அழகியசிங்கர்
மூன்றாம் நாள் வாசிப்பனுபவம் இன்னும் மோசமாகி விட்டது. பெண் வீட்டிலிருந்து புறப்பட்டு என் வீட்டிற்கு வந்து விட்டேன். காலையில் ஒரு கிரஹப்பிரவேசம் செல்ல வேண்டி வந்து விட்டது. மாலை ஒரு திருமண ரிசப்ஷன். ரொம்ப தூரத்தில் உள்ள இடத்தில் நடந்தது. மதிய நேரம் விருட்சம் எல்லோருக்கும் அனுப்பிக் கொண்டிருந்தேன். விருட்சம் அனுப்பினாலும் இன்னும் யாருக்காவது அனுப்பாமல் இருக்கிறோமா என்ற சந்தேகம் வந்துகொண்டிருக்கும்.
ஆனால் புத்தகத்தைத் தொட முடியவில்லை. வாசிப்போம் வாசிப்போம் என்று ஆரம்பித்ததனால் குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது தினமும் வாசிப்பது என்ற எண்ணம் நிறைவேறாமல் போகிறது. ஒருவர் தினமும் வாசிக்கத்தொடங்கினால் வாசிக்காமல் இருக்க முடியாது என்ற நிலைக்குப் போய்விடும். நேற்று ஒருவரைச் சந்தித்தேன். தினமும் காலையில் செய்தித்தாள் படிக்காமலிருக்க முடியாதாம். அதன்பின்தான் நடைபயிற்சியாம். அதேபோல் ஒருவர் வாசிக்க ஆரம்பித்துவிட்டால் ஒருநாள் வாசிக்காமலிருந்தால் என்னமோ மாதிரி ஆகிவிடும் என்று தோன்றுகிறது. 50 நாட்கள் நாம் முயற்சி செய்து பார்த்தால் இது எந்த விதத்தில் பயன்படுகிறது என்று பார்க்கலாம்.
க நா சு தினமும் எதாவது வாசித்துக்கொண்டே இருப்பார். எது படிப்பதற்குக் கிடைத்தாலும் படித்து விடுவார். படிப்பதுபோலவே வேகமாக எழுதவும் செய்வார். வார் அன்ட் பீஸ் என்ற புத்தகத்தை ஒருவர் எடுத்துக்கொண்டால் அதை எப்படி ஆரம்பிப்பது எப்படிப் படிப்பது என்று யோஜனை செய்வார்கள். கநாசு அதையே இரண்டு மூன்று முறை படித்து விட்டார்.
நான் இரவு பத்துமணிக்குமேல்தான் படிக்க ஆரம்பித்தேன். நேற்றைய விட நேரம் குறைவுதான் நான் படித்தது. காலையில் எழுந்தவுடன் நேரத்தைச் சரி செய்து விட்டேன். ஆனால் இன்று படிக்க வேண்டியதைப் படிக்க வேண்டும்.
நாம் படிக்கிற புத்தகம் முழுதாக இல்லாவிட்டாலும் படித்த வரை நமக்குத் தோன்றுவதை எழுதலாம். ஒரு புத்தகத்தைப் பற்றி ஒருவார் ஆகா ஓகோ என்று எழுதலாம். அதே இன்னொருவருக்கு அந்தப் புத்தகத்தில் என்ன இருக்கிறது என்று தோன்றும். இரண்டு பேர்களுமே வாசிப்போம் வாசிப்போம் பகுதியில் பங்கு பெறலாம்.
நேற்று நான் படித்த புத்தகம் எல்லோருக்கும் தெரிந்த ஒருவரின் புத்தகம்தான். கண்ணதாசனின் வனவாசம் என்ற புத்தகம்.இந்தப் புத்தகத்தை முன்பே நான் படித்திருக்கிறேன். ரொம்ப வருடங்களுக்கு முன்பு. என் நண்பர் நடைப்பயிற்சியின்போது இந்தப் புத்தகத்தை லைப்பரரியிலிருந்து எடுத்துப் படித்ததாகக் கூறினார். உடனே என் மனதில் இந்தப் புத்தகம் ஏறி விட்டது. என் வீட்டு லைப்பரியில் இந்தப் புத்தகம் என் கண்ணில் பட்டது. பெ சு மணி எனக்கு இந்தப் புத்தகத்தை 14.10.2017 அன்று அன்பளிப்பாகக் கொடுத்தார்.
