Thursday, September 5, 2019

நான்காம் நாளின் வாசிப்பனுபவம்..

வியாழன் வாசிப்பை இங்கே பதிவிடவும்.

நான்காம் நாளின் வாசிப்பனுபவம்..


அழகியசிங்கர்






திரும்பவும் இரவு 9 மணி அளவில்தான் புத்தகத்தைத் தொட முடிந்தது. ஆனால் நேரத்தைக் குறிக்கோளாக வைத்துக்கொண்டு படிக்கவில்லை. அப்படிப் படித்தால் இந்தப் புத்தகத்தை முடிக்க முடியாது. அதனால் நான் கடிகாரத்தைத் தூக்கிப் போட்டுவிட்டேன்.  ஆனால் புத்தகத்தை முடிக்க வேண்டுமென்ற குறிக்கோளுடன் இருந்தேன்.

நான் படித்த புத்தகம் üஉடல் மொழியின் கலைý வெளி ரங்கராஜன் எழுதியது.  டெமி சைஸில் 138 பக்கங்கள் கொண்ட புத்தகம். 22 கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு.  

வெளி ரங்கராஜனின் எழுத்து நடையைக் குறித்துச் சொல்ல வேண்டுமென்று தோன்றுகிறது.

உதாரணமாக : மணிமேகலை காப்பியத்தின் ஆழ்மன நீரோட்டம் என்ற கட்டுரையை எடுத்துக்கொள்ளுங்கள்.  வெளி ரங்கராஜன் இப்படி எழுதுகிறார்.

"நமது காப்பியங்கள் குறிப்பிட்ட மையச் சரடுகளை இலக்காகக் கொண்டு இயங்குவது போன்ற தோற்றங்களை உருவாக்கினாலும் அவைகளுக்கு இடையே பலவாறாகப் பிரிந்து செல்லும் சிறு கதையாடல்களும் பாத்திரங்களின் இயக்கங்களும் சார்புகள் கடந்த ஒரு வாழ்வுணர்வை சாத்தியப்படுத்தி ஒரு இலக்கியப் படைப்பின் நம்பகத்தன்மையை உறுதி செய்கின்றன."
உண்மையிலேயே இதைப் படிக்கும் வாசகருக்குத் தலையைச் சுற்றிக்கொண்டு வரும்.  ஆனால் இயல்பாகவே இது மாதிரி எழுதுகிறாரா என்பது தெரியவில்லை.  ஏன் என்றால் நகுலனை நோக்கிய ஒரு பயணம் என்ற கட்டுரையில் இம்மாதிரியான கடுமையான நடை இல்லை.
அதேபோல் ஓவியர் கிருஷ்ணமூர்த்தி - சில மனப்பதிவுகள் என்ற கட்டுரையில் இறுக்கமில்லாத நடையில் எழுதியிருக்கிறார்.  அதில் சில வரிகள் ரசிக்கும் படியாகவும் இருக்கிறது.
இதோ : üஅவருடைய சித்திரமே ஒரு மேகமூட்டம் படிந்த பழைய ஓவியம் போல உள்ளது.ý என்று எழுதியிருக்கிறார்.
இதில் ஒருசில கட்டுரைகள் மொழி பெயர்த்துள்ளார்.  நாடகத்தைப்பற்றி இவர் கூறுவதைக் கூர்ந்து கவனிக்க வேண்டுமென்று படுகிறது.  இந்தப் புத்தகத்தை இன்னும் ஒரு முறை படித்து என்னுடைய பதிவை வெளிப்படுத்துகிறேன். 
இன்று இந்தப் புத்தகத்தை எடுத்துப் படித்தேன் என்பதைப் பெருமையுடன் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.   

3 comments:

  1. இன்று வாசிப்பில் இருக்கும் நாவல் ஜெயகாந்தனால் எழுதப்பட்டது.

    ஒரு வாசகனுக்கு தன் நாவலில் பின்னால் விரிவாகச் சொல்லப் போகும் விஷயங்களைக் காட்டிலும் அதன் முன்னுரையில் சுருக்கமாக இப்படிச் சில முத்துகளையும் உதிர்த்துவிடுகிறார் நாவலாசிரியர்.

