Saturday, September 7, 2019

ஆறாம் நாளின் வாசிப்பனுபவம்..(07.09.2019)


அழகியசிங்கர்





வழக்கம்போல ஆறாம் நாள் அன்று என்ன படிக்கலாமென்று யோசித்துக்கொண்டிருந்தேன்.  என் முன்னால் ஏகப்பட்ட புத்தகங்கள். என்ன படிக்கப் போகிறாய் என்ன படிக்கப்போகிறாய் என்று ஒவ்வொரு புத்தகமும் என்னைப் பார்த்து முறைத்துக் கொண்டிருந்தது.  என்னைப் பொறுத்தவரை ஒரு புத்தகம் படித்தால் அதைப் பற்றி கொஞ்சமாவது எழுத வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்.
முந்தாநாள் படித்த ஒருநாள் கழிந்தது என்ற புதுமைப்பித்தன் கதையை இன்னும் ஒருமுறை படிக்க வேண்டுமென்று தோன்றியது.  ஆனால் நேரமில்லை.  அடுத்த புத்தகத்திற்குப் போக வேண்டும்.  என்னால் ஒரு மணி நேரத்திற்கு மிகக் குறைவான பக்கங்கள்தான் படிக்க முடிகிறது.  அதாவது 40லிருந்து 50 பக்கங்கள் வரைதான் படிக்க முடிகிறது.  100 பக்க நாவல் படிப்பதாக இருந்தால் இரண்டு மூன்று நாட்கள் ஆகிவிடுகிறது.  ஆங்கிலப் புத்தகமென்றால் இன்னும் மோசம்.  
நாவல் என்னால் உடனே படித்து எழுத முடியாது.  ஒரு நாவல் 100 பக்கங்கள் இருந்தால் குறைந்தபட்சம் இரண்டு நாட்கள் ஆகும். நான் ஒரு நாளைக்குப் புத்தகமே படித்துக்கொண்டிருந்தால் வீட்டிலிருப்பவர்கள் உதைக்க ஆரம்பித்துவிடுவார்கள்.  நான் நிதானித்துதான் புத்தகம் படிக்க வேண்டும்.  வீட்டில் உள்ளவர்களின் கட்டளையை மீறாமல் படிக்க வேண்டும்.  படித்துக் கொண்டிருக்கும்போது, வீட்டில் உள்ளவர்கள் காப்பிப் பொடி இல்லை வாங்கிக்கொண்டு வர வேண்டும் என்று சொன்னால் அதை முதலில் முடித்துவிட்டுத்தான் திரும்பவும் படிக்க வேண்டும்.
அதனால் நான் நாவல் படிப்பதை விட ஒரு சிறுகதைத் தொகுப்பு, ஒரு கவிதைத் தொகுப்பு, ஒரு கட்டுரைத் தொகுப்பு படிக்கலாம். நாவல் என்றால் முழுதாகப் படிக்க வேண்டும்.  அதைப் பற்றி எழுத வேண்டுமென்றால் கூடுதல் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். சிறுகதைத் தொகுப்போ கட்டுரைத் தொகுப்போ என்றால் படித்தவரை எதாவது எழுதிப் பார்க்கலாம்.  இன்னும் படிக்கப் படிக்க இன்னும் எழுதலாம்.  ஒரு கட்டத்தில் எல்லாவற்றையும் படித்து முடித்து விடலாம்.
இந்த முறை நான் படிக்க எடுத்துக்கொண்டது ஒரு கவிதைத் தொகுப்பு.  என் கண் முன்னால் படிக்க வேண்டும் படிக்க வேண்டும் என்று வைத்துக்கொண்டிருந்து எப்போது ஆரம்பிக்கப் போகிறேன் என்று விழித்துக்கொண்டிருந்தேன்.  இந்த ஒரு மணி நேரம் தினமும் படிக்கிற ஸ்கீம் சரியாக இருந்தது.  மர்ம நபர் என்ற தேவதச்சன் கவிதைகளைப் படிக்க ஆரம்பித்தேன்.
இந்தப் புத்தகத்தை அற்புதமான முறையில் உயிர்மை தயாரித்து இருக்கிறது.  350 கவிதைகள் அடங்கிய தொகுப்பு.  தேவதச்சன் அவர் கவிதைகளைக் குறித்து ஒன்றும் எழுதவில்லை.  ஒவ்வொரு கவிதையும் எந்த ஆண்டு எழுதப்பட்டது என்ற குறிப்பு கூட இல்லை.  
ஒவ்வொரு கவிதையையும் படிக்கும்போது இந்தப் புத்தகம் முடிந்து விடக் கூடாது என்று தோன்றியது.  இப்படியொரு மயக்கம் எனக்கு எந்தக் கவிதைத் தொகுப்பு படிக்கும்போதும் உண்டாகவில்லை.  நான் 52 கவிதைகள் மட்டும்தான் படித்துள்ளேன்.  அதாவது கிட்டத்தட்ட 72 பக்கங்கள்.  
நேற்று நாமக்கல் கவிஞர் கவிதையை எடுக்கும்போது ரொம்பவும் முயற்சி செய்து அவர் கவிதை என் மனதிற்குப் பிடித்த கவிதைகள் தொகுப்பில் இடம் பெற வேண்டுமென்று சேர்த்தேன்.  அவருடைய எல்லாக் கவிதைகளும் கருத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டிருந்தன.  பாரதி, காந்தி, காமராஜ், நேரு, தமிழ் என்ற தலைப்புகளில் கவிதைகள் எழுதியிருக்கிறார்.  
ஆனால் தேவதச்சன் கவிதையை எடுத்துக்கொண்டால் என்ன இப்படி எழுதியிருக்கிறார் என்ற வியப்பே ஏற்பட்டது.  ஒவ்வொருவரும் இந்தப் புத்தகத்தை வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும்.  யார் கவிதை எழுத முயற்சி செய்தாலும் ஒரு முறை தேவதச்சன் கவிதையை வாசிக்க வேண்டும்  ஒவ்வொரு கவிதையிலும் அளவுக்கு அதிகமான வரிகள் இல்லை.  கவிதையை எந்த இடத்தில் முடிக்க வேண்டுமென்ற இடத்தில் முடித்திருக்கிறார்.
இவர் கவிதைகளை மனதிலிருந்து எழுதுகிறார் என்று நினைக்கிறேன்.   நான் 52கவிதைகளைப் படித்தாலும் திரும்பவும் ஒரு முறை முதலிலிருந்து படிக்க வேண்டுமென்று தோன்றுகிறது.
நான் படித்தவரை 52 கவிதைகளிலிருந்து எந்தக் கவிதை வேண்டுமென்றாலும் எடுத்துக்கொண்டு பேசலாம்.  ஆனால் சிரிப்பு என்ற ஒரு கவிதையை மட்டும் இங்குக் குறிப்பிட விரும்புகிறேன்.