கண்ணதாசனை படிக்காமல் யாரும் இருந்திருக்க மாட்டார்கள். அதேபோல் அவர் திரைப்பாடல்களை ரசிக்காமலும் இருந்திருக்க மாட்டார்கள்.
வனவாசம் என்ற இந்தப் புத்தகம் கண்ணதாசனே தன்னைப் பற்றி எழுதிய வாழ்க்கை வரலாறு. 1943லிருந்து 1961 ஏப்ரல் வரை எழுதப்பட்ட வாழ்க்கை வரலாறு இது. சுயசரிதத்தை நான் என்று ஆரம்பிக்காமல் அவன் என்று ஆரம்பித்து எழுதியிருக்கிறார்.
எப்படி வாழ வேண்டும் என்பதற்கு இந்த நூல் ஒரு வழிகாட்டி இல்லை. ஆனால் எப்படி வாழக்கூடாது என்று இந்த நூல் சொல்கிறது என்பதாக முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.
நெடுஞ்செழியன் எப்போதும் தாடி வைத்துக்கொண்டிருப்பாராம் . அவரை எப்போதும் இளந்தாடி நெடுஞ்செழியன் என்று குறிப்பிடுவார்களாம். ஆனால் சேலத்தில் ஒரு அரசியல் கூட்டத்தில் பேச வரும்போது தாடியை எடுத்து விட்டாராம்.
அப்போது பேச ஆரம்பிக்கும்போது உருவம் மாறியிருக்கிறது. ஆனால் உள்ளம் மாறவில்லை என்று பேச ஆரம்பித்தாரம். கருணாநிதியைச் சந்தித்து விட்டு கோவைக்கு ரயிலில் ஏறுகிறார் கண்ணதாசன். அந்த ரயில் பெட்டியில் உள்ள ஒரு தம்பதியருக்கு மூன்று ஆண் குழந்தைகள். எல்லோரும் குருடர்கள். இதை கண்ணதாசன் உருக்கமாக விளக்குகிறார்.
இன்னொரு வேடிக்கையான அனுபவத்தை விளக்குகிறார். அவர் தங்கியிருந்த விடுதியில் அவர் அறைக்குச் செல்வதற்குப் பதில் வேற ஒரு அறைக்குச் சென்று விடுகிறார். அவர் பெட்டியில் மதுபாட்டில் இருப்பதைப் பார்த்துத் திகைத்து விடுகிறார். போலீஸ் காரர் வந்து கண்டு பிடித்து விடுவார்களே என்ற பயத்தில் அறை வாசலில் மதுப் பாட்டிலை வைத்து விடுகிறார். போலீஸ் வருகிறது. ஒன்றுமில்லை என்று தேடிவிட்டு சென்று விடுகிறது. பிறகுதான் கண்ணதாசனுக்குத் தெரிகிறது அது தன்னுடைய அறை இல்லை என்று. இது மாதிரி பல சுவையான சம்பவங்களைக் கொண்ட புத்தகம் நான் முழுவதுமாகப் படிக்கவில்லை. 160பக்கங்கள்தான் படித்திருக்கிறேன். இன்னும் படிக்க வேண்டும். படித்த பிறகு எனக்கு ரசிக்கும்படி தோன்றுகிற கருத்தை வெளிப்படுத்துகிறேன்.
ஒரு புத்தகத்தை முழுதாகப் படிக்க முடியாவிட்டாலும் ரசித்தவரை உள்ளவற்றை வாசிப்போம் வாசிப்போம் என்ற பகுதியில் குறிப்பிடலாம். அதிகப் பக்கங்கள் உள்ள புத்தகத்தை உடனே முழுவதும் படிக்க முடியாது. கொஞ்சம் கொஞ்சமாகத்தான் படிக்க முடியும்.
என் மூன்றாவது நாள் வாசிப்பனுபவம் இவ்வளவுதான்.
இதுவரை இந்தக் குழுவில் சேராதவர் இப்போது கூட இந்த வாசிக்க வாசிக்கக் குழுவில் சேர்ந்து ஒவ்வொரு நாளும் படிக்கும் புத்தகத்தைப் பற்றி குறிப்பிடலாம்.