    "நமது வாழ்க்கையில், படித்த முட்டாள்களும் பாமர ஞானவான்களும் நிறைந்திருக்கிறார்கள்."

    ~ ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகத்தின் முன்னுரை யிலிருந்து..

    ReplyDelete
  2. பெரும் புயல் வருவதற்கான அறிகுறி. காற்று அடிக்கவில்லை. மரத்தின் இலைகள் எல்லாம் ஆடாமல் அடையாமல் நிற்கிறது. வெக்கையினால் வேர்த்துக் கொட்டுகிறது. பெட்டிக் கடையில் பொருட்கள் வாங்க வந்த பாபினெட்டும், அவனது நான்கு வயது மகனும் அங்கே மாட்டிக் கொள்கிறார்கள்.

    புயல், மின்னல், இடியுடன் கூடி பெருமழை உக்கிர தாண்டவம் ஆடத் தொடங்கியது. துணி தைத்துக் கொண்டிருந்த கேலிக்ஸ்டா அவசர அவசர அவசரமாக ஜன்னல்களை மூடுகிறாள். வெளியில் காய்ந்து கொண்டிருந்த பாபினெட், பிபியின் துணிகளை எடுக்க வரும்போதுதான் அவனைக் கவனித்தாள். அல்ஸீ! அவனது குதிரையை அருகிலிருந்த கொட்டிலில் கட்டிவிட்டு

    ‘ நான் கொஞ்ச நேரம் இந்த திண்ணையில் நின்று கொள்ளலாமா’ என்று கேட்கிறான்.

    ஆனால் அடித்த புயல் மழையில் அவன் அங்கே நிற்கக் கூட இயலாதென்பதை உணர்ந்து கொண்ட அவன் கேலிக்ஸ்டாவின் வீட்டிற்குள் நுழைகிறான். மழைத் தண்ணீர் வீட்டிற்குள்ளே புகுந்து விடாமல் இருக்க கதவின் அடியில் துணிகளை வைத்து அணை கொடுக்கிறார்கள்.

    கேலிக்ஸ்டா மிகுந்த பதை பதைப்புடன் இருக்கிறாள். கணவர் பாபினெட், மகன் பிபியின் நிலைமை என்ன ஆயிற்றோ என்று பதற்றமாக இருக்கிறது. ஜன்னலின் அருகே போய் நின்று வெளியே பார்க்கிறாள். ஒரு மரத்தின் மீது இடி விழுந்து மரம் சாய்ந்து விடுகிறது. மின்னல் விட்டு விட்டு அடித்து கண்ணைப் பறிக்கிறது.

    அவளுக்குப் அருகில் பின்னால் வந்து நிற்கிறான் அல்ஸீ. அவள் திரும்புகையில் அணைத்துக் கொள்கிறான். அவனிடமிருந்து தன்னை விடுவித்துக் கொள்கிறாள்.

    அவளது வெண்மை நிறமும், தங்க நிற கூந்தலையும், மாதுளம் பழத்தின் நிறத்திலிருந்த உதடுகளையும், முழுமையடைந்தஉடம்பையும் பார்த்த போது 5 வருடங்களுக்கு முன்பு இருந்ததை விட மிகப் பொலிவுடன் இருப்பதாக அல்ஸீக்குத் தோன்றியது. இடி, மழை, புயல், மின்னல் .... யாரும் அவர்கள் அருகே நெருங்க இயலாத தனிமை!! அப்புறம் என்ன? தமிழ் சினிமா ரொமாண்டிக் காட்சி போல் எல்லாம் நடந்து முடிந்து விடுகிறது. எல்லாம் முடியும் நேரத்தில் சொல்லிவைத்தாற் போல் புயல் மழையும் மெல்ல அடங்கி விடுகிறது. அல்ஸீ குதிரையைக் கிளப்பிக் கொண்டு போய்விடுகிறான்.

    கேலிக்ஸ்டாவின் கணவனும், மகனும் வீடு திரும்புகின்றனர். கணவர், குழந்தையுடன் அளவளாவிக் கொண்டு மகிழ்ச்சியுடன் கல கலத்துச் சிரிக்கிறாள் கேலிட்ஸ்டா. அவர்கள் மூவரும் சேர்ந்து சிரித்த சத்தம் தூரத்தில் போய்க் கொண்டிருக்கும் அல்ஸீக்கு கூடக் கேட்டிருக்கும்!