      சிரிப்பு

கண்ணாடி டம்ளர்
கீழே விழுந்து 
உடைந்தது
"கண்ணாடி கண்ணாடி" என்று 
கத்தவில்லை அது
"டம்ளர் டம்ளர்" என்று 
குரல் உயர்த்தவில்லை
சிறு இடத்தில் சந்தி
ஓடிய பழுப்பு நிறத் தேநீர்
"தேநீர் தேநீர்" என்று 
அரற்றவில்லை
கிளங்
என்று 
கேட்கிறது
அசரீரிச் சிர்பொன்று, பிறகு
இரண்டாவது முறை அது
கேட்கவில்லை

இந்த ஒரு கவிதையிலேயே எல்லாமும் அடங்கி இருக்கிறது. கச்சிதமாக எழுதுகிறார், புரியும்படியாக எழுதுகிறார்.  வாசிப்பவனை வித்தியாசமாக யோஜனை பண்ண வைக்கிறார்.  இதுதான் தேவதச்சன்.

 

3 comments:

  1. Sidny Sheldon தொடர்கிறது

    ReplyDelete
  2. வளவ.துரையன்September 7, 2019 at 5:23 PM

    சனி வாசிப்பு ஒன்றரை மணி நேரம்
    இம்மாதத்தடம்

    ReplyDelete
  3. எழுத்தாளர் திரு. வண்ணதாசன் சிறுகதைகள்


    இன்று வாசிப்பதற்கு மனம் மக்கர் பண்ணியது. சனிக்கிழமைதானே ரெஸ்ட் எடுக்கலாம் என்று சொல்லியது. அட அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரம் வாசிக்கணும் இதுக்குப் போயி இப்படி மக்கர் பண்றீயேன்னுஇன்னொருமனம் குத்திக் காட்டியது. கழுத்து, தோள்பட்டை வலிக்க மாதிரி இருந்தது. என்றாலும் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல எழுத்தாளர் திரு. வண்ணதாசன் அவர்களின் சிறு கதைகளை எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன்.

    இவரது கதைகளில் இல்லற வாழ்க்கை, காதல், பாசம் முதலியவை முக்கியமாகக் காட்டப்படுகிறது. கதை சீராக வழுக்கிக் கொண்டு ஓடும் சமயங்களின் இடையில் கதாபாத்திரங்களின் மன உணர்வுகள் கவிதைகள் போலும், சிந்தனைகள் போலும் வந்து விழுகின்றன. இவரது கதைகளை நின்று, நிதானமாக, நேரம் எடுத்துப் படிக்க வேண்டும்.
    கதாசிரியரும், வாசகரும் ஒரே அலைவரிசையில் ஒன்றாகிவிடுகின்ற தருணங்கள் என்பது, ஆழ்ந்துபடித்து அந்தக் கதைகளைப் பற்றி சிந்திப்பதன் மூலம்தான் உருவாகிறது.