சி.சு.செல்லப்பாவின் சுதந்திரதாகத்தின் முதல் பாகத்தை வாசித்துவருகிறேன்.விடுதலைப்போர் பற்றி எழுதப்பட்ட மிக க்குறைவான தமிழ்ப்புனைவுகளில் இதுவும் ஒன்று.வேலைநாள் என்பதால் காலை 20பக்கங்கள் மட்டும் வாசித்தேன்.இரவிற்குள் 50பக்கங்களைக் கடந்துவிடுவேன்.
ReplyDeleteஇன்று காலையில் இருந்து வாசிப்பில் இருக்கும் புத்தகம் யுவன் சந்திரசேகரின் குள்ள சித்தன் சரித்திரம்..!
ReplyDeleteமூன்றாம் நாள் வாசிப்பு
ReplyDeleteஎழுத்தாளர் திரு. கணேசகுமாரன் அவர்களின்
சிறுகதைகளைத் தொடர்ந்து வாசிக்க ஆரம்பித்தேன்.
இக் கதைகளில் வரும் கதாபாத்திரங்களில் சிலவற்றிற்கு மன நிலையில் சிறிது சிறிதாக பிறழ்வு ஏற்பட்டு பைத்தியமாகும் நிலைக்குச் செல்கிறார்கள் அல்லது பைத்தியமாகிறார்கள். பைத்தியமாகும் மாறும் நிலைகளை கை தேர்ந்த எழுத்தின் மூலம் ஆசிரியர் கண் முன் கொண்டு நிறுத்துகிறார் என்றாலும் வாசிக்கும் நமக்கு, நம் சிற்றறிவிற்கு புரியாத மாதிரி இருக்கிறது. நம் வாசிப்பில் குறை இருக்க வாய்ப்பிருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன். பெரும்பாலும் காமமும், சோகமும்
அடிநாதமாக வலம் வருவதையே நாம் காணலாம்.
‘மழைச் சன்னதம்’ - மகள் திடீரென்று வீட்டை விட்டு ஓடிவிட்டதால் அதிர்ச்சி அடைந்த அம்மாவுக்கு சிறிது சிறிதாக மனப் பிறழ்ச்சி ஏற்படுகிறது. உன்பெண்டாட்டி நடத்த கெட்டவடா ‘ என்று வெடி குண்டையல்லாம் தூக்கிப் போடுகிறார். ஒரு நாள் வீட்டிலிருந்து காணாமல் போகிறார். மகன் அவரை எல்லா இடங்களிலும் தேடி அலை பாய்கிறான். ஒரு நாள் வீட்டிற்கு திரும்பி வந்து சன்னதம் வந்தது போல் ஆடுகிறார். இக் கதையின் உள் ஏகப்பட்ட அர்த்தங்கள் பொதிந்திருப்பது போல் தோன்றினாலும் நமக்குப் புரியாத காரணம் நம் பிழையேயன்றி ஆசிரியரின் பிழை அல்ல என்றே தோன்றுகிறது.
‘கையறு மனம்’ இந்தச் சிறுகதையைப் படித்த போது, இந்த மாதிரி நிலைமை மானுடர்களாகப் பிறந்த யாருக்கும் நிகழக் கூடாது என்று நினைத்துக் கொண்டேன்.
‘ஏலி ஏலி லாமா சபக்தானி’ வாசித்தவற்களுக்கு இரண்டு, மூன்று நாட்களுக்கு கண்ணில் தூக்கம் வராமல் படுக்கையில் புரண்டு கொண்டிருப்பார்கள். அந்த அளவுக்கு சோகம்.
‘ இருள் யாசகன்’ இந்த கதை எனக்குப் புரியவில்லை. பைத்தியக் கதாபாத்திரம் ஒன்று வருகிறது. கடைசியில் இறந்து விடுகிறது.
‘உன்மத்தப் பூவில் பெய்யும் மழை’ இந்தக் கதை உணர்வுகளின் ஓங்காரமாக இருக்கிறது. எனக்குப் புரியவில்லை.
‘நான் சகாயம்’ திருநங்கையின் மன உணர்வுகளைப் படம் பிடித்து காட்டுகிறது.
இன்றைக்கு இவ்வளவுதான்.