    அன்று இரவு அல்ஸீ, தன் மனைவிக்கு ஒரு அன்புக் கடிதம் எழுதுகிறான். தான் நலமாக இருப்பதாகவும், முடிந்தால் குழந்தைகளுடன் இன்னும் சிறிது நாள் தங்கிவிட்டு வரலாமென்றும் சொல்லுகிறான்.

    எல்லா இடத்திலும் எல்லோரும் சந்தோஷமாக இருக்கிறார்கள். எங்கும் மகிழ்ச்சி! எதிலும் மகிழ்ச்சி! சுபம்! என்று தன் சிறுகதையை முடிக்கிறார் கதாசிரியை கேட் சோபின்.

    மழையும்,புயலும்இளையராஜா அவர்களின் பின்னணி இசை போல் இருக்க அங்கே நிகழும் சம்பவங்களை மெல்ல, மெல்ல சுவையாய் நகர்த்திய விதம் அருமை. வாசிப்பவர்களின் இதயத்தை ’ திக் திக்’ என அடிக்க வைத்து, கேலிக்ஸ்டா மற்றும் அல்ஸீக்கு இடையே நிகழும் ரொமான்ஸை மிகச் சுவையாகக் கையாண்ட கேட் சோபின் ஒரு திறமையான கதாசிரியை என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

    இந்த கதை எழுதப்பட்ட ஆண்டு 1899!!!! அந்த கால கட்டத்தில் இந்த கதையை பத்திரிகைகளுக்கு அனுப்ப இவருக்கு கிஞ்சித்தேனும் தைரியம் வரவில்லை. இதைப் படிக்கும் அமெரிக்க ஆண்கள் முதுகை உரித்து உப்பு கண்டம் போட்டு விடுவார்கள் என்பதே அவரது அச்சமாக இருந்திருக்கக் கூடும்

    ReplyDelete
  3. “To Build A Fire” by Jack London

    கதை எழுதப்பட்ட ஆண்டு 1908. மைனஸ் 75 டிகிரி கொடூரக் குளிர் அடிக்கும் நேரத்தில் அலாஸ்காவின் காட்டுப் பகுதியைக் கடக்கிறான் ஒருவன். ஒரு வயதான தாத்தா இந்த சமயத்தில் அங்கு போவது சரியில்லை என்று சொல்கிறார். அதையெல்லாம் உதாசீனம் செய்துவிட்டு அசட்டுத் தெரியத்துடன் செல்கிறான். அந்த காட்டுக்குள் தொலை தூரத்தில் ஒரு புகலிடத்தில் தங்கியிருக்கும் அவனது மகன்களைச் சந்திப்பதற்காகவே இந்தப் பயணம். அவனுடன், பார்ப்பதற்குஓநாய் போன்றிருக்கும் நாயும் உடன் செல்கிறது.
    முதலில் ஆற்றின் மீது நடக்கையில் பனி உடைந்து பாதங்கள் நனைந்து விடுகிறது. பின் இடுப்பு வரை நனைந்து விடுகிறது. காய்ந்த சுள்ளிகளை எடுத்துப் போட்டு கஷ்டப்பட்டு தீ வளர்க்கிறான். ஆனால் அந்தத் தீயின் நேர் மேலேயிருந்த மரத்திலிருந்த பனிக் கட்டிகள் தீயினுள் விழுந்து தீயை அணைத்து விடுகொன்றன. கை விரல்களையும், காலையும் அசைக்க முடியவில்லை. கழுத்து அறுபட கோழியைப் போல் ஓடுகிறான். பிறகு சாவை சம்மதித்து ஏற்றுக் கொண்டு ஒரு பாறையின் மீது உட்கார்ந்து கொள்கிறான். அவனுக்கு தன் மகன்கள் அங்கு வருவது போலவும் காப்பாற்றுவது போலவும் காட்சிகள் தெரிகின்றன. ஆனால் யாரும் வரவில்லை. இறந்து போய்விடுகிறான். அந்த நாய் மட்டும் அந்தபுகலிடத்தைத் தேடி ஓடுகிறது.

    ******

    ReplyDelete