    ‘அந்தப் பையனும் ஜோதியும் நானும்’ - உடன் பணிபுரியும் காதலி புத்திசாலி. அவளுக்கு நகைகளை அணிந்து கொள்வதில் விருப்பமில்லை. ஒரு நாள் அவர்கள் நடந்து செல்லும்போது கவிதையில் இருந்து உருவிய வரியைப் போல் ஒரு கொலுசு மண்ணில் விழுந்து கிடக்கிறது. அதை எடுத்து ரசித்துப் பார்க்கிறாள் அவள் பின் அங்கிருக்கிற தண்ணீரில் எறிந்து விடுகிறாள்.

    தன் காதலிக்கு கொலுசைப் போட்டு அழகு பார்க்க வேண்டும் என்று அவருக்கு ஆசையாக இருக்கிறது. பெண்களின் நகைகளைப் பற்றி ஒன்றும் அறியாத இந்த காதலரோ வாழ்க்கையில் முதல் முதலாக ஒரு கொலுசுக் கடைக்குள் நுழைகிறார். அங்கே ஒரு 20 வயது நிரம்பிய இளைஞன் தனது பரிசுக் கோப்பையை விற்பதற்காக வருகிறான். அவன் நிலையைப் பார்த்து கதாநாயகன் கவலைப் பட்டாலும், யதார்த்த வாழ்க்கையுடன் சேர்ந்து நகர்ந்து போய் விடுகிறார். இந்தக் கதையைப் படித்தது நாம் எல்லோரும் இந்த மாதிரிதானோ என்று தோன்றியது.

    ‘ எண்கள் தேவையற்ற உரையாடல்கள்’-
    ஜான்சிக்கு, உடன் வேலை பார்க்கும்
    கல்யாணம் ஆகி குழந்தை குட்டிகளுடன் இருக்கும் சோமுவின் மீது காதல் வருகிறது. காதல்னா அப்படியாப்பட்ட காதல்! (ஒருவருக்கொருவர் நிகழும் மன உரையாடல்களுக்கு எண்கள் தேவையா என்று அவள் நினைப்பது உண்டு)
    வேறு யாரையும் கல்யாணம் பண்ணிக் கொள்ள மறுக்கிறாள். ஒரு கட்டத்தில் மனம் மாறி திருமணம் செய்து கொள்கிறாள். திருமணப் பத்திரிக்கை கொடுப்பதற்காக அவர் வீட்டிற்கு சென்ற போது எதிர்பாராத விதமாக அவருக்கு முத்தம் கொடுத்து விடுகிறாள். சோமுவோட போன் நம்பர் கூட அவகிட்ட இருக்காது. அவர் இறந்துவிட்டதைப் பேப்பரில் பார்த்து தெரிந்து கொண்டு அவர் வீட்டுக்கு செல்கிறாள். கண்ணாடிப் பேழையில் சோமு வைக்கப்பட்டிருக்கிறார். அவர் தன்னை ‘ ஜான்சி’ என்று பாசமுடன் அழைக்க வேண்டும் என்று நினைக்கிறாள். கண்ணாடிப் பேழையில் மீண்டும் ஒரு முத்தம் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறாள். ஆனால் முடியவில்லை. கதறி அழுகிறாள். அந்த நேரத்தில் அவள் போன் கத்துகிறது. சோமுவின் போன் நம்பரை தன்னுடையபோனில் சேமித்து வைத்திருக்க
    வேண்டும் என்றுஅவள் நினைப்பதோடு கதை முடிகிறது.

    ‘யாரும்இழுக்காமல் தானாக’ - நீலாவின் அப்பா ஜெமினி கணேசன் போல் இருக்கிறார். ஒரே நாள் காரணம் எதுவும் சொல்லாமல் இன்னொரு பெண்ணுடன் குடித்தனம் நடத்த்ப் போய்விடுகிறார். அவர் எங்கே இருக்கிறார் என்று யாருக்குமே தெரியாது. நீலா ஒருவனைக் காதலிக்கிறாள். அவள் கனவில் அப்பா வருகிறார். யாரும் இழுக்காம தானாக நடந்து வருகின்ற தேர் ஒன்று அவள் கனவில் வருகிறது. அம்மாவும், பெரியப்பாவும் பேசிக் கொண்டே ஒன்றாக நடந்து வருகிறார்கள்.

    ‘ஒருத்தருக்குஒருத்தர்’ அழகான கதை. கிராமத்தில் பள்ளிதில் உடன் படித்தவர்களின், அவர்கள் பெற்றோர்களின் வாழ்க்கைக் கதை.
    கல்யாணமாகிய சிறிது நாளிலேயே கணவனைப் பறி கொடுத்த குஞ்சம்மா மறுமணம் செய்து கொள்கிறாள். ஊர் ஒரு மாதிரிப் பேசுகிறது. ஆனால் இக்கதையின் நாயகனுக்கு அது தவறாகத் தெரியவில்லை.

    ReplyDelete