகிப் போனாள்.
அப்பொழுதுதான் அங்கிருக்கும் ரோட்டிற்கு சிமெண்ட் போடும் வேலைக்காக சில பேர் வந்து இறங்கினார்கள். அதில் இருந்த மேஸ்திரியும், எமிலியும் ஒன்றாகச் சுற்றினார்கள். பெண்கள் மண்ணை அள்ளித் தூற்றினார்கள். எப்படியாப்பட்ட குடும்பம்! குலப் பெருமையை நாசமாக்கிட்டாளே என்று திட்டித் தீர்த்தார்கள். அலபாமாவில் இருக்கும் தூரத்துச் சொந்தக்காரிக்கு லட்டர் போட்டார்கள். சர்ச் பாதர்கிட்ட கம்ளைண் செய்தார்கள்.
ஒரு நாள் கடைக்கு சென்று ஆர்சனிக் பாய்சன் வேண்டும் என்று கேட்டாள் எமிலி.
“தற்கொலைபண்ணிக்க போறா போலிருக்கு! சாவட்டும் கழிதை” என்று கறுவினார்கள் பெண்கள். ஆண்களோ மிகுந்த இரக்கப்பட்டார்கள்.
எமிலி 74 வயதில் தான் செத்துப் போனாள். தன் 32 வயதில் காதலன் காணாமல் போனதில் இருந்து வீட்டை விட்டு வெளியே வரமாட்டாள். வீடு பூட்டியேதான் இருக்கும். ராத்திரி நேரம் ஊர்மக்கள் அவள் வீட்டு ஜன்னலை நோட்டம் இடுவார்கள். ஒரு சேரில் உட்கார்ந்து ஆடாமல் அசையாமல் ஏதோ எழுதிக் கொண்டிருப்பாள்.
எல்லோருக்கும் மேல்மாடியில் உள்ள ஒரு அறை பல நாள்களாகத் திறக்கப்படவில்லை. அங்கே என்ன இருக்கிறது என்று பார்த்துவிடவேண்டும் என்று குறு குறுப்பு.
அந்த அறை உடைக்கப்பட்டது. சாந்தி முகூர்த்த அறை மாதிரி இருந்தது. எமிலியின் காதலனின் கோட், சூட், ஷூக்கள், அவனுக்கு எமிலி வாங்கின பரிசு எல்லாம் அப்படியே இருந்தது.
மெத்தையின் மீது ஒரு எலும்புக்கூடு! அதன் அருகே இருந்த இன்னொரு தலையணையின் மீது யாரோ பல நாட்கள் படுத்திருந்ததன் அடையாளமாக சற்றே குழிந்து உள்வாங்கி இருந்தது. சற்றே குனிந்து அதிலிருந்த, அந்த தலையணையின் மீதிருந்த ஒன்றைக் கையிலெடுத்தார் ஒரு கிழவர். அது நரைத்துப் போன எமிலியின் ஒன்றைத் தலை மயிர்!
( எமிலியுடன் இருக்கும், எமிலிக்குகாய்கறி வாங்கி வரும் ஊமை போன்ற நீக்ரோ கதா பாத்திரம் அருமை)